அங்கீகாரம் பெறாத பள்ளிகள் விவகாரம் பள்ளி கல்வி துறை செயலாளர் நவ.7-ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

அங்கீகாரம் பெறாத பள்ளிகள் விவகாரம் பள்ளி கல்வி துறை செயலாளர் நவ.7-ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

அங்கீகாரம் பெறாத 746 பள்ளி களை மூடக்கோரிய வழக்கில் தமிழக பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலாளர் நவம்பர் 7- ல் ஆவணங்களுடன் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அங்கீகாரமில் லாமல் செயல்படும் ஆயிரத்துக் கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளை மூடக்கோரி மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் பாடம் ஏ.நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "போதிய கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப குறைந்த பட்ச இடவசதி இருந்தால் மட்டுமே மெட்ரிக் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அரசு ஆணை உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி தமிழக பள்ளி கல்வித் துறை இதுதொடர்பாக 2 அரசாணைகளை பிறப்பித்தது. அதன்படி தமிழகத்தில் அங்கீ காரம் பெறாத தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர் களின் நலன்கருதி மே 31 வரை தற்காலிக அனுமதி வழங்கபட்டது. இந்த அரசாணைகளை ரத்து செய்து, அங்கீகாரம் பெறாத பள்ளி களில் படிக்கும் மாணவர்களை அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்'' என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக பள்ளி கல்வித் துறை இணைச் செயலாளர் கே.ரவிச்சந்திரன் தாக்கல் செய்த பதில் மனுவில், ''தமிழகம் முழு வதும் அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளை முறைப் படுத்த நிபுணர் குழு அமைக் கப்பட்டு பரிந்துரைகள் பெறப் பட்டுள்ளது. அங்கீகாரம் வழங்கப்படாத 746 பள்ளிகளில் அரசு விதிமுறைகளை பூர்த்தி செய்த பள்ளிகளுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்குவது குறித்து பள்ளி கல்வித் துறை பரிசீலித்து வருகிறது. இதற்கிடையே தனியார் பள்ளிகள் சார்பிலும் இதுதொடர்பாக வழக்கு தொட ரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இதுதொடர்பாக எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை. ஆகவே அங்கீகாரமில்லாத தனியார் பள்ளிகளை முறைப்படுத்துவது தொடர்பாக நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளை ஏற்க இன்னும் 2 மாதம் அவகாசம் வேண்டும்'' என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ''இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் முடிவெடுக்க வேண் டும். அந்த முடிவுகள் குறித்த ஆவணங்களுடன் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செய லாளர் நவம்பர் 7-ம் தேதியன்று நேரில் ஆஜராக வேண்டும்'' என உத்தரவிட்டனர்.

Comments