தையல், ஓவியம், இசை பாடங்களுக்கான அரசு தொழில் நுட்பத் தேர்வுக்கு 1-ந் தேதி முதல் விண்ணப்பம் அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவிப்பு


தையல், ஓவியம், இசை, நடனம், அச்சுக்கலை, விவசாயம், கைத்தறி ஆகிய பாடங்களுக்கான தொழில்நுட்ப தேர்வு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் வருகிற 1-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை வழங்கப்படுகின்றன.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தையல், ஓவியம், இசை, நடனம், அச்சுக்கலை, விவசாயம், கைத்தறி ஆகிய பாடங்களுக்கான தொழில்நுட்ப தேர்வுகள் வருகிற நவம்பர் மாதம் நடத்தப்பட உள்ளன. இதற்கான விண்ணப்ப படிவங்கள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந் முதல் 24-ந்தேதி வரை வழங்கப்படும்.

சென்னையில் உள்ள தேர்வுத்துறை தலைமை அலுவலகம், வெவ்வேறு இடங்களில் உள்ள மண்டல துணை இயக்குனர் அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் ஆகிய இடங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். தபால் மூலமாக விண்ணப்பம் பெற விரும்புவோர் குறிப்பிட்ட அலுவலகத்திற்கு ரூ.15 மதிப்புள்ள ஸ்டாம்பு ஒட்டிய, சுயமுகவரி எழுதப்பட்ட தபால் உறையுடன் கோரிக்கை கடிதம் அனுப்பி பெறலாம்.

ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுகள் மேல்நிலை (ஹையர் கிரேடு), கீழ்நிலை (லோயர் கிரேடு) என 2 நிலைகளில் நடத்தப்படும். கீழ்நிலை தேர்வு எழுத குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி அவசியம். மேல்நிலைக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி வேண்டும். அல்லது சம்பந்தப்பட்ட பாடத்தில் கீழ்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பிட்ட தேர்வுக்கட்டணத்தை கருவூல செலான் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும். டிமாண்ட் டிராப்ட் மூலமாக செலுத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அரசு தேர்வுகள் இயக்கக கூடுதல் செயலாளருக்கு (தொழில்நுட்ப தேர்வு) ஆகஸ்டு மாதம் 24-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அதன்பிறகு வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்

Comments