1 1/2 லட்சம் பேர் எழுதிய முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு அடுத்த மாதம் முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு


ஒன்றரை லட்சம் பேர் எழுதிய முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1) உள்பட 2,895 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மே மாதம் 27-ந் தேதி போட்டித்தேர்வை நடத்தியது.

தமிழகம் முழுவதும் 11/2 லட்சம் முதுநிலை பட்டதாரிகள் தேர்வு எழுதினார்கள். தேர்வு எழுதிய அனைவருக்கும் விடைத்தாள் நகல் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கேள்விகளுக்கான தற்காலிக விடைகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

தேர்வு நடந்து முடிந்து 2 மாதங்கள் ஆகிவிட்டதால், முடிவு எப்போது வெளியிடப்படும்? என்று தேர்வு எழுதியவர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில், தேர்வு முடிவு நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

ஆனால், தேர்வு முடிவை வெளியிட்டது குறித்து எந்த பத்திரிகைகளுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவிக்கவில்லை. இதனால், தேர்வு எழுதியவர்கள் காலதாமதமாகவே தேர்வு முடிவுகளை அறிய முடிந்தது. தேர்வில் ஒரே கட் ஆப் மார்க் எடுத்தவர்களும் தேர்வுசெய்யப்பட்டு இருக்கிறார்கள்.

தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தபால் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.

தற்போது, நடத்தப்பட்ட போட்டித்தேர்வில் மொத்த மதிப்பெண் 150 ஆகும். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி, ஆசிரியர் பணி அனுபவம் ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும்.

சிறப்பு மதிப்பெண் 

சீனியாரிட்டி, பணி அனுபவம் ஆகியவற்றுக்கு கால அளவுக்கு ஏற்ப குறிப்பிட்ட மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

சீனியாரிட்டி

1 முதல் 3 ஆண்டுகள் வரை - 1 மார்க்

3 முதல் 5 ஆண்டுகள் வரை - 2 மார்க்

5 முதல் 10 ஆண்டுகள் வரை - 3 மார்க்

10 ஆண்டுக்கு மேல் - 4 மார்க்

பணி அனுபவம்

1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை - 1 மார்க்

2 முதல் 5 ஆண்டுகள் வரை - 2 மார்க்

5 ஆண்டுகளுக்கு மேல் - 3 மார்க்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதச்சம்பளம் ஏறத்தாழ ரூ.25 ஆயிரம் கிடைக்கும். சென்னை மற்றும் அதைச்சுற்றியுள்ள நகர எல்லையில் பணியாற்றினால் ரூ.27 ஆயிரம் பெறலாம். உயர்கல்வித்தகுதிக்கு இன்கிரிமென்ட் வழங்கப்படும். எம்.பில். முடித்திருந்தால் இரண்டு இன்கிரிமென்ட் (அதாவது ரூ.1,395). அதோடு சேர்த்து எம்.எட். பட்டம் பெற்றிருந்தால் மேலும் 2 இன்கிரிமென்டுகள் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது

Comments