KALVISOLAI TNPSC

Wednesday, 31 August 2016

நடக்க வேண்டும் வாழி காவேரி!

நடக்க வேண்டும் வாழி காவேரி!

உலகிலேயே முதல்தரமான காபி விளையும் இடம் குடகு மலை. இந்தக் குடகு மலை காவிரி உற்பத்தியாகும் இடத்தில் உள்ளது. குடகு மலையின் எழிலை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமைப் பகுதி குடகு மலை. குடகு மலைப் பள்ளத்தாக்கில் அற்புதமான மரங்கள். அம்மரங்களின் நிழலில் காபி பயிராகிறது. ஆங்காங்கே நெல் வயல்கள். பல்லுயிர்ப் பெருக்கம் சிதைவுறாமல் "நிழல் காபி' பயிராகும் அற்புத இயற்கை விருந்தினால் காவிரி வாழ்கிறது. இப்படிப்பட்ட பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு ஒரு ஆபத்து காத்திருக்கிறது. சுமார் 800 கி.மீ. நீளமுள்ள காவிரி 400 கி.மீ. கர்நாடகத்திலும் 400 கி.மீ. தமிழ்நாட்டிலும் ஓடுகிறது. பல உபநதிகள் காவிரியில் சங்கமிப்பதால் தமிழகத்தில் குளித்தலை தாண்டி முக்கொம்பு வரும்போது அகண்ட கடல்போல் காட்சி அளித்துச் சரிபாதி கொள்ளிடமாகப் பிரிகிறது. அப்படிப் பிரிந்தும் அகண்ட காவிரியை அனுபவிக்கும் பேறு பெற்றவர்களாக திருச்சி மக்கள் உள்ளனர். எனினும் அதில் முழுமை இல்லை. ஆடிமாதத்தில் ஆடிப்பெருக்கு விழாவைப் பதினெட்டாம் பேர் என்று தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடுவதுண்டு. அவரவர்கள் வசதிப்படி ஆறு, குளம், கடல்களில் விரதமிருந்து தலை முழுகுவார்கள். மாலையில் சப்பரம் இழுப்பார்கள். குலதெய்வக் கோவில்களுச் சென்று சாமி கும்பிடுவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதைத்து நல்ல விளைச்சல் பெற வேண்டும் என்பதே நோக்கம். அன்று காவிரியில் தண்ணீர் கரைபுரண்டோடும். போதிய அளவு நீர் நிரம்பினால்தான் மேட்டூர் அணை திறக்கப்படும். போதிய அளவுநீர் இருப்பதில்லை. ஆடிப்பெருக்கு விழாவுக்காக வழக்கம்போல் இந்த ஆண்டும் கொஞ்சம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. முடியரசர் காலத்தில் வைகாசி ஆனி மாதங்களிலேயே காவிரி கரைபுரண்டோடும். 1931-இல் கர்நாடகத்தில் மைசூர் அருகே கண்ணம்பாடி அணை கட்டி கிருஷ்ணராஜசேகரம் ஏரி நீர் நிரம்பி வழிந்தபின்னர்தான் மேட்டூர் அணை நிரம்பும். கண்ணம்பாடி அணையின் தலைக்கட்டில் காவிரியில் ஹேமாவதி சங்கமமாகிறது. கிருஷ்ணராஜசாகரம் தாண்டி வரும் காவிரியுடன் கபினியும், பின்னர் சுவர்ணவதி நதியும் கலக்கின்றன. கபினி வடகேரளத்தின் மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிக் கிழக்குநோக்கி வந்து காவிரியில் கலக்கிறது. கபினி நதியிலும் அணை கட்டப்பட்டு கர்நாடகத்திலிருந்து வரக்கூடிய காவிரி வரத்து குறைக்கப்பட்டது. வேறு பல நதிகளும் தமிழ்நாட்டில் காவிரியுடன் கலக்கின்றன. காவிரி தமிழ்நாட்டு எல்லைக்கு வரும்போது நல்ல சரிவு. ஒகனேக்கல் நீர் வீழ்ச்சியைத் தாண்டி மேட்டூருக்கு வருகிறது. மேட்டூர் தாண்டி வரும்போது பவானி ஆறு சங்கமமாகிறது. பவானி சாகர் அணையை நிரப்பிவிட்டு வழியும் நீரே காவிரியில் சங்கமமாகிறது. இவ்வாறு பல்வேறு தடுப்பு அணைகள் கட்டப்பட்டுவிட்டதால் காவிரியின் நீர்வரத்து அதிகரிப்பது என்பது குடகுமலையில் வெள்ளம் வரும் அளவுக்கு