பழைய கால மண் பரிசோதனை முறைகள்

பழைய கால மண் பரிசோதனை முறைகள்

கடும் வெயில் காலத்தில், பசுமையான மரத்தின் அடியில், குளிர்ச்சியான காற்று நம்மீது வீசுவது இனிமையான அனுபவமாக இருக்கும். பசுமையான மரமும் அதன் நிழலும் தரக்கூடிய இனிமையை உணரும் நமக்கு மரத்தின் வேர்கள் கண்ணுக்கு தெரிவதில்லை. அதுபோன்று அழகாக கட்டமைக்கப்பட்ட ஒரு வீட்டின் அமைப்பை ரசிக்கும்போது, அதன் மேற்புற கட்டுமானம் மட்டும்தான் கண்களுக்கு தெரியும். அதன் அஸ்திவாரமானது எவ்வளவு ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது..? எந்த முறையில் அதன் வடிவம் உள்ளது..? என்ற தொழில்நுட்ப அம்சங்கள் அனைவருக்கும் தெரிவதில்லை.

நவீன அணுகுமுறைகள்

ஒரு கட்டமைப்பு எவ்வகையை சார்ந்ததாக இருந்தாலும் அதன் அஸ்திவார அமைப்பு பற்றி அதிகபட்ச கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிகள் அஸ்திவார கட்டமைப்புகளை சிறந்த முறையில் உருவாக்க பெருமளவில் உதவியாக இருக்கின்றன. 'சாயில் மெக்கானிக்ஸ்', 'ஜியாலஜிகல் சர்வே' மற்றும் 'எல்.பி.ஜி' எனப்படும் மண்ணின் பளு தாங்கும் திறன் பரிசோதனை ஆகிய அறிவியல் பூர்வமான அணுகுமுறைகள் ஒரு குறிப்பிட்ட இடத்தின் மண்ணின் தன்மை பற்றி தெளிவாக அறிந்துகொள்ள உதவுகின்றன.

பழைய கட்டமைப்புகள்

மேலே நாம் கண்ட தொழில்நுட்ப அறிவு அல்லது வளர்ச்சிகள் ஆகிய எதுவும் இல்லாத பழைய காலகட்டத்திலேயே நீளமான, அகலமான மற்றும் நல்ல உயரத்துடன் கூடிய விஸ்தாரமான கட்டிடங்கள் உருவாக்கப்பட்டிருந்ததை அனைவரும் அறிவோம். அதற்காக நமது முன்னோர்கள் கையாண்ட புவியியல் சார்ந்த அணுகுமுறைகள் என்ன..? மண் பரிசோதனைக்கான அளவீடுகள் என்ன..? என்ற கேள்விகள் நமக்குள் எழுகின்றன. அதற்கான பதிலை வயதில் மூத்த கட்டிடவியல் வல்லுனர்கள் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். வீடுகள் கட்டுவதற்கு அஸ்திவார விஷயத்தில் நமது முன்னோர்கள் கையாண்ட யுக்திகள் ஆச்சரியமானதாகவும், எளிமையானதாகவும் இருக்கின்றன.

உயிருள்ள நிலம்

வீடுகள் கட்டவேண்டிய இடத்தை முன்னோர்கள் உயிருள்ள நிலம் மற்றும் உயிரற்ற நிலம் என்று இரண்டு பிரிவாக பிரித்திருந்தார்கள். உயிருள்ள நிலம் என்பது புல்பூண்டுகள் முளைத்து பசுமையாகவும், சம தளப்பரப்பாகவும் உள்ள இடமாகும். பசும்புற்களே முளைக்காமலும், மேடுபள்ளங்களாகவும் இருக்கும் நிலப்பரப்பு உயிரற்ற தன்மை கொண்டதாக கருதப்பட்டது.

பரிசோதனை முறைகள்

வீடு கட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்திற்கு அதிகாலை நேரத்தில் சென்று, அதன் கச்சிதமான மத்தியப்பகுதியில் ஒரு அடி நீளம், ஒரு அடி அகலம், ஒரு அடி ஆழம் என்ற அளவுகள் இருக்கும்படி சதுரமாக ஒரு குழி வெட்டப்படும். அதிலிருந்து எடுக்கப்பட்ட மண்ணை மீண்டும் அதே குழியில் போட்டு நிரப்பும்போது குறிப்பிட்ட அளவு மண் மீதமாக இருந்தால் அந்த நிலம் உத்தமமான நிலமாக கருதப்படும். மண் எதுவும் மீதமாகாமல் குழியை நிரப்புவதற்கு மட்டும் போதுமானதாக இருந்தால் மத்திய தரமுள்ள நிலமாக எடுத்துக்கொள்ளப்படும். வெட்டப்பட்ட குழியில் இருந்து எடுத்த மண்ணைக்கொண்டு குழியை நிரப்பும்போது குழி முழுவதும் நிரம்பாவிட்டால் அது கட்டுமானத்துக்கு உகந்தல்ல என்று கருதப்பட்டது.

தண்ணீர் பரிசோதனை

மண் பரிசோதனையில் இன்னொரு முக்கியமான அம்சம் தண்ணீர் கொண்டு செய்யப்படுவதாகும். மேற்கண்ட முறைப்படி வெட்டிய குழியில் அதிகாலை நேரத்தில் மஞ்சள்தூள் கலக்கப்பட்ட சுத்தமான ஊற்று நீரை அல்லது நதி நீரை நிரப்பவேண்டும். அவ்வாறு நீரை நிரப்பி விட்டு மறுநாள் வந்து பார்க்கும்போது குழியில் நீர் இருந்தால் அது உத்தமமான நிலம் ஆகும். நீர் இல்லாமல் ஈரப்பதம் மட்டும் இருந்தால் மத்தியமான நிலமாக கருதப்படும். ஈரப்பதமும் இல்லாமல் சுத்தமாக காய்ந்து போயிருந்தால் அது சரியான நிலமல்ல என்ற முடிவுக்கு வந்தார்கள்.

Comments