மரபுநிலை திரியின்...

மரபுநிலை திரியின்...

உயிரற்ற பொருட்களில் இருந்தே உயிர் உருவாகி இருக்கிறது. உயிரை வளர்க்கும் உபாயம் அறிந்து உடலை வளர்க்கிறோம். உடலை வளர்ப்பது நம் உயிரைக் காப்பதற்கும் வளர்ப்பதற்கும் மட்டும் இல்லை இன்னொரு உயிரை வளர்க்கவும் காக்கவும்தான். உடலை வளர்க்கவும் உயிரைக் காக்கவும் இன்னொரு உயிர் தேவைப்படுகிறது. வேட்டையாடியும் நம் உடலை வளர்த்திருக்கிறோம். அதைக்கொன்றே - அதைக்கொண்டே உயிரைக் காத்திருக்கிறோம். ஓர் உயிர் வளர மற்றொன்றின் உயிர் தேவைப்பட்டிருக்கிறது - தேவைப்படுகிறது. இன்னொரு உயிரைக் கொல்லாமல் நம் உயிரை வளர்க்க முடியாதா? சைவமாக இருந்தபோதிலும் காய்களைச் சமைக்கிறபோது விதைகளின் அடுத்த தலைமுறையின் வாழ்வு மறுக்கப்படுகிறதே. தாவரங்களுக்கு உயிர் உண்டு என்று விஞ்ஞானி போஸ் கூறுவதற்குப் பல நூற்றாண்டுக்கும் முன்பே தொல்காப்பியர் சொல்லி இருக்கிறாரே. பறவை, விலங்கு மனிதர்கள் என்ற பாகுபாடின்றி உடலை வளர்க்கவும் அடுத்தத் தலைமுறை உயிரைக் காக்கவும் உயிரைக் கொல்ல வேண்டி இருக்கிறது. கொல்வதில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் வேறுபாடில்லை. எனில் முன்னங்கால்களைக் கைகளாக மாற்றிக் கொண்டதால் மட்டும் விலங்குகளிடமிருந்து மனிதர்கள் வேறுபடுவதாகச் சொல்ல முடியுமா? உயிரைக்காக்க இன்னொரு உயிரை அழிக்கும் காலத்திலிருந்து உடன்வாழும் இன்னொரு உயிரை வளர்க்க முன்னங்கால்கள் நீண்டபோதுதான் கால்களில் இரண்டு கைகளாகி இருக்கின்றன.விலங்கிலிருந்த மனிதனின் பரிணாமம் அப்போதுதான் வேர்விடத் தொடங்கி இருக்கிறது. ஒன்றை அழித்து உயிர் வளர்ப்பது அனைத்து உயிரினத்திற்கும் பொது என்றாலும், தான் அழிக்கப் போகிற உயிரை - அடித்துச் சாப்பிடப் போகிற உடலை வளர்க்கத் தொடங்கிய காலமே நாகரிகம் வாழத் தொடங்கிய காலமாக இருந்திருக்கிறது. உடலை வளர்க்கப் பயன்படும் பறவை, விலங்கு, தாவரம் எதுவாக இருந்தாலும் அவற்றை வளர்க்கிறோம், அவற்றால் வாழ்கிறோம். திட்டமிடாமலே பறவைகளும் விலங்குகளும் உணவுக்காக மற்றவற்றை அழிக்கலாம். அறியாமலே தாவரங்களின் விதை பரவ அவை உதவலாம். ஆனால், மனிதர்கள் திட்டமிட்டு வளர்க்கிறார்கள். வளர்க்காமல் அழிப்பது விலங்கின வாழ்க்கை. அழித்தலோடு வளர்த்தலும் சேர்ந்தது மனித வாழ்க்கை. வெட்டுவதற்காக என்றாலும் மரம் வளர்க்க வேண்டும். நம்மால் அழிக்கப்படுபவை நம்மால் வளர்க்கப்பட வேண்டும். வளர்க்காதவர்களுக்கு வெட்ட உரிமை இல்லை - அடுத்த தலைமுறையை வளர்க்காதவர்களுக்கு இந்தத் தலைமுறையை அழிக்க உரிமை இல்லை. அடுத்த தலைமுறை எப்படித் தொடர்கிறது? மரத்தில் வேப்பம் பழம் தின்ற பறவைகள்கூட, விதைகளை வயிற்றில் சுமந்து சென்று காப்பாற்றி விதைக்கின்றன. கிளியின் வயிற்றிலிருந்து விழுந்தாலும் வேப்ப விதையிலிருந்து வேறொன்று முளைப்பதில்லை. கசப்பாகத்தான் இலை விடுகிறது, காய்க்கிறது. பழுக்கும்போது மட்டும் இனிப்பு வருகிறது. இனிப்புக்காகப் பறவைகள் வருகின்றன. அடுத்த தலைமுறையை வளர்க்க இனிப்பைக் கனிந்து தருகிறது. கற்சுவர்களின் இடையே விழுந்தாலும் மரக்கிளை இடையே விழுந்தாலும் அரச விதை, ஆலம்விதை அப்படி அப்படியே அங்கேயே வேர் விடுகின்றன. மழையில் காற்றில் அடித்துச் செல்லப்பட்டாலும் தாவரங்கள் வாய்ப்பான இடங்களில் எல்லாம் வேர்விடப் பார்க்கின்றன. வேர்விடும் வாய்ப்பு வரும்வரை விதை உறங்குகிறது. பிறந்த இடத்தில் விழுந்து முளைத்து வளர்கிறபோதும், பறவை விலங்குகள் வயிற்றில் உணவாகும்போதும், வேறு இடத்தில் போய்விழுந்து முளைத்து வளர்கிறபோதும், நெற்றாகி