மழை பொழிந்தால் கர்நாடகத்தில் கட்டப்பட்ட அணைகள் திறக்கப்பட்டு மேட்டூர் அணையும் நிரம்பித் தடுக்க வழி இல்லாமல் திறந்துவிடப்பட்டால் காவிரி கரைபுரண்டோடும். எப்போதும் ஆடியில் வரவேண்டிய நீர் தைமாதம் வெள்ளமாக வந்து வீணாகக் கடலில் சேரும். அறுவடைக்குத் தயாராகும் நெல்லைத் தலை சாய்த்து ஆர்ப்பரிக்கும். பெய்யாமல் கெடுத்தது பாதி என்றால் பெய்து கெடுத்தது பாதி என்று கேடு முழுமையாகிறது. வெள்ள நிவாராணம் என்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அரசுடன் மல்லுக்கு நிற்பது வாடிக்கை. எனினும் குறுவை சாகுபடிக்கு காவிரியை நம்பும் காலம் மலையேறிவிட்டது. 30, 40 ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தடிநீர் பயனாகும் மரபை டெல்டா விவசாயிகள் கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மிகவும் தாமதமாக மேட்டூர் அணை திறந்து விடப்படுவதால் சம்பா அல்லது ஒருபோக சாகுபடிக்கு மட்டுமே மேட்டூர் தண்ணீர் உதவும். இங்கு நாம் காவிரி நதிநீர்ப் பங்கீடு பற்றி விவாதிப்பது வீண். காவிரி நீர்ப்பங்கீடு குறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்பையே துச்சமெனத் தூக்கி எரியும் கர்நாடக அரசு, இன்று காவிரியின் உற்பத்திஸ்தானத்தைக் காப்பாற்றிக் கொள்ளுமா? இந்தக் கேள்வியை சற்று ஆராய வேண்டும். 1948-ஆம் ஆண்டு மைய அரசின் வேளாண்மை அமைச்சரகம் புவியியல் அடிப்படையிலும், மண்ணின் தகுதி அடிப்படையிலும் மாநில வாரியாக உகந்த பயிர்கள் எவை எப்போது விதைப்பது போன்றவை பற்றிய ஆவணத்தைத் தயாரித்துள்ளது. அதன் பெயர் வேளாண்மை பஞ்சாங்கம். ஆங்கிலத்தில் இதஞட இஅகஉசஈஉத என்று பல பதிப்புகள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் கர்நாடக மாநிலத்தில் நெல் சாகுபடிக்கு ஏற்ற வண்டல் மண் அரிது என்பதால், குறிப்பிட்ட சில மாவட்டங்கள் நீங்கலாக அதிக அளவில் புஞ்சைப் பயிர்களே ஏற்றவை என்று ஆலோசனை வழங்கியது. காலம் காலமாக அங்கு புஞ்சைப்பயிர்களே சாகுபடியாகி வந்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளது. புஞ்சை என்றால் சோளம், கேழ்வரகு, கம்பு, தினை, வரகு, சாமையுடன் துவரை, பருத்தி போன்றவை. காவிரி டெல்டாப் பகுதிகளில் நெல் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டது. கோடைப்பயிராக நெல் வயலில் உளுந்து, மக்காச்சோளம், பருத்தியும் சாகுபடி செய்யலாம். கர்நாடகத்தில் இயற்கைக்கு மாறாக புஞ்சை நிலம் நஞ்சையாவதும், காவிரி டெல்டாவில் நஞ்சை நிலம் புஞ்சையாவதும் நிகழ்ந்து வருகிறது. கிருஷ்ணராஜசாகரம், துங்கபத்ரா, கபினி அணைகள் கட்டப்பட்டு நெல்லும் கரும்பும் கர்நாடகாவில் பயிரிட தமிழ்நாட்டு விவசாயிகள் குடியமர்த்தப்பட்டார்கள். நெல், கரும்பு சாகுபடி உத்திகள் கர்நாடக விவசாயிகளுக்குத் தெரியாது. இதெல்லாம் பழையகதை. இன்று கர்நாடக மாநிலத்தில் கரும்பு, நெல் பயிரிடும் தமிழ் விவசாயிகளும் உள்ளனர் என்பது இந்திய வேற்றுமைகளின் ஒற்றுமைக்கு அடையாளம் போலும். இனி காவிரியின் பாதுகாப்பை கவனிப்போம். காவிரியின் உற்பத்தி இடம் கங்கையைப் போல் பனிமலை உருகி வரும் இடமல்ல. குடகுமலைப் பகுதியில் பெய்யும் மழையை