தமிழக பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளைப் பற்றிக் கடுமையாக விமர்சித்துள்ளது சி.ஏ.ஜி எனப்படும் மத்திய தணிக்கைத் துறை அறிக்கை.

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளைப் பற்றிக் கடுமையாக விமர்சித்துள்ளது சி.ஏ.ஜி எனப்படும் மத்திய தணிக்கைத் துறை அறிக்கை.

' பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை, மத்தியப் பட்டியலுக்கு கொண்டு செல்லத் தூண்டும் வகையிலேயே மாநில அரசின் செயல்பாடுகள் அமைந்துவிட்டன' எனக் கொந்தளிக்கின்றனர் கல்வியாளர்கள். சட்டமன்றக் கூட்டத் தொடரில், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்த மத்திய தணிக்கைத்துறையின் அறிக்கை முன்வைக்கப்பட்டது. அதில், 2009 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான ஆட்சிக் காலத்தில் அரசின் செயல்பாடுகள் குறித்து விரிவாக அலசப்பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளிக் கல்வித்துறையில் அரசின் நிர்வாக சீர்கேடுகள் குறித்து விளக்கியுள்ளது சி.ஏ.ஜி. இதுகுறித்து நம்மிடம் பேசிய சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், " எல்லாம் அரசு சாதனை என்பதுதான் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் உள்ளடக்கமாக இருந்தது. ஆனால், தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் மூடப்படுவது குறித்தோ, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஐந்து  முதல் 10 வரைதான் என்பதை பற்றியோ அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை.தனியார் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்படும் அபாயம் பற்றியும் மானியக் கோரிக்கையில் எதுவுமே சொல்லப்படவில்லை. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் கடந்த 9 ஆண்டுகளில் 90 ஆயிரம் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. அரசுப் பள்ளிகள் மூடப்பட்டால் ஏழைக் குழந்தைகள் எங்கே செல்வார்கள்? பலமான எதிர்க்கட்சியாக உள்ள தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் இந்தப் பிரச்சனைகளைப் பற்றி பேசவில்லை.பல அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள், மைதானங்கள் இல்லை. உதாரணமாக, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 30 பள்ளிக் கூடங்களில் 11 பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களே கிடையாது. ஈரோடு ரயில்வே காலனியில் உள்ள ஒரு பள்ளியில் 16 வகுப்பறைகள், கல்வித்துறையின் பொருள்களை சேமித்து வைப்பதற்கான அறைகளாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சில இடங்களில் திறந்தவெளியில் சமைக்கிற ஏற்பாடும் தீயணைக்கும் கருவிகள் உரிய முறையில் பராமரிக்கப்படாததையும், பல பள்ளிக்கூடங்களில் போதுமான கழிப்பறை வசதிகள் இல்லாததையும் சி.ஏ.ஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.இதேபோன்று மாணவர்களுக்கு கொடுக்க வேண்டிய 724 மடிக்கணினிகள் திருடுபோய்விட்டதாகவும் இதில் 558 மடிக்கணினிகள் யார் எடுத்தது என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பள்ளிகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் அறிக்கை சொல்கிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல இடங்களில் மடிக்கணினி வழங்கப்படாதபோது அரசு உதவி பெறும் சில கல்லூரிகளில் உள்ள சுயநிதி கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது. சி.ஏ.ஜி அறிக்கை குறித்து முதல்வர் என்ன சொல்லப் போகிறார்?" எனக் கொந்தளித்தார்.பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம். " சி.ஏ.ஜி அறிக்கையானது, பள்ளிக் கல்வியில் நடக்கும் பிரச்னைகளைப் பற்றிச் சொல்கிறது. ஏற்கெனவே, ' பள்ளிக் கல்வி நிர்வாகம் சரியில்லை; பொதுப் பட்டியலில் இருந்து மத்தியப் பட்டியலுக்கு கல்வியை மாற்ற வேண்டும்' என்பதை நோக்கி மத்திய அரசு செல்கிறது. அதையொட்டியே தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த இருக்கிறார்கள். தமிழக பள்ளிக் கல்வித்துறையை சீரமைக்கும் வேலையை அரசு வேகப்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குப் பாடவாரியான ஆசிரியர்கள் இல்லை என்பது பெரும் அவலம். இதை சி.ஏ.ஜி அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இது ஏதோ இந்த ஆண்டுக்கான பிரச்னை இல்லை.அரசுப் பள்ளிகளின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் அளவுக்குப் போதிய அதிகாரிகள் நியமிக்கப்படுவதில்லை. தற்போது இருக்கும் 65 கல்வி மாவட்ட அதிகாரிகளே அனைத்து விவகாரங்களையும் கவனிக்கிறார்கள். முன்பு சத்துணவு, சீருடை, பாடப் புத்தகம் போன்றவை சரியாக விநியோகிகப்படுகிறதா எனக் கண்காணித்தார்கள். இன்றைக்கு 14 விதமான விலையில்லா பொருட்களை மாணவர்களுக்கு வழங்குகிறார்கள். இவற்றைக் கவனிப்பதற்கே அதிகாரிகளுக்கு நேரம் சரியாக இருக்கிறது. இதில் மாணவன் படித்தானா? பள்ளிக்கு வந்தானா? கற்றல் சரியாக நடக்கிறதா? ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வருகிறார்களா என்பதையெல்லாம் கண்காணிக்க முடிவதில்லை. அடிப்படையில் இருந்தே பள்ளிக் கல்வி நிர்வாகத்தை சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு இருக்கிறது" என்றார் ஆதங்கத்தோடு.

Comments