மதிப்பீட்டில் மதிப்பெண் அதிகரித்தால் "ரேங்க்'கிற்கு எடுத்துக்கொள்ள முடியாது : தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு.


பிளஸ் 2 மறு மதிப்பீட்டிற்குப் பின், 1,187 மதிப்பெண்கள் எடுத்தபோதும், தமிழக அரசிடம் பரிசைப் பெற முடியாமல், மாணவி ஏமாற்றம் அடைந்தார். சென்னை, ஆதம்பாக்கம் எஸ்.டி.ஏ.வி., மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த
பிளஸ் 2 மாணவி ஸ்ரீஐஸ்வர்யா, முதலில் பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகக் கணிதம் ஆகிய மூன்று பாடங்களில், 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்தார். சமஸ்கிருதம் பாடத்தில் 198 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 189 மதிப்பெண்களும் பெற்றார். வணிகவியல் பாடத்தில், 186 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்தன.இந்தப் பாடத்தில், மறு மதிப்பீடு கோரி ஐஸ்வர்யா விண்ணப்பித்தார். அதில், கூடுதலாக, 14 மதிப்பெண்கள் கிடைக்கவே, வணிகவியலிலும் 200க்கு 200 பெற்றார். இதனால், மொத்த மதிப்பெண்கள் 1,187ஆக உயர்ந்தது. இவ்வளவு மதிப்பெண்கள் குவித்தபோதும், அரசிடம் இருந்து பரிசு எதையும் பெற முடியவில்லையே என, மாணவி ஏமாற்றம் அடைந்தார். மாநில அளவில், 1,189 மதிப்பெண்கள் பெற்ற நாமக்கல் மாணவி சுஷ்மிதா முதலிடம் பிடித்தார்.இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா கூறியதாவது: தமிழை முதற்பாடமாக எடுத்துப் படித்து, ஏதாவது ஒரு பாடத்தில் மறு கூட்டலில் மதிப்பெண்கள் அதிகரித்தால் மட்டுமே, அது, "ரேங்க்' கணக்கிற்கு எடுத்துக்கொள்ளப்படும். ஏனெனில், மறு கூட்டலில் நடக்கும் தவறுக்கு, ஆசிரியர் காரணம். மறு மதிப்பீட்டின் கீழ், அதிக மதிப்பெண்கள் கிடைத்தால், அது, "ரேங்க்' கணக்கிற்கு எடுத்துக் கொள்வதில்லை. மறு மதிப்பீடு என்பது, ஒவ்வொரு ஆசிரியருக்கு தகுந்தார்போல் மதிப்பெண்கள் கூடவும் செய்யலாம்; குறையவும் செய்யலாம். எனவே, அதை கணக்கில் கொள்ள முடியாது. இது, தமிழை முதற்பாடமாகக் கொண்ட மாணவர்களுக்கும் பொருந்தும். இவ்வாறு கூறினார்.

Comments