குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

குரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

குரூப் 4 தொகுதி காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கு வரும் 14 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வியாழக்கிழமையுடன் (செப்.8) முடிவடைவதாக இருந்தது. இந்த நிலையில், தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, டி.என். பி.எஸ்.சி. வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அதிக அளவிலான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர். இந்த நிலையில், அவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 14-ஆம் தேதி வரையிலும், தேர்வுக் கட்டணத்தை செலுத்த 16-ஆம் தேதி வரையும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை 10 லட்சம் பேர்: குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.டிஎன்பிஎஸ்சி -குரூப் 4 பிரிவில் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 5451 காலிப்பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் 9 ஆம் தேதியன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.

Comments