இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக எம்.எஸ்.கே.பிரசாத் நியமனம்

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக எம்.எஸ்.கே.பிரசாத் நியமனம்

வாரிய செயலாளராக அஜய்ஷிர்கே மீண்டும் தேர்வு

இந்திய கிரிக்கெட் வாரிய ஆண்டு பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் அனுராக் தாகூர் தலைமையில் நடைபெற்ற போது எடுத்தபடம்.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக முன்னாள் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.கே.பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வாரிய செயலாளராக அஜய்ஷிர்கே போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எம்.எஸ்.கே.பிரசாத் நியமனம்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 87-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. தலைவர் அனுராக் தாகூர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் இந்திய சீனியர் அணியின் தேர்வு குழு தலைவராக முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான எம்.எஸ்.கே.பிரசாத்தை நியமனம் செய்து முடிவு எடுக்கப்பட்டது. ஆந்திராவை சேர்ந்த 41 வயதான பிரசாத் 6 டெஸ்ட் மற்றும் 17 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார். சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வு குழுவின் பதவி காலம் சமீபத்தில் முடிவு அடைந்ததை தொடர்ந்து புதிய தேர்வு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

லோதா கமிட்டி பரிந்துரை புறக்கணிப்பு

தேர்வு குழு உறுப்பினர்களாக தேவங் காந்தி, ஜதின் பிராஞ்பே, சரன்தீப் சிங், ககன்கோடா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ககன்கோடா, ஜதின் பிராஞ்பே ஆகியோர் டெஸ்ட் போட்டியில் விளையாடியது கிடையாது. டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்டவர்களையே சீனியர் தேர்வு குழுவின் உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்றும், 5 பேருக்கு பதிலாக 3 பேர் கொண்ட தேர்வு குழுவை நியமிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்டு இருந்த ஆர்.எம்.லோதா கமிட்டி அறிவுறுத்தி இருந்தது. ஆனால் லோதா கமிட்டியின் பரிந்துரையை கடைபிடிக்காமல் புதிய தேர்வு குழுவை இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்து இருக்கிறது. ஜூனியர் அணியின் தேர்வு குழு தலைவராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தொடருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனியர் அணி தேர்வு குழு தலைவரை விட ஜூனியர் அணி தேர்வு குழு தலைவர் அதிக சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் அணியின் தேர்வு குழு தலைவராக ஹேமலதா கலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அஜய்ஷிர்கே போட்டியின்றி தேர்வு

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஷசாங் மனோகர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்மனாக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து செயலாளராக இருந்த அனுராத் தாகூர் தலைவர் பதவியை ஏற்றார். செயலாளராக அஜய்ஷிர்கே கடந்த ஜூலை மாதத்தில் நியமிக்கப்பட்டார். செயலாளர் பதவிக்கு முறைப்படியான தேர்தல் நேற்று நடந்தது. அஜய்ஷிர்கே தவிர யாரும் இந்த பதவிக்கும் விண்ணப்பிக்காததால் அவர் போட்டியின்றி செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டங்களில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதியாக தலைவர் அனுராக் தாகூர் தொடர்ந்து கலந்து கொள்வார் என்றும் மாற்று பிரதிநிதியாக சரத்பவார் பங்கேற்கலாம் என்றும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. புதிய நன்னடத்தை கமிட்டி கமிஷனரை நியமிக்க தலைவர் மற்றும் செயலாளருக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவசர கூட்டம்

லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்தின அவசர கூட்டம் வருகிற 30-ந் தேதி மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments