KALVISOLAI TNPSC

Friday, 1 March 2013

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு 10 சதவீத கூடுதல் வரி ஓராண்டுக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்கு 5 முதல் 10 சதவீதம் வரை கூடுதல் வரி உண்டு.

ஆண்டுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் செலுத்தும் வரியில் ரூ.2 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பளம் பெறும் பிரிவில் உள்ள ஏராளமானோர் உள்பட 1.8 கோடி பேர் இதனால் பயனடைவார்கள்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை மனதில் கொண்டு மக்கள் மீது பெரிய அளவில் சுமையை ஏற்றாமல், சிறிய அளவில் சலுகைகள் காட்டியுள்ள பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது.

கூடுதலாக ரூ.18 ஆயிரம் கோடி: புதிய வரி விதிப்புகள் மூலம் ரூ.18 ஆயிரம் கோடி கூடுதலாகத் திரட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி வரிகள் மூலம் ரூ.13,300 கோடியும், மறைமுக வரிகள் மூலம் ரூ.4,700 கோடியும் கிடைக்கும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

வழக்கம்போல சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. சொகுசு கார்கள், இறக்குமதி செய்யப்படும் பைக்குகள் விலை உயர உள்ளது. இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 100 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான சிறப்பு அறிவிப்புகள்: பெண்கள் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தலுக்கு ரூ.1,000 கோடியில் "நிர்பய நிதியம்' என்ற பெயரில் நிதியம் அமைக்கப்படும் என்பதும், பெண்களுக்கென்றே ரூ.1,000 கோடி முதலீட்டில் வரும் நவம்பரில் தனியாக பொதுத்துறை வங்கி அமைக்கப்படும் என்பதும் இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கான சிறப்பு அறிவிப்புகளாக உள்ளன. எனினும் இத்திட்டங்களுக்கு எவ்வாறு நிதி ஒதுக்கப்படும் என்பது குறித்து பட்ஜெட்டில் கூறப்படவில்லை.

தமிழகத்துக்கு... தூத்துக்குடியில் புதிய துறைமுக மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை - பெங்களூர் இடையே தொழிலக நெடும்பாதைத் திட்டம் ஆகியவை தமிழகத்துக்கான சிறப்பு அறிவிப்புகளாகும். இதனை ப.சிதம்பரம் அறிவித்தபோது தமிழக எம்.பி.க்கள் மேஜையைத் தட்டி வரவேற்றனர்.

மானிய ஒதுக்கீடு குறைப்பு: கடந்த பட்ஜெட்டில் ஒட்டுமொத்த மானிய ஒதுக்கீடு ரூ.2 லட்சத்து 57 ஆயிரத்து 654 கோடியாக இருந்தது. இந்த பட்ஜெட்டில் மானிய ஒதுக்கீடு ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்து 84 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறை ஒதுக்கீடு 14% அதிகரிப்பு: பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு ரூ. 2 லட்சத்து 3 ஆயிரத்து 672 கோடியாகும். இதில் 86 ஆயிரத்து 741 கோடி மூலதனச் செலவும் அடங்கும். கடந்த பட்ஜெட்டை விட இப்போது 14 சதவீதம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏசி உணவகங்களுக்கு 12 சதவீதம் சேவை வரி புதிதாக விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உயர்தர ஹோட்டல்களுக்கு செல்வோர் கூடுதலாக செலவிட வேண்டியது வரும்.

2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலையுள்ள செல்போன்களுக்கு 6 சதவீத உற்பத்தி வரி விதிக்கப்பட்டுள்ளதால், செல்போன்களின் விலை கணிசமாக உயரும்.

விவசாயிகளுக்கு நற்செய்தி: முன்பு எப்போதும் இல்லாத அளவாக வேளாண் கடன் இலக்கு ரூ.7 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இது ரூ.1.25 லட்சம் கோடி அதிகமாகும். உரிய முறையில் கடனைத் திருப்பிச் செலுத்தும் போது தனியார் வங்கிகளிலும் விவசாயக் கடன்களுக்கு வட்டிச் சலுகை பெற முடியும் என்பது விவசாயிகளுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது.

