KALVISOLAI TNPSC

Wednesday, 17 July 2013

உத்தரகாண்ட் பேரழிவு மீட்பு பணியில் முத்திரை பதித்த சமோலி மாவட்ட கலெக்டர் முருகேசன்

சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் இந்திய மக்களின் இதயங்களை உலுக்கியதோடு உலக நாடுகளையும் அனுதாபப்பட வைத்தது. கங்கை நதிக்கரையில் சிவனையும், பத்ரிநாத் விஷ்ணுவையும் தரிசிக்க சென்ற ஆயிரக்கணக்கான உயிர்கள் மண்ணுக்குள் உயிரோடு புதைந்த அந்த ஜூன் 15ம்தேதி இந்திய சுற்றுலா வரலாற்றில் ஒரு கறுப்பு நாள். இயற்கை சில நேரம் மண்ணுக்கும், மனித உயிர்களுக்கும் ஏற்படுத்தும் இழப்பு என்றுமே ஈடு செய்ய முடியாத ஒன்றாகி விடுகிறது. இது போன்ற நேரங்களில் உயிருக்கு போராடுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது மனிதநேயமிக்க செயலாகும்.

அந்த வகையில் உத்தரகாண்ட் கோரத்திலிருந்து மீண்டு வந்த பல்லாயிரம் பேர் உச்சரித்த பெயர் முருகேசன். பத்ரிநாத், கேதார்நாத் கோயில்கள் அமைந்துள்ள சமோலி மாவட்ட கலெக்டர்தான் இந்த முருகேசன். மீட்பு பணிகளை முடுக்கிவிட்டு ஆயிரக்கணக்கான உயிரை காப்பாற்றிய 35 வயது இளைஞரான முருகேசன் ஒரு தமிழர். சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த செலவடை என்னும் குக்கிராமத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதாக சொந்த கிராமத்துக்கு வந்த முருகேசன், உலகை உலுக்கிய உத்தரகாண்ட் பேரழிவு குறித்து தினகரனுக்கு அளித்த சிறப்பு பேட்டி:பத்ரிநாத், கேதார்நாத்தில் இந்துக்கள் வழிபடும் சிவன், விஷ்ணு கோயில்களை போல, சீக்கியர்கள் வழிபடும் கேம்குன்சாகிம் கோயிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. இயற்கை சீற்றங்களுக்கு இங்கே எப்போதும் குறைவில்லை.

இப்படிப்பட்ட நிலையில்தான் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி, இரவு அந்த கோரச்சம்பவம் நடந்தது. நான் கலெக்டராக பொறுப்பேற்ற ஒரு ஆண்டு காலத்தில் நான் சந்தித்த மிகப்பெரிய சவாலான பணி இதுதான். கடும்புயல் மழை காரணமாக 15, 16ம் தேதிகளில் பேரிழிவு பகுதிக்கு செல்லவே முடியவில்லை. 17ம்தேதி அதிகாலை, பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டேன்.

கேதார்நாத்தில் நிகழ்ந்திருந்த பேரழிவும், சகதியில் சிக்கி புதைந்திருந்த உடல்களும் மனதை உலுக்கியது. முதல் மூன்று நாட்கள் உணவு, உடை, சுற்றுச்சூழல் என்று எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. குடும்பம், மனைவி, குழந்தை, உறவினர்கள் குறித்த சிந்தனை இல்லை. ஆபத்தில் சிக்கிக் கொண்டவன் தமிழனா, மலையாளியா? என்ற கணக்கீடும் இல்லை. அவர்களை மீட்டு மருத்துவ முகாமிற்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. 17ம் தேதி நாங்கள் மீட்பு பணியில் ஈடுபட்ட பின்பு ஒரு உயிர் கூட பலியாகவில்லை என்பதுதான், எங்களுக்கு ஆறுதல் அளித்த விஷயம்.

இதில் ராணுவம், விமானப்படை, எல்லை பாதுகாப்பு, தன்னார்வ தொண்டு அமைப்புகள் என ஒட்டு மொத்த கூட்டு முயற்சிதான் மிக விரைவாக நிவாரண பணிகள் நடப்பதற்கு காரணமாக அமைந்தது. சிகிச்சை முடிந்து ஊருக்கு புறப்பட்டு சென்றவர்கள், என்னைப்பற்றி விசாரித்து, எனது முகாமிற்கு வந்து ‘நன்றி’ என்று சொன்ன அந்த ஒற்றை வார்த்தை இந்த உலகத்தில் எதற்கும் ஈடாகாது. என்னுடைய கலெக்டர் வாழ்க்கையில் உத்தரகாண்ட் சம்பவம் நெஞ்சில் வடுவாக பதிந்து விட்டது. 

இது போல் ஒரு சம்பவம் இனி எப்போதும் நேர கூடாது. இயற்கை சீற்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான முயற்சிகளை இப்போது துவக்கியுள்ளோம். தற்போது மீட்பு பணிகள் பெரும்பகுதி முடிவடைந்து இயல்பு நிலை ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு முருகேசன் தெரிவித்தார்.

சேலம் அருகே செலவடை கிராமத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் முருகேசன். இவரது தந்தை ஆறுமுகம் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். அம்மா லட்சுமி, சகோதரர்கள் சண்முகம், சதீஷ்குமார் என்று விவசாயம் சார்ந்த குடும்பம். 

செலவடை ஊராட்சி ஒன்றிய பள்ளி, தாரமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளிகளில் படிப்பை முடித்து மதுரையில் பிஎஸ்சி விவசாயம் படித்தார். கடந்த 2005ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பணி ஒதுக்கீடு கிடைத்தது.  அதே ஆண்டில் உத்தரகாண்ட் நைனிடால் மாவட்ட வருவாய் அலுவலராக பணியில் சேர்ந்தார். பின்னர் பல்வேறு இடங்களில் பணியாற்றி கடந்த ஓராண்டுக்கு முன் 2012 மே 6ம்தேதி சமோலி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

No comments:

Post a comment