தலைக்கவசம் உயிர்க்கவசம்

தலைக்கவசம் உயிர்க்கவசம்

"தலைக்கவசம் உயிர்க்கவசம்', "இருக்கை பெல்ட்டை கட்டாயம் அணிய வேண்டும்', "மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது' போன்ற வாசகங்கள் மூலம் வாகன விபத்து உயிரிழப்புகளை தவிர்க்கும்விதமாக போக்குவரத்துத் துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.எனினும், இந்த விழிப்புணர்வுகளை தூக்கி எறிந்துவிட்டு, தலைக்கவசம் அணியாமல்தான் செல்வோம் என்று த்ரில்லான பயணம் மேற்கொள்வோரை சாலைகளில் இன்று அதிகமாக பார்க்க முடிகிறது.இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு 5,01,423 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 69,059 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. விபத்துகள் அதிகம் நிகழும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அடிப்படையில் உத்தரப் பிரதேசம் (17,666) முதலிடத்திலும், தமிழ்நாடு (15,642), மகாராஷ்டிரம் (13,212) முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.தமிழகத்தில் தலைநகர் சென்னையில்தான் சாலை விபத்துகளில் அதிபட்சமாக 886 பேர் உயிரிழந்துள்ளனர். கோவை, திருச்சி அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.62 சதவீத சாலை விபத்துகள், அதிவேகமாக செல்வதாலேயே நிகழ்வதாகவும், இதனைத் தடுக்க நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.கடந்த 2011 மே மாதம், சென்னை விருகம்பாக்கம் போக்குவரத்து மண்டல அதிகாரி அலுவலகம் எதிரே இருசக்கர வாகனத்தில் சென்றவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த வழக்கில், மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவிட்ட இழப்பீடு தொகை போதுமானதாக இல்லை என்றும், உயர்த்தி வழங்க உத்தரவிடக் கோரியும் உயிரிழந்தவரின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு 2015 ஜூன் மாதம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 129-இன்படி கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணியாததால் விலை மதிக்க முடியாத உயிரை இழக்க நேரிடுகிறது.இது தொடர்பாக உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் அதிகாரிகள் அதைப் பின்பற்றுவதில்லை. பொதுவாக சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பெரும்பாலானோர் தலைக்கவசம் அணிவதில்லை. தலைக்கவசம் அணியாத காரணத்தால், தமிழகத்தில் மட்டும் 2014-ஆம் ஆண்டில் விபத்தில் சிக்கி 6,419 பேர் இறந்துள்ளனர். அதாவது நாளொன்றுக்கு 17 பேர் விபத்தில் இறந்துள்ளனர்.தலைக்கவசம் அணியாததால், கடந்த 2005-ஆம் ஆண்டு 1,670-ஆக இருந்த உயிரிழப்பு 2014-ஆம் ஆண்டில் 6,419-ஆக உயர்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.எனவே, தலைக்கவசம் அணிவது தொடர்பாக நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது. இந்த உத்தரவுகளை, வாகன ஓட்டிகளை தேவையில்லாமல் தொந்தரவு செய்வதற்கு போலீஸ் அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தக்கூடாது.அவ்வாறு போலீஸார் மீது ஏதாவது லஞ்சப் புகார் வந்தால், அதை கடுமையாக கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 2015 ஜூலை 1-ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு தமிழக உள்துறைச் செயலர், மாநில காவல் துறைத் தலைவர் இருவரும் தெரிவிக்க வேண்டும்.இருசக்கர வாகன ஓட்டிகள் ஐ.எஸ்.ஐ. முத்திரை பொறிக்கப்பட்ட தலைக்கவசங்களை மட்டுமே வாங்கி அணிய வேண்டும் என உத்தரவிட்டது.இந்த உத்தரவைத் தொடர்ந்து, சுமார் மூன்று மாதங்கள் தலைக்கவச விற்பனை தமிழகம் முழுவதும் ஜோராக நடைபெற்றது. பற்றாக்குறைக்கு பக்கத்து மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.மேலும், போக்குவரத்துத் துறையினரும் தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களை வாகன ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.எனினும், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், மாநிலத்தில் 50 சதவீத அளவுக்கே கட்டாய தலைக்கவச உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள்கூட தலைக்கவசம் அணியாமல் செல்லும் நிலை உள்ளதாகவும் உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.மேலும், இந்த உத்தரவை முழுவதுமாக நடைமுறைப்படுத்தாதது ஏன் என்று தமிழக அரசிடம் கடந்த மாதம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.தலைக்கவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிமேல் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என்னும் திட்டத்தை மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் போக்குவரத்து போலீஸார் 2016 ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தி உள்ளனர். இங்கும் அதேபோன்ற உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தலாம்.தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை இயக்க முடியாத வகையில் வாகனங்களை வடிவமைத்து தயாரிக்கும் நிறுவனங்களை அரசு ஊக்குவிக்கலாம். இதனால் தமிழகத்தில் கட்டாய தலைக்கவச உத்தரவு அமல்படுத்த வழி ஏற்படும். தலைக்கவசம் அணிந்து பயணம் செய்வோம். விலைமிதப்பில்லாத உயிரைக் காப்போம்!

Comments