SCROL

Thursday, September 29, 2016

வருமானம் தெரிவிக்கும் திட்டம் குறித்து மக்களின் சந்தேகங்களை தீர்க்க 5 சுற்றறிக்கைகள் வெளியீடு

வருமானம் தெரிவிக்கும் திட்டம் குறித்து மக்களின் சந்தேகங்களை தீர்க்க 5 சுற்றறிக்கைகள் வெளியீடு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரித்துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வருமானம் தெரிவிக்கும் திட்டம் 2016-ன்படி, இதுவரை வருமான வரி கட்டாதவர்கள் தாமாக முன்வந்து தங்களின் கணக்கில் வராத பணம் மற்றும் சொத்துக்களை இம்மாதம் 30-ம் தேதிக்குள் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உள்ள ஷரத்துகள் தொடர்பாக பொதுமக்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் மத்திய நேரடி வரிகள் வாரியம், அவ்வப்போது விதிகளில் திருத்தங்கள் மேற்கொண்டு வருகிறது. அவற்றை விளக்கும் வகையில் 5 சுற்றறிக்கைகளை வெளியிட் டுள்ளது. இந்த விவரங்களை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். இத்திட்டத்தின் கீழ் தெரிவிக்கப் படும் அசையா சொத்துக்களின் மதிப்பீடு 1.6.2016 அன்றைய சந்தை மதிப்பாக கொள்ள வேண்டும் என்ற நிலை குறித்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்தகைய சொத்துக்களின் விற்பனை பத்திரத்தில் குறிப்பிட்ட முத்திரைத்தாள் மதிப்பீட்டை 1.6.2016 அன்று வரவு - செலவு பணவீக்க குறியீடு கொண்டு திருத்தி, அந்த மதிப்பை காட்டவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தனி நபர் அல்லது நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட இருப்புநிலை குறிப்பில் (பேலன்ஸ் ஷீட்) கடன்கள், கடன் கொடுத்தவர், முன்பணம், பங்கு மூலதனம் மற்றும் செலுத்த வேண்டிய தொகை பற்றிய விவரங்கள் இருந்து, அவை போலியானதாகவும் அவற்றை எந்தக் குறிப்பிட்ட சொத்துக்கள் மற்றும் முதலீட்டுடன் தொடர்புபடுத்த முடியாமலும் இருந்தால் அத்தகைய போலியான கடன்களை இத்திட்டத்தின் கீழ் வருமானமாக தெரிவிக்க இயலும். இத்திட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்ட வருமானம் வங்கிக்கணக்கில் ரொக்கமாக வரவு வைக்கப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக நிதி புலனாய்வு பிரிவோ அல்லது வருமான வரித்துறையோ எந்த பாதகமான நடவடிக்கையும் எடுக்காது. அத்துடன் இத்திட்டத்தின் கீழ் ஒரே தன்மையுள்ள வருமானத்தை முந்தைய ஆண்டுகளில் காண்பித்து பிந்தைய ஆண்டுகளில் வருமான வரித்துறை ஆய்வு காரணமாக இத்திட்டத்தின் கீழ் வர இயலாத நிலையில், அந்த ஆண்டுகளில் வருமான வரித்துறையுடன் போதிய ஒத்துழைப்பு அளித்ததாகக் கருதி அபராதம் மற்றும் பொருளாதார குற்றங்களுக்கான சட்ட நடவடிக்கையில் இருந்து விலக்கு அளிக்கவும் பரிசீலிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment