SCROL

Friday, September 30, 2016

மருத்துவத் துறையில் தேனீ

மருத்துவத் துறையில் தேனீ

நமது மோப்ப சக்தியை விட 100 மடங்கு நுகரும் சக்தி கொண்டவை, தேனீக்கள். சில மைல்கள் தொலைவில் இருந்தே குறிப்பிட்ட பூவின் வாசனையை அறிந்து கொள்ளும் திறமை பெற்றவை, அவை.நாய்களின் மோப்ப சக்தியை வெடிகுண்டுகளை, போதை மருந்துகளை கண்டுபிடிக்க பயன்படுத்துகிறோம். அதே போல கூர்மையான மோப்ப சக்தி கொண்ட தேனீக்களையும் நாம் பழக்கி பயன்படுத்தலாமா என்ற சிந்தனையின் விளைவு தான் தேனீ பயோசென்ஸார் என்ற மருத்துவ முறை. இதை போர்த்துகீசிய டிசைனர் சுஸானா ஸோரெஸ் என்பவர் வடிவமைத்திருக்கிறார். அதனால் இப்போது தேனீக்களும் மருத்துவர்களின் உதவியாளராக மாறிவிட்டன. சுஸானா ஸோரெஸ் தற்போது லண்டன் சவுத்பேங்க் யுனிவர்சிட்டியில் முதுநிலை பேராசிரியை ஆக பணி புரிந்து வருகிறார்.ஸோரெஸ் தேனீக்கள், நுகர்வதற்காகவே பிரத்யேகமாக கண்ணாடி குடுவை ஒன்றை உருவாக்கி இருக்கிறார். அதனுள் அடுக்கடுக்கான கோளங்கள் உள்ளன. ஊது துளை வழியாக செலுத்தப்படும் காற்றை நுகரும் தேனீக்கள் நெருங்கி வருவதையும் அல்லது விலகி ஓடுவதையும் வைத்து அளவீடுகள் நிர்ணயிக்கப்படுகின்றன. நுகரும் தேனீக்களுக்கு இனிப்பு கலந்த தண்ணீரை கொடுத்து ஊக்கப்படுத்து கிறார்கள். சோதனையின் பிற்பாடு அவை வளர்ப்புத் தேன் கூடுகளுக்கு விடுவிக்கப்படுகின்றன.மனிதனை பாதிக்கும் காசநோய், நுரையீரல், தோல், கணைய புற்றுநோய், மலேரியா, டெங்கு, சர்க்கரை நோய்களை பழக்கப்பட்ட தேனீக்கள் இனம் கண்டறிகின்றன. 'நோய்களை கண்டு பிடிப்பதற்காக மட்டுமே இவற்றை நான் உருவாக்கவில்லை, மனிதன் இயற்கையோடு இணைந்து இருக்க வேண்டிய அவசியத்தையும், நம்மால் உணர முடியாத சாத்தியக்கூறுகளையும் வெளிப்படுத்துவதே எனது நோக்கம், இது சோதனையின் முதல் கட்டம் மட்டுமே. இதற்கான மேம்பட்ட கருவியை இனிமேல் தான் கண்டுபிடிக்க வேண்டும்' என தெரிவிக்கிறார் ஸோரெஸ். அதிகரித்து வரும் மருத்துவ செலவுகள் இயற்கையின் மூலம் குறைந்தால் சரி.

No comments:

Post a Comment