தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழின்படி உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும்

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழின்படி உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும்

ஐகோர்ட்டு உத்தரவு

தமிழக அரசு பிறப்பித்த அரசிதழின்படி உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றும், இதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேற்கெள்ளவேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம், மேல்செங்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஜி.குமார். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

ஓட்டு எந்திரம்

ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவும் உள்ளேன். தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளுக்கும், 125 நகராட்சிகளுக்கும், 561 டவுன் பஞ்சாயத்துகளுக்கும், 12 ஆயிரத்து 618 கிராம பஞ்சாய்த்துகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலின்போது, மின்னணு ஓட்டு எந்திரத்தை பயன்படுத்தவும், வாக்குசாவடிகள், ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும், மத்திய அரசு அதிகாரிகளை தேர்தல் அதிகாரியாக நியமிக்கவும் உத்தரவிடவேண்டும்.

இடஒதுக்கீடு

மேலும், வேட்புமனு விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையை நிலை நாட்டவும், தேர்தல் அதிகாரிகளின் பணி சுமைகளை குறைப்பதற்கும், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில், வேட்பாளர்கள் 'ஆன்லைன்' மூலம் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வழிவகை செய்யும்படி மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும். கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு வெளியிட்ட அரசிதழில், உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த அரசிதழை அமல்படுத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பரிசீலிக்கவேண்டும்

ஓட்டு எந்திரத்தை பயன்படுத்துவது உள்ளிட்ட பல கோரிக்கைள் முன்வைத்து ஏற்கனவே (தி.மு.க., பா.ம.க. சார்பில்) தொடரப்பட்ட வழக்கு டிவிஷன் பெஞ்சில் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கோரிக்கைகளை மீண்டும் பரிசீலிக்க முடியாது. அதேநேரம், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு இதுவரை வெளியிடவில்லை. எனவே, வேட்புமனுவை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்வது, ஓட்டுச்சாவடியிலும், ஓட்டு எண்ணும் மையத்திலும் கண் காணிப்பு கேமரா பொருத்துவது உள்ளிட்ட மனுதாரரின் கோரிக்கையை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். அதேபோல, பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு கடந்த பிப்ரவரி 27-ந் தேதி அரசிதழ் வெளியிட்டுள்ளது. அரசிதழ் வெளியிட்டு விட்டால், அதன்படி இடஒதுக்கீட்டை உள்ளாட்சி தேர்தலில் வழங்கவேண்டும். இதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments