தமிழகத்துக்கு, காவிரி ஆற்றில் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் 20-ந் தேதி வரை தண்ணீர் திறந்துவிட வேண்டும்

தமிழகத்துக்கு, காவிரி ஆற்றில் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் 20-ந் தேதி வரை தண்ணீர் திறந்துவிட வேண்டும்

கர்நாடகாவின் திருத்தம் கோரும் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு தமிழகத்துக்கு காவிரியில் செப்டம்பர் 20-ந் தேதி வரை வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது.

திருத்தம் கோரும் மனு

தமிழக அரசின் இடைக்கால மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கடந்த 5-ந் தேதி உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி 6-ந் தேதி முதல் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக அரசு தரப்பில் 11-ந் தேதியன்று இரவு சுப்ரீம் கோர்ட்டின் பதிவாளர் வீட்டுக்கு சென்று அவரிடம் 5-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்றும், மீதியுள்ள நாட்களில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கும் வகையில் திருத்தம் கோரும் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அந்த மனுவை அவசர வழக்காக கருதி உடனடியான விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

ரத்து செய்ய வேண்டும்

அந்த மனுவில், "நதிநீர் பங்கீட்டு பிரச்சினையால் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, மாண்டியா, மைசூர் மற்றும் ஹசன் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற போராட்டங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. பொதுச் சொத்துகள் மற்றும் தனியார் சொத்துகளுக்கு நாசம் விளைவிக்கப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, செப்டம்பர் 5-ந் தேதியன்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அல்லது வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் 16-ந் தேதி வரை மீதமுள்ள நாட்களில் திறந்து விட உத்தரவிட வேண்டும்" எனவும் கோரப்பட்டு இருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது. கர்நாடக அரசு தரப்பில் மூத்த வக்கீல் பாலி நாரிமன் ஆஜராகி வாதாடினார். தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல்கள் சேகர் நாப்டே, ராகேஷ் திவிவேதி, ஜி.உமாபதி ஆகியோர் ஆஜராயினர்.

அப்போது பாலி நாரிமன் கூறியதாவது:-

தண்ணீர் குறைவாக உள்ளது

கர்நாடகாவில் உள்ள நீர் தேக்கங்களில் இருக்கும் நீரின் அளவு தமிழ்நாட்டின் மேட்டூர் அணையில் உள்ளதை விட குறைவாக உள்ளது. சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஏற்கனவே தேவையான அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டு இருக்கிறது. எனவே, தமிழ்நாடு தரப்பில் முன்வைக்கப்படும் வாதங்களில் ஆதங்கம் மட்டுமே உள்ளது. உண்மை இல்லை. ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழகத்துக்கு தேவையான அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கட்டுகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை கச்சிதமாக அளவிட முடியாது. ஏனென்றால் கர்நாடகாவில் திறந்து விடப்படும் தண்ணீர் தமிழகத்துக்கு வந்து சேருவதற்கு 2 நாட்கள் ஆகின்றன. மேலும் காவிரி மேற்பார்வை குழுவின் கூட்டம் இன்று (நேற்று) நடைபெறுகின்றது.

பாதிக்கப்படும்

இரு மாநிலங்களின் தேவையை கணக்கிட்டு இந்த கூட்டத்தில் ஒரு முடிவெடுக்கப்படும். எனவே, சுப்ரீம் கோர்ட்டு 5-ந் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இல்லையென்றால் கர்நாடக மாநிலம் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும். குடிநீர் மற்றும் பாசனங்கள் பாதிக்கப்படும். இது குறித்து கர்நாடகா முதல்-மந்திரி பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு நீதிபதிகள், இது கோர்ட்டின் உத்தரவு. இதில் மத்திய அரசுக்கு எவ்வித பங்கும் இல்லை. இப்படி பிரதமருக்கு கடிதம் எழுதுவதை விடுத்து கோர்ட்டின் உத்தரவை மதித்து நடக்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே தன்னுடைய வாதத்தில் கூறியதாவது:-

தவறான கணக்கீடு

கர்நாடக அரசு தாக்கல் செய்திருக்கும் மனு பல்வேறு தவறுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதேபோல தற்போது கர்நாடக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் ஒப்பீட்டு பட்டியலும் மிகவும் தவறானது. உதாரணத்துக்கு கர்நாடகாவின் அணைப்பகுதிகளில் உள்ள நீர் தேக்க அளவு உபயோகப்படுத்தக்கூடிய அளவாக கணக்கிடப்பட்டு இருக்கிறது. ஆனால் தமிழகத்தின் மேட்டூர் அணையின் தேக்க அளவை மொத்த கொள்ளளவாக கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு தற்போது உடனடியாக தேவைப்படும் மொத்த நீரின் அளவு 50 டி.எம்.சி. ஆகும். ஆனாலும் தமிழ்நாடு தங்களிடம் உள்ள நீரைக்கொண்டு திறமையான முறையில் தேவையை சமாளித்து வருகிறது. இதனை கர்நாடகா எந்த வகையிலும் கேள்விக்கு உள்ளாக்க முடியாது. காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த தீர்ப்பை அவர்கள் எந்த வகையிலும் மீற முடியாது.

தள்ளுபடி செய்யுங்கள்

அந்த மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவில் திருத்தம் கோருவதற்கான சரியான காரணமாக அமைய முடியாது. அதைக் காரணம் காட்டி உத்தரவை ரத்து செய்ய கோரிக்கையும் முன்வைக்க முடியாது. எனவே கர்நாடகாவின் திருத்தம் கோரும் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்.

இவ்வாறு சேகர் நாப்டே கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:-

ஏற்கத்தக்கது அல்ல

செப்டம்பர் 5-ந் தேதியன்று பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை ஏற்கத்தக்கது அல்ல. எனவே அந்த கோரிக்கை மறுக்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தின் மனுவில் காணப்படும் தவறுகளுக்காக மூத்த வக்கீல் பாலி நாரிமன் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.

கர்நாடகாவுக்கும் குடிநீர் தேவைக்காகவும், பாசனத்துக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. அதே போல மூத்த வக்கீல் சேகர் நாப்டே தமிழகத்தில் விவசாயிகளின் சிரமங்களையும் தெளிவாக முன்வைத்து இருக்கிறார். காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவை கருத்தில் கொண்டு முடிவை எடுக்கும் வகையில் பல்வேறு நிபுணர்கள் அடங்கிய காவிரி மேற்பார்வை குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்து உள்ளது.

12 ஆயிரம் கனஅடி திறந்துவிடவேண்டும்

தமிழக அரசின் இடைக்கால மனுவின் மீதான விசாரணை செப்டம்பர் 16-ந் தேதிக்கு பட்டியல் இடப்பட்டு இருந்தது. தற்போது சில சிரமங்களால் இந்த விசாரணை செப்டம்பர் 20-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது

தற்போது உள்ள நிலவரத்தை கருத்தில் கொண்டு செப்டம்பர் 5-ந் தேதியன்று பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்யப்படுகிறது. தற்போது கர்நாடகா செப்டம்பர் 20-ந் தேதி வரை வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இந்த வழக்கின் மீதான விசாரணை 20-ந் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டு இருப்பதால் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களின் நிர்வாகம் அந்தந்த மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கை முறையாக பாதுகாக்கவேண்டும். இந்த இரு மாநிலங்களுக்காக ஆஜராகும் மூத்த வக்கீல்கள் பாலி நாரிமன் மற்றும் சேகர் நாப்டே ஆகியோர் அந்தந்த மாநிலங்களின் நிர்வாகத்துக்கு இதை எடுத்துக் கூறவேண்டும்.இவ்வாறு இந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Comments