சிறு வணிகக் கடனை திருப்பி செலுத்துவதில் சுணக்கம் சிறப்புத் திட்டங்கள் மூலம் வசூலிக்க கூட்டுறவு வங்கிகள் திட்டம்

சிறு வணிகக் கடனை திருப்பி செலுத்துவதில் சுணக்கம் சிறப்புத் திட்டங்கள் மூலம் வசூலிக்க கூட்டுறவு வங்கிகள் திட்டம்

தமிழகத்தில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, தற்காலிக தங்குமிடங்களில் வசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தினசரி பொருட்களை வாங்கி விற்று வரும் சிறு வணிகர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணங்களை அறிவித்து, அளித்த முதல்வர் ஜெயலலிதா, சிறுவணிகர்கள் பாதிப்பை போக்கவும் திட்டத்தை கொண்டுவந்தார்.

இதன் மூலம், சிறுவணிகர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் வட்டியின்றி ரூ.5 ஆயிரம் கடன் வழங்கப்படும் என அறிவித்து அதை ஜனவரி 22-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்படி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் சிறு வணிகர்களுக்கு கடன் வழங்கப்பட்டது. வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கும் இலவசமாக கணக்கு தொடங்கப்பட்டு, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் கடன் வழங்கப்பட்டது. மேலும், இந்த கடன் தொகையை வாரம் ரூ.200 வீதம் 25 வாரங்களில் செலுத்தும் வகையிலும் எளிமைப்படுத்தப்பட்டது.

இதன்படி, 23 மாவட்ட கூட்டுறவு வங்கி மற்றும் 128 நகர கூட்டுறவு வங்கிகளில் கடன்கள் வழங்கப்பட்டன. இந்த வகையில் கூட்டுறவு வங்கிகள் தங்கள் சொந்த நிதியில் இருந்து 2 லட்சத்து 22 ஆயிரத்து 592 பேருக்கு ரூ.111.26 கோடி அளவுக்கு கடன் வழங்கின. இந்த வங்கிக் கடன் பெற்றவர்கள் உரிய காலத்துக்குள் திருப்பி செலுத்தினால், குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டத்தையும் கூட்டுறவுத்துறை அறிவித்தி ருந்தது. ஆனால், வணிகர்களில் ஒரு பகுதியினர் இக்கடன் தொகையை சரியாக திருப்பி செலுத்தவில்லை என கூட்டுறவுத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் மேலும் கூறும்போது, ''வணிகர்களை சந்தித்து, முதல்வரின் திட்டத்தை எடுத்துக் கூறி, சரியான பயனாளிகளுக்கு மட்டுமே கூட்டுறவு வங்கிகளில் இருந்து அவர்கள் வங்கிக் கணக்குக்கு ரூ.5 ஆயிரம் கடன் வழங்கப்பட்டது. கடன் வாங்கிய பலர் திருப்பிச் செலுத்தவில்லை. அவர்கள் எண்ணிக்கை தொடர்பாக கணக்கெடுத்து வருகிறோம். கூட்டுறவு வங்கிகளின் சொந்த நிதியில் இருந்து வழங்கப்பட்டதால், அதை சிறப்புத் திட்டங்கள் அறிவித்து வசூலிக்கலாமா என்பதையும் ஆலோசித்து வருகிறோம்'' என்றனர்.  

Comments