அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜெர்மனியின் கெர்பர் பட்டம் வென்றார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஜெர்மனியின் கெர்பர் பட்டம் வென்றார்

நியூயார்க் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனி வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் சாம்பியன் பட்டம் வென்றார். நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் அவர் செஸ் வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவாவை வென்றார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான பிரிவில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஏஞ்சலிக் கெர்பரும், 10-வது இடத்தில் உள்ள கரோலினா பிளிஸ்கோவாவும் மோதினர். இதில் முதல் செட்டை கெர்பரும் 2-வது செட்டை பிளிஸ்கோவாவும் கைப்பற்ற 3-வது செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஏஞ்சலிக் கெர்பர் கடுமையாக போராடி 6-4 என்ற புள்ளிக்கணக்கில் இந்த செட்டைக் கைப்பற்றினார். இதன்மூலம் 6 3, 4 6, 6 4 என்ற செட்கணக்கில் கெர்பர் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் வென்றது குறித்து நிருபர்களிடம் கெர்பர் கூறியதாவது: ஒரே ஆண்டில் 2 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றது எனக்கு உற்சாகம் அளிக்கிறது. இதன்மூலம் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது. டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பிடிக்கவேண்டும் என்பது நான் சிறுவயதில் இருந்து கண்டுவந்த கனவாகும். அந்தக் கனவு இப்போது நிறைவேறி இருக்கிறது. இன்றைய போட்டியில் 2-வது செட்டை இழந்தபோது சற்று பதற்றமாக இருந்தது. இருப்பினும் சமாளித்துக்கொண்டு ஆடினேன். இப்போட்டியில் பிளிஸ்கோவா சிறப்பாக ஆடினார். அவருக்கு எனது வாழ்த்துகள். இவ்வாறு கெர்பர் கூறினார். இறுதிப் போட்டியில் தோற்ற பிளிஸ்கோவா நிருபர்களிடம் கூறும்போது, "இன்றைய போட்டி கடுமையாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். இருந்தபோதிலும் என்னால் முடிந்தவரை போராடினேன். 2-வது செட்டில் வெற்றிபெற்றதும் எனக்கு இப்போட்டியில் வெற்றி பெறலாம் என்ற தன்னம்பிக்கை வந்தது. ஆனால் கெர்பர் 3-வது செட்டில் சிறப்பாக ஆடி என்னிடம் இருந்து வெற்றியைப் பறித்துவிட்டார். இறுதிப் போட்டியில் தோற்றபோதிலும் கடந்த 2 வாரங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி" என்றார். 

Comments