மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த பள்ளிகளில் ஆய்வுக் குழு: தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த பள்ளிகளில் ஆய்வுக் குழு: தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்த குழுக்கள் அமைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள  கடிதத்தில் கூறியிருப்பதாவது:ஊராட்சி  ஒன்றியம், அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆண்டாய்வு மற்றும் பள்ளிகளைப் பார்வையிட்டு வருகின்றனர்.  அதன் தொடர்ச்சியாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பள்ளிகளில் திடீரென பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், அறிவியல், நர்சரி உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோரை குழுக்களாக ஒருங்கிணைத்து, ஒரு குழுவில் 2 உறுப்பினர்கள் உள்ளவாறு பிரித்து முன்னறிவிப்பின்றி பள்ளிகளைப் பார்வை மேற்கொள்ள ஆணை வழங்க வேண்டும். குழுவில் உள்ள உறுப்பினர்கள் அவர்கள் பணிபுரியும் ஒன்றியம் அல்லாது வேறு ஒன்றியத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.முன்னறிவிப்பின்றி பார்வையிடும் பள்ளிகளைத் தேர்வு செய்யும்போது, தொடர்ந்து புகார் வரும் பள்ளிகள், கல்வித் தரத்தில் பின்தங்கியுள்ள பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.முன்னறிவிப்பின்றி பார்வையிடும்போது பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் வருகை தருகின்றனரா, பள்ளி வேலை நேரம் முழுவதும் பள்ளியில் இருக்கின்றனரா, பள்ளி வேலை நேரம் முடிந்த பிறகு தான் பள்ளியைவிட்டு செல்கின்றனரா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.மாணவர்களின் கற்றல் அடைவு திறன், தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசிப்புத் திறன், எழுதும் திறன், கணித அடிப்படை செயல்பாடுகள் ஆகியவை குறித்து மாணவர்களின் முன்னேற்றத்தை சோதித்து பார்க்க வேண்டும். பள்ளி நூலக புத்தகங்களை முறையாக பயன்படுத்த செய்ய வேண்டும்.  துணை பாடப் புத்தகங்களை மாணவர்களை வாசிக்க செய்து சோதித்து பார்க்க வேண்டும்.பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்டங்களான பாடப் புத்தகங்கள், புத்தகப் பை, காலணி, கணித உபகரணப்பெட்டி ஆகியவை முறையாக வழங்கப்பட்டது, பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கற்றல், கற்பித்தல் உபகரணங்கள், ஆங்கில உச்சரிப்பு சார்ந்த குறுந்தகடுகள், மடிக்கணினி, கணித உபகரணப் பெட்டி ஆகியவற்றை முறையாக பயன்படுத்துவதை கண்காணிக்க வேண்டும். பள்ளிக் கழிப்பறை தண்ணீர் வசதியுடன் சுகாதாரமான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். ஊரக வளர்ச்சித் துறை மூலம் பணியமர்த்தப்பட்டுள்ள பகுதிநேர துப்புரவு பணியாளர்கள் முறையாக பணி செய்கிறார்களா என்பதை உறுதி செய்தல் வேண்டும்.  பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட வேண்டும்.  பள்ளி வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.  எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழி கற்றல் மூலம் பெற்றுள்ள தரம் குறித்தும் ஆய்வு செய்தல் வேண்டும்.   மேற்கண்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆசிரியர்களுடன் விவாதிக்க வேண்டும்.குழுக்கள் செய்த பள்ளி மேற்பார்வை குறித்த அறிக்கையை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.  அந்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) ஆகியோர் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பள்ளி பார்வை அறிக்கையை தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments