500-வது டெஸ்டில் அடியெடுத்து வைக்கும் இந்தியா

500-வது டெஸ்டில் அடியெடுத்து வைக்கும் இந்தியா

இந்திய அணியின் 500-வது டெஸ்டில் கேப்டனாக செயல்பட உள்ள விராட்கோலி.

முச்சதம் நொறுக்கிய ஒரே இந்தியர் ஷேவாக்.

ஒரே இன்னிங்சில் கும்பிளே 10 விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியான தருணம்.

முதல் டெஸ்டில் பங்கேற்ற சி.கே.நாயுடு தலைமையிலான இந்திய அணி.

200 டெஸ்ட் விளையாடிய ஒரே வீரர் தெண்டுல்கர்.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்பார்கில் நாளை (வியாழக் கிழமை) தொடங்குகிறது. இது இந்திய அணியின் 500-வது டெஸ்ட் போட்டியாகும். 1932-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய இந்திய அணி இந்த 84 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் சிகரத்தையும் தொட்டு இருக்கிறது. அதல வீழ்ச்சியையும் சந்தித்து இருக்கிறது.

டெஸ்டில் இந்தியாவின் சாதனைகள், முக்கிய நிகழ்வுகள் போன்ற சுவாரஸ்யமான விஷயங்களை இங்கு பார்க்கலாம்.

முதல் டெஸ்ட்

*1932-ம் ஆண்டு முதல் முறையாக இந்திய அணி டெஸ்டில் அடியெடுத்து வைத்தது. 'கிரிக்கெட்டின் மெக்கா' என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்சில் இங்கிலாந்துக்கு எதிராக அரங்கேறிய இந்த டெஸ்டில், சி.கே.நாயுடு தலைமையிலான இந்திய அணி 158 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இது 3 நாட்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. இடையில் ஒரு நாள் ஓய்வும் வழங்கப்பட்டது.

*இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே இந்த மைல்கல்லை கடந்துள்ளன. இங்கிலாந்து தனது 500-வது டெஸ்டில் பாகிஸ்தானுக்கு எதிராக (1974-ம் ஆண்டு) விளையாடியது. இதில் 87 ரன்கள் இலக்கை நோக்கி இங்கிலாந்து களம் இறங்க இருந்த நிலையில் கடைசி நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால் இந்த டெஸ்ட் டிராவில் முடிந்தது. ஆஸ்திரேலிய அணி 500-வது டெஸ்டில் தனது பிரதான எதிரி இங்கிலாந்தை (1990-ம் ஆண்டு, மெல்போர்ன்) 8 விக்கெட் வித்தியாசத்தில் துவம்சம் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 2014-ம் ஆண்டு வங்காளதேசத்தை வீழ்த்தி தனது 500-வது டெஸ்டை வெற்றியோடு கொண்டாடியது.

வீரர்கள் எத்தனை பேர்?

*இந்திய அணியில் இதுவரை 285 வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார்கள். இதில் 32 பேர் கேப்டன் பதவியையும் அலங்கரித்து உள்ளனர்.

* 77 இந்தியர்கள் சதம் அடித்து இருக்கிறார்கள். ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 51 சதங்கள் விளாசியதே, உலக அளவில் டெஸ்டில் ஒரு வீரரின் அதிகபட்ச சதங்கள் ஆகும்.

*லாலா அமர்நாத் சதம் அடித்த முதல் இந்தியர் (118 ரன்கள், 1933-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக) ஆவார்.

*இந்திய அளவில் முச்சதம் அடித்த ஒரே வீரர் ஷேவாக் தான். அவர் இரண்டு முறை (309 ரன், பாகிஸ்தானுக்கு எதிராக, 319 ரன், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக) 300 ரன்களுக்கு மேல் குவித்து வியக்க வைத்துள்ளார்.

*பங்கேற்ற போட்டிகளின் எண்ணிக்கையில் 'இரட்டை செஞ்சுரி' அடித்த ஒரே வீரர் தெண்டுல்கர் ஆவார். 2013-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தனது 200-வது டெஸ்டுடன் தெண்டுல்கர் விடைபெற்றது நினைவு கூரத்தக்கது.

