12,500 பெண்களுக்கு திருமண நிதி உதவி - தாலிக்கு 8 கிராம் தங்கம் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

12,500 பெண்களுக்கு திருமண நிதி உதவி - தாலிக்கு 8 கிராம் தங்கம் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

12,500 பெண்களுக்கு திருமண நிதி உதவி - தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருமண உதவித் தொகை

சமூக நலத்துறையின் மூலம், ஏழை பெற்றோர்களின் பெண்கள், விதவைத் தாய்மார்களின் மகள், ஆதரவற்ற பெண்கள், கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர், மறுமணம் செய்து கொள்ளும் விதவைகள் ஆகியோருக்கு உதவிடும் வகையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2011-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக 50 ஆயிரம் ரூபாயும் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

படித்த ஏழைப்பெண்களுக்கு திருமண நிதி உதவியாக 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி அனைத்து திருமண உதவி திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு என வழங்கப்படும் தங்கம் 4 கிராம் என்பதில் இருந்து ஒரு சவரன் அதாவது 8 கிராம் என உயர்த்தி வழங்கிட முதல்-அமைச்சர் ஜெயலலிதா 23-5-2016 அன்று ஆணையிட்டார்.

ஜெயலலிதா வழங்கினார்

அதன்படி, ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்களின் மனம் குளிரும் வண்ணம் திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு இதுவரை பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ள 12,500 பயனாளிகளுக்கு திருமண உதவியுடன் 8 கிராம் தங்க நாணயம் வழங்கும் அடையாளமாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி மற்றும் காஞ்சீபுரம் மாவட்டதைச் சேர்ந்த 5 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவியுடன் 8 கிராம் தங்க நாணயங்களை வழங்கினார்.முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 8 கிராம் தங்க நாணயங்களை பெற்றுக்கொண்ட பயனாளிகள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியினை முதல்-அமைச்சருக்கு தெரிவித்துக் கொண்டார்கள்.

ரூ.204 கோடி நிதி ஒதுக்கீடு

திருமாங்கல்யம் செய்ய தங்க நாணயங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், 2016-2017-ம் நிதியாண்டிற்கு 204 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 23-5-2016-க்கு பின் விண்ணப்பம் செய்த 12,500 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயங்களும், அதற்கு முன்பு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 40 ஆயிரம் பயனாளிகளுக்கு 4 கிராம் தங்க நாணயங்களும் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments