10-வது, பிளஸ்-2 தேர்வில் அனைவரையும் தேர்ச்சி பெறவைக்க புதிய கையேடு அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்க அதிகாரிகள் ஏற்பாடு


எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவரையும் தேர்ச்சி பெறவைக்க புதிய கையேட்டை பாடவாரியாக அரசு தயாரித்துள்ளது. அவை விரைவில் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் கடந்த வருடம் 61/2 லட்சம் மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வையும், 9 லட்சம் மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வையும் எழுதினார்கள். இதில் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் 70 சதவீதத்தினர். அரசு பள்ளிகளில் படித்தவர்கள் கடந்த பொதுத்தேர்வில் 86.5 சதவீத தேர்ச்சி பெற்றனர்.

அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை 100 சதவீதமாக உயர்த்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு உள்ளனர். இதுதொடர்பாக ஆலோசித்து எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு ஒரு சிறப்பு கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கும், பிளஸ்-2 மாணவர்களுக்கு ஆங்கிலம், கணக்கு, வேதியியல், இயற்பியல், உயிரியியல், அக்கவுண்டன்சி, வணிகவியல் ஆகிய 7 பாடங்களுக்கும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கையேட்டினை மாணவர்கள் படித்தால், அந்தந்த பாடத்தில் தேர்ச்சி பெறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கையேட்டில் கடந்த சில வருடங்கள் பொதுத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் உள்ளன. மேலும் கேள்விகளுக்கு பதிலும் உள்ளன. இந்த கையேடுக்கு, `அனைவரையும் தேர்ச்சி பெறவைக்கும் கையேடு' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கையேட்டில் உள்ளதை சி.டி. வடிவில் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்ப உள்ளனர். அதை காப்பி எடுத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது.

இதற்கிடையே ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ச்சி குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அழைத்து அவர்களுக்கு தக்க அறிவுரை, ஆலோசனை வழங்குவதற்கான கூட்டம் நேற்று சென்னை டி.பி.ஐ.யில் நடந்தது. பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா தலைமை தாங்கினார்.

இதில் பள்ளிக்கல்வி இயக்குனர் ப.மணி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி இயக்குனர் கு.தேவராஜன், மத்திய அரசின் இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் இளங்கோவன், இணை இயக்குனர்கள் நரேஷ், லதா, குறைந்த தேர்ச்சி பெற்ற தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment