KALVISOLAI TNPSC

Wednesday, 31 August 2016

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக மாஃபா கே.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக மாஃபா கே.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அமைச்சரவையில் இருந்து சண்முகநாதன் விடுவிப்பு புதிய அமைச்சர் பாண்டியராஜன் 2 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் பாண்டியராஜன் தமிழக அமைச்சரவையில் இருந்து சண்முகநாதன் விடுவிக்கப்பட்டு உள்ளார். புதிய அமைச்சராக கே.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். தமிழக கவர்னரின் முதன்மைச் செயலாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: முதல்-அமைச்சரின் பரிந்துரையை அடுத்து, பால்வளம் மற்றும் பால் பண்ணைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படு கிறார். மேலும், ஆவடி தொகுதி எம்.எல்.ஏ. கே.பாண்டியராஜனை பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்ற முதல்- அமைச்சரின் பரிந்துரையை கவர்னர் ஏற்றுக் கொண்டார். மேலும் அவருக்கு பள்ளிக் கல்வி, தொல்லியல், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு ஆகிய இலாகாக்களை ஒதுக்க வேண்டும் என்ற முதல்- அமைச்சரின் பரிந்துரையையும் கவர்னர் ஏற்றுக் கொண்டார். இலாகா மாற்றம் தமிழக கவர்னருக்கு முதல்- அமைச்சர் மேலும் சில பரிந்துரைகளை அளித்துள்ளார். ஊரக தொழில்கள் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை, பால்வளம் மற்றும் பால் பண்ணைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமித்து, அவருக்கு பால்வளம் மற்றும் பால் பண்ணைகள் மேம்பாடு ஆகிய இலாகக்களை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார். அதுபோல, பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பி.பென்ஜமினை ஊரக தொழில்கள் துறை அமைச்சராக நியமித்து அவருக்கு குடிசைத் தொழில்கள், சிறு தொழில்கள் உட்பட ஊரகத் தொழில்கள் ஆகிய இலாகாக்களை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறார். புதிய அமைச்சரின் பதவி ஏற்பு நிகழ்ச்சி, 30-ந் தேதி (இன்று) மாலை 4.35 மணிக்கு கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டு நிபுணர் கே.பாண்டியராஜன் விருதுநகர் மாவட்டம் விளாம் பட்டியில் 26.4.1959 அன்று பிறந்தார். அவர் பி.இ., எம்.பி.ஏ. ஆகிய பட்டங்களை படித்துள்ளார். மனித வள மேம்பாட்டு நிபுணரான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். முன்பு பா.ஜ.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளில் இருந்தார். தே.மு.தி.க. கட்சியில் இருந்தபோது எம்.எல்.ஏ.வாகி மக்களுக்கு சேவையாற்றினார். அந்த காலகட்டத்தில் தே.மு.தி.க. தலைமையுடன் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக, தே.மு.தி.க. அதிருப்தி நிலையுடன், அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டார். பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்து, கடந்த தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் ஆசிய நாடுகள் உட்பட 42 நாடுகளுக்கு பயணித்துள்ளார். இந்த ஆட்சியின் அமைச்சரவை அமைந்த முதல் நாளில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது அமைச்சரவையில் முதல் மாற்றம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a comment