மாற்றமில்லா வரி விகிதம்: 12 சதவீதமாக உள்ள அடிப்படை சுங்க வரி, கலால் வரி மற்றும் சேவை வரி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து வரும் ஆண்கள் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள நகைகள், பெண்கள் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொண்டு வருவதற்கும் சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.25 லட்சம் வரை முதல்முறையாக வீட்டுவசதிக் கடன் பெறுபவர்கள் செலுத்தும் வட்டியில் ரூ.1 லட்சம் வரை வருமான வரிச் சலுகை பெற பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ரூ.50 லட்சத்துக்கு மேல் உள்ள அசையாத சொத்துகள் விற்பனை செய்யப்படும்போது 1 சதவீதம் கூடுதலாக வரிப்பிடித்தம் செய்யப்படும்.

ரத்தினக் கற்கள் மீதான சுங்க வரி 10 சதவிகிதத்தில் இருந்து 2 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ரத்தினக் கற்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. ஆயத்த ஆடைகள் மீதான தீர்வை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஆயத்த ஆடைகள் மீது 10 சதவீத வரி விதிக்கப்பட்டது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு ரூ.33 ஆயிரம் கோடி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.17,700 கோடி, குடிநீர் சுகாதாரத் திட்டங்களுக்கு ரூ.15,260 கோடி, அனைத்துப் பொதுத்துறை வங்கிக் கிளைகளிலும் ஏடிஎம் வசதி, ஜவுளித்துறையை நவீனப்படுத்த ரூ.2400 கோடி, அனைத்து வரி செலுத்துவோருக்கும் கல்வி வரி 3 சதவீதமாகத் தொடரும் என்பது உள்ளிட்டவை பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாகும்.


2013-2014 பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்

* வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை.

* ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் பெறுவோருக்கு 10 சதவீதம் கூடுதல் வரி.

* ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ.2,000 வரிச்சலுகை.

* சிகரெட், புகையிலை பொருள்களுக்கு 18%, செல்போன்களுக்கு 6% கூடுதல் வரி.

* முதல் முறையாக ரூ. 25 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறுவோருக்கு கூடுதலாக ரூ. 1 லட்சம் வரிவிலக்கு.

* கல்வித் துறைக்கு ரூ. 65,867 கோடி.

* புதிய வரி விதிப்புகள் மூலம் ரூ. 18,000 கோடி திரட்ட முடிவு

* ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.17,700 கோடி.

* 10,000 பேருக்கு மேல் வசிக்கும் கிராமங்களில் எல்.ஐ.சி. கிளை

* 2014-க்குள் அனைத்து வங்கிகளிலும் ஏடிஎம் வசதி.

* ஊரக மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ரூ. 80,194 கோடி.

* ரூ.7 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு


விலை அதிகரிக்கும் பொருள்கள்

* ரூ. 2,000-க்கு அதிகமான விலையுள்ள செல்போன்கள்

* ரூ.21 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார்கள், இறக்குமதி செய்யப்படும் கார்கள்.

* 800 சி.சி.க்கு மேல் உள்ள இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள்.

* சொகுசு கப்பல்கள், விசைப் படகுகள்

* ஏ.சி. வசதியுள்ள உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப்பண்டங்கள்.

* வாகன நிறுத்தத்துக்கான கட்டணம்

* 2 ஆயிரம் சதுர அடி பரப்பு அல்லது ரூ. 1 கோடி மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள தனி வீடு, அடுக்குமாடி வீடு.

* ரூ.50 லட்சம் மதிப்புக்கும் மேலான அசையா சொத்துகள்.

* தரையில் பதிக்கப்படும் மார்பிள் கல்.

* இறக்குமதி செய்யப்பட்ட மூலப் பொருள்களால் தயாரிக்கப்படும் பட்டுத் துணி வகைகள்.

* தொலைக்காட்சிப் பெட்டிக்கான செட்டாப் பாக்ஸ்கள்.

விலை குறையும் பொருள்கள் கட்டணம்.

* பிராண்ட் சின்னம் உடைய ஆடைகள்.

* விலைமதிப்புமிக்க கற்கள்

* மரவள்ளிக்கிழங்கு, ஜவ்வரிசி

* ஓட்ஸ் தானியம்.

* லாரி சேஸிஸ்.

No comments:

Post a comment