பள்ளி பஸ்களை கட்டுப்படுத்தும் புதிய வரைவு விதிகளை அடுத்தமாதம் 3-ந் தேதி தாக்கல் செய்தாக வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதுபள்ளி பஸ்களை கட்டுப்படுத்தும் புதிய வரைவு விதிகளை அடுத்தமாதம் 3-ந் தேதி தாக்கல் செய்தாக வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.மாணவ-மாணவிகளை ஏற்றிச் செல்லும் பள்ளி பஸ்களை கட்டுப்படுத்துவதற்காக புதிய வரைவு விதிகளை அடுத்த மாதம் செப்டம்பர் 3-ந் தேதி கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.சென்னை தாம்பரத்தை அடுத்த சேலைïர் இந்திரா நகரில் உள்ள சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுருதி (வயது 6) என்ற மாணவி 2-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த மாதம் பள்ளியில் இருந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில், தாம்பரம் முடிச்சூர் சாலையில் செல்லும்போது பஸ்சின் தரைப்பகுதியில் இருந்த ஓட்டை வழியாக சாலையில் விழுந்து, உடல் நசுங்கி உயிரிழந்தாள்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, இந்த சம்பவத்தை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் தன்னிச்சை (சூ-மோட்டோ) வழக்காக எடுத்து விசாரிக்கின்றனர்.கடந்த மாதம் ஜுலை 27-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, `தமிழக அரசு வகுத்துள்ள தமிழ்நாடு மோட்டார் வாகன விதிமுறைகளில், பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகன பராமரிப்பு, தகுதி போன்றவற்றை நிர்ணயிப்பதற்கான பிரிவுகள் இல்லை. எனவே, புதிய விதிகளை அரசு உருவாக்க வேண்டும். விதிகளை மீறுவோர்களை தண்டிக்கவும், பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும், பள்ளி பஸ்களுக்கு தகுதிச் சான்றிதழ் கொடுப்பதற்கும் புதிய விதிகளில் வழிவகைகள் செய்யப்பட வேண்டும். அதற்காக வரைவு விதிகளை கோர்ட்டில் அரசு தாக்கல் செய்ய வேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்த நிலையில், தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி ஏ.ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு 23-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் அரசுப் பிளீடர் வெங்கடேஷ் ஆஜரானார். புதிய விதிகள் தொடர்பான வரைவு அறிக்கை தயாராக இருக்கிறது என்றும் அதை இன்னும் சில நாட்களில் அமைச்சரவையின் முன் ஒப்புதலுக்காக வைக்கப்பட உள்ளது என்றும் கூறினார்.மேலும், இதற்கு கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அரசுப் பிளீடர் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை 29-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்த நிலையில், நேற்று இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி ஏ.ஆறுமுகசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜரானார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

அட்வகேட் ஜெனரல்:- புதிய வரைவு விதிகளை தாக்கல் செய்வதற்கு இன்னும் கொஞ்ச கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே அரசுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும்.

தலைமை நீதிபதி:- கடந்த 10-ந் தேதியன்றே வரைவு விதி தொடர்பான உத்தரவை பிறப்பித்துவிட்டோம். ஏன் இந்த விஷயத்தில் நீங்களும் அரசும் முக்கியத்துவம் காட்டுவதில்லை? மற்ற பிரச்சினைகளுக்காக அமைச்சரவையின் ஒப்புதலைப் உடனடியாகப் பெறும் அரசு, இதிலும் முக்கியத்துவம் காட்டலாமே.

அட்வகேட் ஜெனரல்:- இந்த பிரச்சினையில் அரசு அக்கரை காட்டுகிறது. அதுவும் இது போன்ற பிரச்சினைகளுக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது.

வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ்:- சுருதி பிரச்சினையை ஐகோர்ட்டு கையில் எடுத்த பிறகு, மேலும் 5 விபத்து சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் 5 குழந்தைகள் பலியாகிவிட்டனர். எனவே இதில் துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்த முக்கியமான பிரச்சினைக்கான வரைவு விதிகளை தாக்கல் செய்வதாக அரசு சார்பில் உத்தரவாதம் அளித்தும் அதை நிறைவேற்றாமல், இதுவரை அதை தாக்கல் செய்யாமல், மேலும் கால அவகாசம் கேட்பது துரதிருஷ்டவசமாகும்.

அந்த வரைவு விதிகளுக்கு அமைச்சரவையின் ஒப்புதலை பெறவேண்டும் என்று கடந்த 2 வாய்தாக்களில் கால அவகாசம் கோரப்பட்டது. அதற்கான அனுமதியையும் அளிக்கப்பட்டது.இந்த நிலையில், சுருதி சம்பவத்துக்குப் பிறகு தமிழகத்தில் மேலும் நடந்த விபத்து சம்பவங்களில் 5 பள்ளிக்குழந்தைகள் பலியாகியதாக எங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.எனவே, இதற்கான வரைவு விதிகளை சமர்ப்பிப்பதற்கு இதுதான் சரியான நேரம். வழக்கை செப்டம்பர் 3-ந் தேதிக்கு தள்ளி வைக்கிறோம். அன்று வரைவு விதிகளை அரசு கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment