SCROL

Thursday, September 29, 2016

2 மாநில அரசுகளுடன் மத்திய அரசு பேச வேண்டும் தமிழகத்துக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் மேலும் 3 நாட்களுக்கு தண்ணீர் விட வேண்டும் கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

2 மாநில அரசுகளுடன் மத்திய அரசு பேச வேண்டும் தமிழகத்துக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் மேலும் 3 நாட்களுக்கு தண்ணீர் விட வேண்டும் கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

தமிழகத்துக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் மேலும் 3 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்துக்கு சம்பா சாகுபடிக்காக போதிய தண்ணீரை திறக்கவேண்டும் என்ற தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

திருத்தம் கோரும் மனு

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழகத்துக்கு காவிரியில் 21-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்தது.இதையடுத்து கர்நாடக அரசு திங்கட்கிழமை (26-ந்தேதி) சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த திருத்தம் கோரும் மனுவில், 'தற்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டபடி வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விடுவது கர்நாடகாவுக்கு மிகவும் கடினமானது. எனவே, இந்த உத்தரவை 2017 ஜனவரி 31-ந்தேதிக்கு பிறகு நடை முறைப்படுத்தும் வகையில் திருத்தி வெளியிடவேண்டும்' என்று கோரிக்கை விடுத்தது.

ஏற்கக்கூடாது

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த இடைக்கால மனுவில் 'கடந்த 5, 12, 20-ந்தேதிகளில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு எதையும் கர்நாடகா நடைமுறைப்படுத்தவில்லை. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் ஆகும். எனவே, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அண்மையில் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றும் வரையில் கர்நாடகாவின் எந்த திருத்தம் கோரும் மனுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது' என்று கூறப்பட்டு இருந்தது.இந்த இரு மனுக்கள் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே கூறியதாவது:-

சட்டத்தை அவமதித்தது குற்றம்

சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு மதிக்காமல் நடந்து கொண்டுள்ளது. கோர்ட்டு உத்தரவிட்டபடி இதுவரை அவர்கள் தண்ணீர் திறந்து விடவில்லை. எப்போதும் பற்றாக்குறை என்கிற பாட்டையே பாடி வருகின்றனர். தண்ணீரை திறக்குமாறு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தால் இவர்கள் தண்ணீர் திறக்க முடியாது என்று சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுகின்றனர்.இதனால் சட்டத்தை அவமதித்த குற்றத்துக்கு கர்நாடகா ஆளாகி இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றும் வரை கர்நாடகாவின் எந்த மனுவையும் கோர்ட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடாது. இது மிகவும் தீவிரமான விஷயம்.நீதிமன்றம் ஒரு மாநிலத்தை இப்படி நடந்து கொள்வதற்கு அனுமதித்தால் இது சட்டம் மற்றும் நீதி சார்ந்த நடை முறைகளை பாழாக்கி விடும் ஆபத்து உள்ளது. எங்கள் தரப்பின் நியாயம் கண்டிப்பாக கேட்கப்படவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையில் கர்நாடகா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பாலி நாரிமன் தங்களது தரப்பில் ஒரு அறிக்கையை நீதிபதிகளிடம் தாக்கல் செய்தார்.இதற்கு ஆட்சேபம் தெரிவித்த சேகர் நாப்டே, இந்த விஷயத்தை ஒத்திப்போடுவதற்காக இவர்கள் இப்படி ஏதாவது அறிக்கையை தாக்கல் செய்து சாக்கு போக்கு தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

கண்டிப்பாக நிறைவேற்றவேண்டும்

அப்போது, நீதிபதிகள் "இங்கு கோர்ட்டில் அட்டார்னி ஜெனரல் இருக்கிறார். மத்திய அரசு தரப்பில் இந்த பிரச்சினைக்கு ஏதேனும் தீர்வு காண முயற்சிக்க முடியுமா? இது விஷயமாக உங்கள் கருத்து என்ன?" என்று கேட்டனர்.இதையடுத்து அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கூறும்போது, "கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை படித்தேன். இந்த உத்தரவை கண்டிப்பாக நிறைவேற்றவேண்டும் என்பதில் எந்தவித இரண்டாவது கருத்தும் இல்லை. அந்த உத்தரவை கோர்ட்டு திருத்தலாம். அதே நேரத்தில் கர்நாடகா செய்தது சரியானது என்று கூற மாட்டேன். மத்திய அரசுடன் இது குறித்து ஆலோசனை நடத்தி மீண்டும் 3 நாட்களுக்குள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்கிறேன். இது குறித்து ஏதேனும் சுமுகமான முடிவை எட்ட முடியுமா? என்றும் மத்திய அரசு மூலமாக முயற்சிக்கிறேன்" என்றார்.