*டெஸ்டில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் குவித்தவர் சாதனையும் இந்தியர் வசமே உள்ளது. தெண்டுல்கர் 15,921 ரன்களுடன் முதலிடம் வகிக்கிறார்.

*1999-ம் ஆண்டு டெல்லியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 2-வது இன்னிங்சில், சுழற்பந்து வீச்சில் மாயாஜாலம் காட்டிய இந்திய வீரர் அனில் கும்பிளே 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சர்வதேச அரங்கில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 139 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் அறுவடை செய்த 2-வது வீரர் கும்பிளே ஆவார்.

*இந்தியா தரப்பில் அதிகபட்சமாக கும்பிளே 619 விக்கெட்டுகள் (132 டெஸ்ட்) வீழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்த பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறார்.

வெற்றிகள் கனிந்தது எப்போது?

*முதலாவது வெற்றிக்காக இந்திய அணி 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது. 1952-ம் ஆண்டு விஜய் ஹசாரே தலைமையிலான இந்திய அணி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இங்கிலாந்துடன் மோதியது. இதில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. பங்கஜ் ராய், பாலி உம்ரிகரின் சதங்களும், சுழற்பந்து வீச்சாளர் வினோ மன்கட்டின் 12 விக்கெட்டுகளும் வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றிக்கு அச்சாரமாக அமைந்தன.

*2007-ம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியே இந்தியாவின் இமாலய வெற்றியாகும். ரன் வித்தியாசத்தை எடுத்துக் கொண்டால் கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 337 ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்த வெற்றி சிறந்ததாகும். 7 முறை 10 விக்கெட் வித்தியாசத்தில் பெற்ற வெற்றிகளும் குறிப்பிடத்தக்கவை.

*1952-ம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்து 5 டெஸ்டில் பங்கேற்றது. 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது. இந்தியாவின் முதல் தொடர் வெற்றி இதுவாகும்.

*1968-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு சென்ற இந்திய அணி டுனிடனில் நடந்த டெஸ்டில் நியூசிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்தது. வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் முதல் வெற்றியாக இது பதிவானது. இந்த தொடரையும் 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்று வரலாறு படைத்தது.

* இந்திய கிரிக்கெட்டில், முத்தாய்ப்பாக 2001-ம் ஆண்டு கொல்கத்தா டெஸ்ட் வெற்றியை கூற முடியும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த டெஸ்டில் சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி 'பாலோ-ஆன்' ஆகி 274 பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடியது. வி.வி.எஸ்.லட்சுமண் (281 ரன்), ராகுல் டிராவிட் (180 ரன்) ஆகியோரின் பிரமாதமான ஆட்டத்தால் இந்தியா 657 ரன்கள் சேர்த்தது. அடுத்து 384 ரன்கள் இலக்கை நோக்கி களம் கண்ட ஆஸ்திரேலியா 212 ரன்னில் சுருண்டு தோற்றது. 'பாலோ-ஆன்' ஆகி அதன் பிறகு ஒரு அணி எழுச்சி பெற்று வெற்றி காண்பது இது 3-வது அரிய நிகழ்வாகும். முன்னதாக முதல் இன்னிங்சில் 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய டெஸ்ட் வீரர் என்ற சாதனையை ஹர்பஜன்சிங் படைத்தார். தொடர்ந்து 16 டெஸ்டுகளில் வெற்றி பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்திற்கும் இதன் மூலம் இந்தியா முடிவு கட்டியது.

*இந்த நாள் வரைக்கும் ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்க மண்ணில் மட்டும் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை.

டிராவிட்-டோனி

*2009-ம் ஆண்டு மும்பையில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 9 விக்கெட்டுக்கு 726 ரன்களுடன் டிக்ளேர் செய்தது இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராகும். 1974-ம் ஆண்டு லார்ட்சில் இங்கிலாந்துக்கு எதிராக 42 ரன்களில் சுருண்டது மோசமான ஸ்கோராகும்.

*இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த டோனி 60 டெஸ்டுகளில் (27 வெற்றி, 18 தோல்வி, 15 டிரா) அணியை வழிநடத்தி இருக்கிறார்.

*அதிக கேட்ச் செய்த பீல்டர் என்ற பெருமையை இந்தியாவின் ராகுல் டிராவிட் (210 கேட்ச்) தக்க வைத்துள்ளார்.

Comments