மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் 80 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்று சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி 7 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க, நேற்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 65 சதவீதம் அகவிலைப்படி பெற்று வருகிறார்கள். இனிமேல் அவர்கள் 72 சதவீதம் அகவிலைப்படி பெறுவார்கள்.இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் 50 லட்சம் பேரும், ஓய்வு ஊதியம் (பென்ஷன்) பெறுவோர் 30 லட்சம் பேரும் பயன் அடைவார்கள்.

கடந்த ஆண்டு (2011) மார்ச் மாதம் இதேபோல் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்த உயர்வு கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல்தான் அமலுக்கு வந்தது.நேற்று அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு கடந்த ஜுலை மாதம் 1-ந் தேதி முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும். அன்று முதல் ஊழியர்கள் நிலுவைத்தொகையையும் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் மத்திய அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.7 ஆயிரத்து 400 கோடி கூடுதல் செலவு ஏற்படும். நடப்பு நிதி ஆண்டில் ஜுலை மாதம் முதல் பிப்ரவரி மாதம் முடிய 8 மாத காலத்துக்கு மட்டும் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும்.

No comments:

Post a Comment