கூட்டாட்சி தத்துவம்

நீதிபதிகள், "இது இரு மாநிலங்களுக்கு இடையில் உள்ள பிரச்சினை. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்ட உத்தரவு குறித்தும் விரிவாக ஆராய வேண்டும். அதுவரை இந்த இருமாநிலங்களும் எப்படி நிலைமையை சமாளிக்கின்றன என்பதையும் நாம் பார்க்கவேண்டும். நாம் கூட்டாட்சி தத்துவத்தில் இயங்குகிறோம். ஒரு பிரச்சினையை வைத்துக்கொண்டு இரு மாநிலங்கள் இப்படி தங்களுக்குள் பிணக்குகளை தொடர்ந்து வளர்த்துக் கொள்ளக்கூடாது. தங்களுக்குள் ஒரு சுமுகமான பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்" என்றனர்.அப்போது ஆஜரான சேகர் நாப்டே கூறியதாவது:-

நியாயமான கோரிக்கை

சுப்ரீம் கோர்ட்டு எப்போதெல்லாம் ஒரு உத்தரவை பிறப்பிக்கிறதோ, அப்போதெல்லாம் கர்நாடக அரசு தரப்பில் வேண்டுமென்றே ஏதாவது ஒரு திருத்தம் கோரும் மனு தாக்கல் செய்யப்படுகிறது. அவர்கள் தரப்பில் எப்போதும் ஒரே மாதிரியான வாதங்கள்தான் முன்வைக்கப்படுகிறது. புதிதாக அவர்களிடம் வாதங்கள் எதுவும் இல்லை.நியாயத்தை அடைவதற்காக மீண்டும் மீண்டும் வழக்கு தொடர்ந்து நாங்கள் மிகவும் களைத்து விட்டோம். எங்களுடைய கோரிக்கை மிகவும் நியாயமானது. நிறைவேற்றுதற்கு அனைத்து தகுதிகளும் கொண்டது. எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் முறையாக கேட்கப்படவில்லை.நாங்கள் கோர்ட்டுக்கு போகாமல் வேறு எங்கே போவது? சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அவர்கள் மதிக்கவில்லை. இப்படித்தான் ஒரு மாநிலம் நடந்து கொள்வதா? இவர்கள் வருடத்தின் கடைசியில் தண்ணீர் கொடுப்பார்கள். அதுவரை நாங்கள் தண்ணீர் இல்லாமல் சகித்துக் கொள்ளவேண்டும். எங்கள் சம்பா, குறுவை தாளடி பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. நீங்கள் மனுவை விசாரிக்கிறீர்களா இல்லையா என்பது குறித்து எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவர்கள் தண்ணீர் தருவார்களா இல்லையா? என்பதை நாங்கள் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு விடுகிறோம்.அப்போது, அட்டார்னி ஜெனரல் "நான் மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து விட்டு கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்கிறேன். இரு மாநில பிரதிநிதிகளுடன் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி ஏதாவது செய்ய முடியுமா என்று முயற்சிக்கிறேன்" என்றார்.இதைத் தொடர்ந்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:-

ஆலோசனை செய்வது சரி

இந்த சூழ்நிலையில் இந்த பிரச்சினையை சுமுகமாக முடிக்கும் வகையில் என்ன செய்ய முடியும் என்று அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கியிடம் கருத்து கேட்கப்பட்டது.இந்த கோர்ட்டால் முடிவு எடுக்க முடியவில்லை என்றோ, சட்டத்தின் அடிப்படையில் உரிய உத்தரவை பிறப்பிக்க முடியவில்லை என்றோ நாங்கள் இப்படி அவரிடம் கருத்து கேட்கவில்லை. ஆனால் கூட்டாட்சி தத்துவத்தில் ஒரு ஆரோக்கியமான முறையில் இந்த பிரச்சினை அணுகப்பட்டு ஜனநாயக ரீதியான முறையில் கலந்தாலோசனை செய்வது சரியாக இருக்கும் என்பதால் இது போன்று இந்த முடிவு எடுக்கப்பட்டது.அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி இது குறித்து இரு மாநில முதல்வர்களுடன் மற்றும் அதிகாரிகளுடன் மத்திய அரசு சார்பில் கலந்தாலோசனை செய்து சுமுகமான முடிவை காண முயற்சிக்க முடியும் என்று தெரிவித்தார். இதற்கு இரு தரப்பு மூத்த வக்கீல்களும் தங்கள் சம்மதத்தை தெரிவித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்துவதற்கு தனக்கு சிறிது அவகாசம் தேவை என்று அட்டார்னி ஜெனரல் கோரிக்கை விடுத்ததால் இந்த வழக்கின் மீதான விசாரணை வெள்ளிக் கிழமை (30-ந்தேதி) மதியம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி

சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு நிறைவேற்றவில்லை என்பது குறித்து எங்கள் கவனத்தில் இருந்தாலும் இன்று நாங்கள் இதற்குள் நுழையவில்லை. இருப்பினும் நாளை (இன்று) அதாவது 28-ந்தேதியில் இருந்து அடுத்து விசாரணை நடக்கும் 30-ந்தேதி வரை தமிழகத்துக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீரை கர்நாடகா கண்டிப்பாக, எவ்வித தடையும் இன்றி திறக்கவேண்டும். கர்நாடக சட்டப்பேரவையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி இருப்பதால் தண்ணீர் திறந்து விடுவதில் சிரமம் இருக்கும் என்று மூத்த வக்கீல் பாலி நாரிமன் தெரிவித்தார். இருப்பினும் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை கருத்தில் கொள்ளாமல் கர்நாடகா கோர்ட்டு உத்தரவின்படி தண்ணீரை திறந்து விடவேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment