KALVISOLAI TNPSC

Tuesday, 19 February 2013

சென்னை மாவட்டத்தில் 51 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள் பிளஸ்–2 தேர்வு மையங்களை கண்காணிக்க 368 பறக்கும் படைகள் காப்பி அடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கைக்கு உத்தரவு

சென்னை மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வை 51,592 மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வு மையங்களை கண்காணிக்க 368 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

பிளஸ்–2 தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) 1–ந் தேதி தொடங்கி 27–ந் தேதி வரையும், இதேபோல், 10–ம் வகுப்பு தேர்வு மார்ச் 27–ந் தேதி முதல் ஏப்ரல் 12–ந் தேதி வரையும் நடைபெற உள்ளன. சென்னை மாவட்டத்தில் பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் (பொறுப்பு) ஆர்.சீதாலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி டி.ராஜேந்திரன், மாவட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர். பிளஸ்–2 தேர்வை 23,724 மாணவர்களும், 27,868 மாணவிகளும் ஆக மொத்தம் 51,592 பேர் 137 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் 368 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படையினர் தேர்வு மையங்களை கண்காணிப்பார்கள் என்றும், தேர்வு பணியில் 3096 தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், இதர ஆசிரியர்கள், அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும்படை உறுப்பினர்கள் ஈடுபடுவார்கள் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.

10–ம் வகுப்பு பொதுத்தேர்வை 29,101 மாணவர்களும், 29,335 மாணவிகளும் ஆக மொத்தம் 58,436 பேர் 222 மையங்களில் எழுத உள்ளனர் என்றும், தேர்வுப்பணியில் 3,874 பேர் ஈடுபட இருப்பதாகவும் கூட்டத்தில் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுத்தேர்வின்போது பிட் அடித்தல், காப்பி அடித்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவ–மாணவிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது.

இந்த தகவலை மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a comment