டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பள்ளிகளுக்கு இடையிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டி அடுத்த மாதம் நடக்கிறது

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பள்ளிகளுக்கு இடையிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டி அடுத்த மாதம் நடக்கிறது

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனை வெளிப்படுத்தும் பொருட்டு மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டிகள் அடுத்த மாதம் (அக்டோபர்) 18-ந் தேதி நடைபெற உள்ளது.

தரவரிசையில் 21-வது இடம்

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பில் 6 துறைகளும், முதுநிலை பட்டப்படிப்பில் 6 துறைகளும் உள்ளன. கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முக்கிய பங்காற்றி வருகிறது. இக்கல்லூரி என்.பி.ஏ., டி.சி.எஸ். அங்கீகாரம் மற்றும் ISO 9001:2008 தரச்சான்றிதழையும் பெற்றுள்ளது.

இன்று தேசிய அளவில் 327-வது தர வரிசையில் இருக்கும் இக்கல்லூரி மாநில அளவில் அண்ணா பல்கலைக்கழக தரவரிசையில் 21-ம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.

பள்ளி மாணவ-மாணவிகள்

பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனை வெளிப்படுத்தும் பொருட்டு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாநில அளவில் "அறிவியல் கண்டுபிடிப்பு போட்டிகள்" அடுத்த மாதம் (அக்டோபர்) 18-ந் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர்கள் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் இரு மாணவர்கள் ஒரு குழுவாக அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த போட்டியில் பங்குபெறும் மாணவர்கள் 'அறிவியல்-சார் கண்டுபிடிப்புகளின் கருத்து சுருக்கம் மற்றும் செயல் விளக்க மாதிரிகளின் தொகுப்பை' அக்டோபர் 1-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின் விவரப்பட்டியல் அக்டோபர் 7-ந் தேதி அறிவிக்கப்படும். பள்ளிகள் அக்டோபர் 12-ந் தேதிக்குள் தங்களின் பள்ளி மற்றும் மாணவர்களின் முழு விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு கட்டணம் கிடையாது.

முதல் பரிசு ரூ.10 ஆயிரம்

பள்ளி மாணவர்கள் தங்களுக்கான அடையாள அட்டை 'போனபைடு' சான்றிதழை தவறாமல் கொண்டு வர வேண்டும். போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.10 ஆயிரமும், 2-வது பரிசாக தலா ரூ.7 ஆயிரமும், 3-வது பரிசாக தலா ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். மேலும் 5 ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

இதுதொடர்பான விவரங்களுக்கு 04639-242482 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது sac-o-e-p-r-o-j-e-ct-ex-po16@gm-a-il.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

Comments