மாணவர் நலன் கெடாமல் பாதுகாப்போம்: அண்ணாமலை பல்கலை பதிவாளர் உறுதி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என்றைக்கும் மாணவர் நலனில் அக்கறை காட்டி வருகிறது. கூடிய விரைவில் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டு, மாணவர்கள் நலன் கெடாமல் பாதுகாப்போம் என்று உறுதி அளிக்கிறோம் என பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது: கடந்த நவ.7-ம் தேதி பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்ட நிதிசிக்கலை பற்றி துணைவேந்தர், அனைத்து ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசினார். 6-வது ஊதியக்கமிஷன் பரிந்துரைப்படியும், ஒரு நபர் குழு பரிந்துரைப்படியும் மற்றும் 32 மாதங்களுக்கு உள்ள நிலுவைத் தொகையும் 2009லிருந்து மூன்று வருடங்களில் அளிக்கப்பட்டுள்ளது. 2009ல் இருந்து ஒவ்வொரு ஆசிரிய, ஊழியரின் சம்பளமும் 35 விழுக்காடு உயர்ந்துள்ளது. மேலும் 2009ல் அளித்து வந்த 23 விழுக்காடு அகவிலைப்படி தற்போது 72 விழுக்காடாக உயர்ந்துள்ளது. 2009க்கும் பிறக ஒய்வு பெறுபவர்களுக்கு புதிய விகிதத்தில் கிராஜூட்டி, கம்யூட்டேஷன், என்கேஸ்மெண்ட் ஆஃப் யேர்ன் லீவ் அளிக்கும் போது, அது முன்பை விட 3.5 மடங்கு அதிகமாகி விட்டது.

அதுவுமல்லாமல் 2006 லிருந்து 2009-க்குள் ஓய்வு பெற்றவர்களுக்கும் விடுபட்ட நிலுவைத்தொகை ஏறத்தாழ 3 மடங்கு சுமார் 151 நபர்களுக்கு கொடுக்க வேண்டியதாயிற்று, ஓய்வூதியமும் 30 விழுக்காடு அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் சம்பளச் செலவினங்களை அளவிட முடியாத அளவிற்கு உயர்ந்து விட்டது. அதே சமயத்தில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தும், கல்வி மற்றும் மற்ற கட்டணங்களை உயர்த்திய போது செலவினங்கள் உயர்ந்த அளவிற்கு அவை உயரவில்லை. இந்த நிலைமையை சீர் செய்வதற்கு சிறுது காலத்திற்கு தற்காலிக சம்பள குறைப்பும், விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆட்குறைப்பும் செய்யலாமா? என்று ஆலோசனை கேட்டதற்கு, ஆட்குறைப்போ, சம்பள குறைப்போ ஒத்துக்கொள்ள முடியாது என கூறிவிட்டனர். எனவே அவர்களது கருத்துகளை இன்று நடைபெறும் ஆட்சி மன்றக்கூட்டத்தில் வைத்து முடிவு எடுக்கப்படும் என துணைவேந்தரால் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் ஆட்குறைப்போ, ஊதியக்குறைப்போ இல்லை என எழுத்து மூலம் நவ.,14க்குள் உத்தரவாதம் அளிக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என ஆசிரியர், ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மூலம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆட்குறைப்பு இருக்காது என்று துணைவேந்தரே உத்தரவாதம் அளித்தும், சம்பளம் பற்றி ஆட்சிமன்ற குழுவில் தான் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பருவகால வகுப்புகள் முடிந்து, தீபாவளி விடுமுறைக்கு சென்றுள்ள மாணவர்கள் தேர்விற்கு வரும் போது (சிலருக்கு study holidays, சிலருக்கு செய்முறை தேர்வு, நவ.,19லிருந்து எழுத்து தேர்வு)அவர்களுக்கு இடையூறுகள் ஏற்படக்கூடாது எனக்கருதி அவர்களுடைய தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே அவர்களுடைய வகுப்புகள் எதுவும் பாதிக்கப்பட்வில்லை.

மேலும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற பருவகால விடுமுறை எல்லா வருடமும் போல நவ.,14 லிருந்து நவ.,13ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த போராட்டம் அறிவிக்கப்படவில்லை என்றால் கூட அவர்கள் பருவகால விடுமுறையில் சென்று இருப்பார்கள் என பதிவாளர் ஆர்.மீனாட்சி்சுந்தரம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment