Wednesday, September 12, 2012

நடப்பு கல்வியாண்டில் 11-ம் வகுப்பு படிக்கும் 6.31 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கி முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

நடப்பு கல்வியாண்டில் ரூ.196 கோடி செலவில், 6 லட்சத்து 31 ஆயிரத்து 279 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமுதாயங்களை சார்ந்த மாணவிகள் அனைவருக்கும் சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2001-2002-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். பின்பு 2005-2006-ம் ஆண்டில் மாணவர்களுக்கும் இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரிவுபடுத்தினார்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் அனைத்துப்பிரிவு மாணவ, மாணவியர்களுக்கும் சைக்கிள்கள் இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு மாணவ, மாணவியர் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர்.

கடந்த 2011-2012-ம் கல்வியாண்டில் ரூ.179 கோடியே 21 லட்சம் செலவில் 2,77,788 மாணவர்களுக்கும், 3,44,380 மாணவிகளுக்கும் என மொத்தம் 6,22,168 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. அதேபோன்று, நடப்பு கல்வியாண்டில் ரூ.196 கோடியே 10 லட்சம் செலவில் 2,81,861 மாணவர்களுக்கும், 3,49,418 மாணவிகளுக்கும் என மொத்தம் 6,31,279 மாணவ, மாணவியர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன.

அதன்படி, இந்த கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில் நடந்த விழாவில், மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கி தொடங்கி வைத்தார். சைக்கிள்களை பெற்றுக்கொண்ட மாணவ, மாணவிகள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

மேலும், 2012-ம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கி வாழ்த்தினார். 93 மாணவ, மாணவிகளுக்கு ரூ.18 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், தலைமைச்செயலாளர், பள்ளி கல்வித்துறை முதன்மைச்செயலாளர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைச் செயலாளர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment