அ.தி.மு.க. மேற்பார்வை குழு அமைப்பு: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 16-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் ஜெயலலிதா அறிவிப்பு

அ.தி.மு.க. மேற்பார்வை குழு அமைப்பு: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 16-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் ஜெயலலிதா அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலையொட்டி, அ.தி.மு.க. மேற்பார்வை குழுவை அறிவித்துள்ளதுடன், போட்டியிட விரும்புபவர்கள் 16-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்- அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மேற்பார்வை குழு

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்கள் நடைபெற இருப்பதையொட்டி, கட்சியின் தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் மேற்பார்வையிட பின்வருமாறு குழு அமைக்கப்படுகிறது.

1. ஓ.பன்னீர்செல்வம், நிதி அமைச்சர், 2. மு.தம்பிதுரை, பாராளுமன்ற துணை சபாநாயகர். 3. பொள்ளாச்சி வி.ஜெயராமன், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணைத் தலைவர், 4. செ.செம்மலை, அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர். 5. டாக்டர் பி.வேணுகோபால், பாராளுமன்ற அ.தி.மு.க. குழுத் தலைவர்.

அ.தி.மு.க. தொண்டர்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

விண்ணப்பங்கள்

மேலும், அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் கட்சி தொண்டர்களிடம் இருந்து 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணி முதல் விண்ணப்பங்கள் பெறப்படும். 22-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 8 மணி வரை விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். மற்ற அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.

சென்னை

சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் தலைமை அலுவலகத்தில் வழங்கப்படும். கட்சியின் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஏனைய மாவட்டங்களில், அந்தந்த மாவட்டக் கட்சி அலுவலகங்களில் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படும்.

விண்ணப்பப் படிவங்களைப் பெறுவதற்காக பின் வருமாறு கழக நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

1. தென் சென்னை வடக்கு - அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் என்.தளவாய்சுந்தரம், மாவட்ட செயலாளர் வி.பி. கலைராஜன். 2. தென் சென்னை தெற்கு - அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி. 3. வட சென்னை வடக்கு - அமைச்சர் டி.ஜெயக்குமார், மாவட்ட செலாளர் பி.வெற்றிவேல். 4. வட சென்னை தெற்கு - வக்கீல் பிரிவு தலைவர் வி.எஸ்.சேதுராமன், மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா. 5. காஞ்சீபுரம் கிழக்கு - மீனவர் பிரிவு செயலாளர் எம்.சி.முனுசாமி, மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன். 6. காஞ்சீபுரம் மேற்கு - அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன். 7.காஞ்சீபுரம் மத்தியம் - மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர். விஜயகுமார் எம்.பி., மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம். 8. திருவள்ளூர் கிழக்கு - அமைச்சர் க.பாண்டியராஜன், மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர். 9. திருவள்ளூர் மேற்கு - டாக்டர் பி.வேணுகோபால், பாராளுமன்ற அ.தி.மு.க. குழு தலைவர், சிறுமணியம் பி.பலராமன், எம்.எல்.ஏ. மாவட்ட செயலாளர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கட்டணத் தொகை

அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்- அமைச்சருமான ஜெயலலிதாவின் மேலான அறிவிப்பிற்கு இணங்க, நடைபெற உள்ள தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்பும் கட்சி தொண்டர்கள் மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர்கள் பதவிக்கு ரூ.11 ஆயிரமும், நகர மன்ற வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு ரூ.5 ஆயிரமும், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு ரூ.2 ஆயிரமும், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் பதவிக்கு ரூ.11 ஆயிரமும், ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு ரூ.5 ஆயிரமும் கட்டணத் தொகையாக செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments