KALVISOLAI TNPSC

Tuesday, 25 September 2012

டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்திற்கு ரூ.19 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய 6 மாடி கட்டிடத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா 27-ந்தேதி (வியாழக்கிழமை) திறந்து வைக்கிறார்.

டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு பணிக்கு தேவைப்படும் ஊழியர்களையும் அதிகாரிகளையும் போட்டித்தேர்வு நடத்தி தேர்வுசெய்து வருகிறது. முன்பு சென்னை அண்ணா சாலை ஓமந்தூரர் தோட்டத்தில் (புதிய தலைமை செயலக கட்டிடம் உள்ள இடம்) இயங்கி வந்தது.

இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில், புதிய தலைமை செயலகத்திற்காக தற்போதைய கிரீம்ஸ் சாலைக்கு மாற்றப்பட்டது. அங்குள்ள வணிகவரிகள் அலுவலக கட்டிடத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது. பாரிமுனை அரசு மருத்துவக்கல்லூரி அருகே டி.என்.பி.எஸ்.சி.க்கு சொந்தமாக கட்டிடம் கட்டுவதற்கு முன்பே முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, ரூ.19 கோடி செலவில் 6 மாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டிடத்தின் திறப்புவிழா 28-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11.30 மணிக்கு நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்துவைக்கிறார். விழாவில், அமைச்சர்கள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ், செயலாளர் டி.உதயச்சந்திரன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜெயகாந்தன், ஊழியர்கள் கலந்துகொள்கிறார்கள்.

6 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில், வீடியோ கான்பரன்சிங் வசதியுடன் கூடிய கூட்டரங்கு, மாநாட்டுக்கூடம், டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள், தலைவர், செயலாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோருக்கு தனித்தனி அறைகள், வெவ்வேறு பிரிவுகளுக்கும் தனி அறைகள் போன்றவை இடம்பெற்றுள்ளன.

அரசு பணிக்கான உச்ச வயது வரம்பு குஜராத், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் 40 வயது என்று உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் வயது வரம்பை அதிகரிக்க அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. இதுதொடர்பான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. புதிய கட்டிட திறப்புவிழாவின்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிடுவார் என்று போட்டித்தேர்வுகளுக்கு படித்து வரும் இளைஞர்களும், இளம்பெண்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

No comments:

Post a comment