ஜிஎஸ்எல்வி - எஃப்05 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவுக்கு தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி

ஜிஎஸ்எல்வி - எஃப்05 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது  இஸ்ரோவுக்கு தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி  

இன்சாட்-3டிஆர் என்ற நவீன வானிலை செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி - எஃப்05 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து நேற்று மாலை வெற்றி கரமாக விண்ணில் செலுத்தப் பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), நவீன வானிலை தகவல்களை பெறுவதற்காக இன்சாட்-3டிஆர் என்ற செயற்கைக்கோளை தயாரித்தது. 2,211 கிலோ எடை கொண்ட அந்த செயற்கைக்கோளை, ஜிஎஸ்எல்வி - எஃப்05 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவதற்காக, ஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதற்கான 29 மணி நேர கவுன்ட் டவுன், புதன்கிழமை காலை 11.10 மணிக்கு தொடங்கியது. நேற்று மாலை 4.10 மணிக்கு ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிடப் பட்டிருந்தது. இதற்கிடையே, மாலை 3 மணி அளவில் கவுன்ட் டவுன் நேரம் 40 நிமிடங்கள் அதிகரிக் கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாலை 4.50 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. தொடக்கம் முதலே நிர்ணயிக்கப் பட்ட பாதையில் சென்று, 16.53-வது நிமிடத்தில் இலக்கை வெற்றிகரமாக அடைந்தது.

அப்போது, கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் மற்றும் விஞ்ஞானிகள் ஒருவருக் கொருவர் கைகுலுக்கியும், கட்டித் தழுவியும் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் கூறிய தாவது:

ஜிஎஸ்எல்வி - எஃப்05 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதன் மூலம், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் தொழில்நுட்ப இன்ஜின் கொண்ட ராக்கெட்களை செலுத்துவதில் தொடர்ந்து 3-வது முறையாக இஸ்ரோ வெற்றி பெற்றுள்ளது.

ஜிஎஸ்எல்வி மார்க்-2 ராக்கெட் 6 மாத இடைவெளியில் அடுத்த ஆண்டில் விண்ணில் செலுத்தப் படும். மார்க்-3 ராக்கெட், அதிக எடையை ஏந்திச் செல்லும் ராக்கெட் என்பதால், பல்வேறு ஆய்வுகளையும் களப்பணி களையும் மேற்கொண்டு வருகி றோம். இதனால் அதை ஏவுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் இது விண்ணில் செலுத்தப்படும்

தற்போது செலுத்தப்பட்ட இன்சாட்-3டிஆர் செயற்கைக் கோள் மூலம், நவீன வானிலை சார்ந்த தகவல்களை பெற முடியும். குறிப்பாக வெப்பநிலை, மழை நிலவரம், காற்றோட்டம் போன்ற தகவல்களை முன்கூட்டியே பெற முடியும். மேலும் விமானம் போன்றவை, அதில் இருந்து வரும் சமிக்ஞைகளை உடனுக்குடன் உள்வாங்கிக் கொண்டு, தன்னிச் சையாக தகவல் அனுப்பிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

40 நிமிடங்கள் தாமதம் ஏன்?

மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் திரவ ஆராய்ச்சி மைய இயக்குநர் சோமநாத் கூறும்போது, ''ராக்கெட் டுக்கு எரிபொருளாக திரவ ஆக்சிஜன், ஹைட்ரஜன் நிரப்பப் பட்டது. அதில் ஆக்சிஜன் குழாயில் கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப் பட்டு, சரி செய்யப்பட்டது. அதனால் ராக்கெட் 40 நிமிடங்கள் தாமதமாக ஏவப்பட்டது'' என்றார்.

பிஎஸ்எல்வி ராக்கெட்கள்

திருவனந்தபுரம் இஸ்ரோ மைய இயக்குநர் சிவன் கூறும்போது, ''வரும் ஆண்டுகளில் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 8 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த உள்ளோம்'' என்றார். சதீஷ் தவான் மைய இயக்குநர் பி.குன்ஹில் கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

Comments