காவிரி நம்பியுள்ளது. காவிரி உற்பத்தியாகும் மலைப்பகுதி வளம் குன்றா பல்லுயிர்ப் பெருக்கத்தின் எடுத்துக்காட்டு. வளர்ச்சிக்காக அங்கு காபி பயிரிடப்பட்டாலும், மரங்களோடு இணைந்து நிழலில் காபி சாகுபடியாகிறது. மரங்கள் வெட்டப்படுவது இல்லை. நிழலில் சிறிது மிளகு சாகுபடியும் உண்டு. ஏராளமான சுனைகளும் நீரூற்றுக்களும் மரங்களால் காப்பாற்றப்பட்டு பசுமை நீடிக்கின்றது. இப்போது அங்கு விளையும் "நிழல் காபி'க்கு ஆபத்து வந்துவிட்டது. "நிழல் காபி'யுடன் சேர்ந்து மரங்களுக்கும் ஆபத்து. மரங்களுக்கு ஆபத்து என்றால் காவிரிக்கும் ஆபத்து. மரங்கள்தான் நீரூற்றுகளைக் கனியவைக்கின்றன. காலம் காலமாக "நிழலில் காபி' பயிரானது. இப்போது காலம் மாறிவிட்டது. மரங்களை அழித்து "வெய்யில் காபி' பயிரிடத் தொங்கிவிட்டார்கள். வன வேளாண்மை அடிப்படையில் பயிராகும் "நிழல் காபி'யை ஏக்கருக்கு 1 டன் வரை விளைவிக்கலாம். பலருக்கு 750 கிலோ மட்டுமே விளைகிறது. நிழலில் "ஆர்கானிக் காபி', அதாவது தரமான காபி அறுவடை செய்யலாம். அதே சமயம் மரங்களை வெட்டிவிட்டு நிழலே படாமல் முழுக்க வெய்யில் படும்படி சாகுபடி செய்தால் 1 ஏக்கருக்கு 2 டன் (2000 கிலோ) விளைச்சல் எடுக்கலாம். "நிழல் காபி' என்றால் முழுக்கவும் நிழல் என்று பொருளல்ல, 50 சதவீதம் வெய்யிலும் கிட்டும்.பல்லுயிர்ப்பெருக்க அடிப்படையில் இயற்கையை வருத்தாமல் "நிழல் காபி' பயிரிடும் விவசாயிகள், மரமில்லாமல் முழு"வெய்யில் காபி' சாகுபடி செய்யும் விவசாயிகள் அளவுக்கு லாபம் ஈட்டமுடிவதில்லை. இப்படி இவர்கள் லாபம் பெறாவிட்டாலும் கூட நஷ்டத்தை ஈடுசெய்யும் அளவில் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாத்து வந்துள்ளனர். எனவே, வனவேளாண்மைக் காவலர் விருதுடன்,ஆண்டுதோறும் "நிழல் காபி' மானியமும் வழங்க மைய அரசும், கர்நாடக அரசும் முன்வரவேண்டும். இல்லாவிட்டால் காவிரியின் உற்பத்தியிடம் வெப்பலாகி அங்குள்ள சுனைகளும் ஊற்றுக்களும் அழிந்து விடும். "நிழல் காபி' சாகுபடி செய்வோர் வனத்துறையால் சங்கடத்திற்கும் ஆளாக நேரிடுகிறது. ஓர் அறுவடை முடிந்ததும் காபி வளரச் சற்று வெய்யில்படும் அளவில் மரக்கிளைகளை வெட்ட வனத்துறை அனுமதி வேண்டும். கவாத்து செய்ய அனுமதி வழங்குவதில் தாமதமாகிறது. "நிழல் காபி' பயிரிடும் விவசாயிகள் மரங்களை வெட்டிவிட்டு "வெய்யில் காபி' பயிரிடத் தொடங்கிவிட்டதால் காவிரியின் உற்பத்தி ஊற்றுக்கு ஆபத்து வந்துவிட்டது.தவிரவும் குடகு மலைப்பகுதி சுற்றுலா மையமாகி விட்டதால் புதிய ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், கட்டடங்கள் காரணமாக, மரங்கள் வெட்டப்பட்டு இயற்கை சேதமுறுகிறது.காலையில் எழுந்ததும் காபி கிடைத்தால் சரி. "நிழல் காபி' வந்தால் என்ன "வெய்யில் காபி' வந்தால் என்ன என்று மெத்தனமாயிருக்கக்கூடாது. "நிழல் காபி'யுடன் இணைந்த குடகுமலைப் பல்லுயிர்ப்பெருக்கம் காப்பாற்றப்பட்டால்தான் காவிரி "நடக்கும்'.காலம் செல்லச் செல்ல காவிரியே வற்றிவிடும் என்று காலநிலை மாற்றத்தை காரணம் காட்டி சூழலியல் வல்லுனர்கள் விடுக்கும் எச்சரிக்கையைப் புறக்கணிப்பதற்கில்லை.

No comments:

Post a comment