சளி பிரச்னையை போக்கும் தூதுவளை

சளி பிரச்னையை போக்கும் தூதுவளை

சாதாரணமாக வரும் சளி நாளடைவில் சுவாச நாளங்களில் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. நாள்பட்ட சளி கெட்டியாகி நுரையீரலில் ஒவ்வாமை, மூச்சுமுட்டல் போன்றவற்றுக்கு  காரணமாகிறது. காசநோயாக மாறும் அபாயமும் உண்டு. சளி பிரச்னையை தீர்ப்பது குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். தூதுவளையை பயன்படுத்தி சளிக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தூதுவளை, துளசி, மிளகு, தேன். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட தூதுவளை செடியில் முட்கள் அதிகம் இருக்கும். தூதுவளை கத்திரி இனத்தை சேர்ந்தது. சுண்டைக்காயை போன்ற காய்களை கொண்டது. தூதுவளை, துளசி இலை ஆகியவற்றை ஒருபிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது மிளகுப்பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து குடித்துவர சளி குணமாகும். தூதுவளை, துளசி ஆகியவை சளியை போக்க கூடிய தன்மை கொண்டவை. நோய் எதிர்ப்பு சக்தி உடையது. நுண்கிருமிகளை போக்கவல்லது. முருங்கையை பயன்படுத்தி சளிக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: முருங்கை இலை, பூண்டு, மிளகுப்பொடி, உப்பு. ஒருபிடி முருங்கை கீரையுடன், தட்டி வைத்த பூண்டு, சிறிது மிளகுப்பொடி, உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலை, மாலை வேளைகளில் குடித்துவர சளி பிரச்னை சரியாகும். உடல் வலி போகும். உடல் பலம் பெறும். சளித்தொல்லைக்கு முருங்கை மருந்தாக விளங்குகிறது. இது, சளியை கரைத்து வெளித்தள்ளும் தன்மை கொண்டது.சப்போட்டாவை பயன்படுத்தி சளிக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சப்போட்டா, ஏலக்காய் பொடி, தேன். சப்போட்டா பழத்தின் தோலை நீக்கிவிட்டு சதை பகுதியை எடுக்கவும். இதனுடன் சிறிது ஏலக்காய் பொடி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து காலை, மாலை என 3 நாட்கள் சாப்பிட்டுவர சளி சரியாகும். மிகுந்த சுவை கொண்ட சப்போட்டா, நோய் நீக்கியாக விளங்குகிறது. உடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் சப்போட்டாவை தவிர்ப்பது நல்லது.சளியால் கண்கள் சிவந்து போதல், காய்ச்சல், உடல்வலி போன்றவை ஏற்படுகிறது. துளசி, தூதுவளை, சப்போட்டா ஆகியவை இப்பிரச்னைகளை போக்கும் மருந்துகளாக விளங்குகின்றன. காலையில் எழுந்தவுடன் சிலருக்கு குமட்டல், வாந்தி, பசியின்மை இருக்கும். பித்தம் அதிகம் இருந்தால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும். இதை சரிசெய்யும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக்கி, தேன் சேர்த்து அன்றாடம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் வாந்தி, மயக்கம், குமட்டல் இல்லாமல் போகும்.  

Comments