என்ஜினீயரிங் கல்வியில் சேருவதற்கு தகுதி மதிப்பெண்ணை ஏ.ஐ.சி.டி.இ. நிர்ணயித்தது செல்லும் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவு


என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு தகுதியான மதிப்பெண்ணை நிர்ணயித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான கல்வித் தகுதியை மறுநிர்ணயம் செய்து 2011-2012-ம் ஆண்டில் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ.) உத்தரவு பிறப்பித்தது. அதன்படி பிளஸ்-2வில், பொதுப் பிரிவு மாணவர்கள் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்ணும், இடஒதுக்கீட்டைப் பெறும் தகுதியுடைய பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.


இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அதில், தமிழக அரசு கடந்த 14.6.10 அன்று உத்தரவு ஒன்றை பிறப்பித்து, பொதுப் பிரிவு மாணவர்கள் 50 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 45 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 40 சதவீதமும், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் 35 சதவீதமும் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றிருந்தால் என்ஜினீயரிங் கல்லூரியில் சேரலாம் என்று கூறப்பட்டு உள்ளது.

அதன் அடிப்படையில்தான் தமிழகத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே ஏ.ஐ.சி.டி.இ. உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து ஏ.ஐ.சி.டி.இ. யின் உத்தரவுக்கு ஐகோர்ட்டு 30.6.11 அன்று இடைக்காலத் தடை விதித்தது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில நாட்களுக்குள் 4.7.11 அன்று புதிய உத்தரவை ஏ.ஐ.சி.டி.இ. பிறப்பித்தது. அந்த உத்தரவின்படி, பொதுப்பிரிவு மாணவர்கள் 45 சதவீதமும், இடஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்கள் 40 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

எனவே இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மற்றொரு வழக்கை தொடர்ந்தது. மாணவர் சேர்க்கை, வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என்று 30.8.11 அன்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

என்ஜினீயரிங் சேர்க்கைக்கான மதிப்பெண் தகுதியை அரசு குறைத்தால், கல்வித் தரமும் குறைந்துவிடும். மதிப்பெண் தகுதியை குறைப்பதன் மூலம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் காலியிடங்களை வேண்டுமானால் நிரப்பிக் கொள்ளலாம்.

இதனால் அந்தக் கல்லூரிகளுக்குத்தான் பலன் கிடைக்குமே தவிர, உண்மையிலேயே பின்தங்கிய சமுதாயத்தினருக்கு எந்த பலனையும் தராது. எனவே அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மதிப்பெண்ணை நிர்ணயம் செய்து ஏ.ஐ.சி.டி.இ. பிறப்பித்த உத்தரவு செல்லும்

No comments:

Post a Comment