வெடித்துக் காற்றில் இறக்கை விரித்துப் பறந்துபோய் விழுந்து முளைக்கிறபோதும், வாய்ப்புக்காகக் காத்திருந்து உறங்கி விழித்து முளைத்து வளர்கிறபோதும் விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைப்பதில்லை. இப்படி அடுத்த தலைமுறைக்கு அந்த உயிரின் இயல்பைக் கடத்துவது மரபாக இருக்கிறது. தொல்காப்பியர் நிலமும் பொழுதும் முதற்பொருள் என்று சொல்கிறார். முதற் பொருளில் கடவுளும் இல்லை, மனிதனும் இல்லை. "மானுட வரலாறு, இயற்கை உலகின் வரலாற்றின் ஒரு பகுதி' என்றார் மார்க்ஸ். மானுடப் பரிணாமம், வளர்ச்சியின் தொடர்ச்சி இல்லை, பாய்ச்சல் என்று சொல்கிறார்கள். வைரஸ் முதல் திமிங்கிலம் வரை எல்லா உயிர்களும் செல்தொகுப்புகளே. செல்கள் இருவகை. கரு இல்லாதவை (புரோகரயோட்டிக்) - இருப்பவை (யூகரயோட்டிக்). இருவகை செல்லிலும் டி.என்.ஏ. இருக்கிறது. மானுட மூதாதையின் தொல்லுயிர் - கருவுடையசெல் -யூகரயோடிக்செல். முதல் வகையில் மிதந்து கொண்டிருக்கும். இரண்டாவது வகையில் கருவில் இருக்கும். ஒருவகை சவ்வுப் பொருளால் இருவகை செல்லுமே மூடப்பட்டிருக்கும். செல் கருவில்தான் ஆர்.என்.ஏ. நகலெடுப்பு நிகழ்கிறது. ஒவ்வொரு செல்லிலும் ஏராளமான டி.என்.ஏ.க்கள் உள்ளன. மனிதனின் ஒரு டி.என்.ஏ.வின் நீளம் 2 மீட்டர். சுருண்டு இறுக்கமாக இருக்குமாம். அந்த இறுக்கமான பொட்டலம் தான் "குரோமோசோம்' என்கிறார்கள். மனித உடலில் 23 இணை குரோமோசோம்கள், அதாவது 46 குரோமோசோம்கள் உள்ளன. முந்திய தலைமுறையின் மரபைக் கடத்துகிற குரோமோசோம்சை மாற்ற முடியுமா என்று விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டனர். பழத்தை மொய்க்கும் ஈக்களைக் கொலம்பியாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டி.எச். மார்கன் 1933-இல் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். கூட்டத்தில் ஒரு ஈ மட்டும் பூனைக் கண் ஈயாக வெள்ளை நிறக் கண்ணோடு இருந்தது. மற்றவற்றின் கண்கள் சிவப்பு நிறமாக இருந்தன. அந்தப் பூனைக் கண் ஈயையும் சிவப்பு நிறக் கண்கள் கொண்ட இன்னொரு ஈயையும் தனியாகப் பிரித்துப் பின் சேர்த்து இனப் பெருக்கம் செய்தார். கிடைத்த ஈக்குஞ்சுகள் அனைத்திற்கும் கண்கள் சிவப்பாக இருந்தன. ஒரு ஈகூட பூனைக் கண்ணில் இல்லை. மார்கனுக்கு வியப்பாக இருந்தது. பூனைக் கண்ணுக்கும் சிவப்புக் கண்ணுக்கும் பிறந்த ஈக்களைக் கொண்டு மீண்டும் ஆய்வு செய்தார். இரண்டாவது தலைமுறையாகக் கிடைத்த ஈக்கள் அவ்வளவும் பூனைக் கண்களோடு இருந்திருக்கின்றன. முதல் தலைமுறையில் சிவப்புக் கண்களாகப் பிறந்தவை இரண்டாம் தலைமுறையில் வெள்ளை நிறக் கண்களோடு பிறந்திருக்கின்றன. மேலும் அவற்றுள் ஒன்று கூடப் பெண் ஈ இல்லை. பெண் ஈ இல்லாததால் அவற்றைக் கொண்டு அடுத்த தலைமுறையை உருவாக்க முடியாமையை உணர்ந்தனர். வேண்டிய பண்புகள் மட்டும் தொடரவும் வேண்டாதவை தொடராமலும் இருக்க மரபணுவைத் திரிக்க முயன்றார்கள். மார்கனின் உடன் காலத்தவரான ஹெர்மன் ஜோசப் முல்லர் மரபணுவில் திரிபு ஏற்படுத்தலாம் என்பதை உலகுக்கு அறிவித்தார். ஊடுகதிர் வழி ஈக்களின் மரபணுவில் திரிபு உருவாக்கினார். உயிரின் மரபணுவைப்போல மொழியின் மரபணுக்களைத் தொல்காப்பியர் சொல்கிறார். தமக்கு முன்பிருந்தவர்களின் கருத்தை அப்படியே மாற்றாமல் ஏற்கிறபோது மரபு என்று சொல்கிறார். தொல்காப்பியத்தில், நூன்மரபு, மொழிமரபு, தொகைமரபு, விளிமரபு, மரபியல் என்று இயல்கள் உள்ளன.

"எழுத்து எனப்படுப

அகரம்முதல்

னகரஇறுவாய் முப்பஃதுஎன்ப

சார்ந்துவரல் மரபின்மூன்றலங்கடையே'

Comments