சென்னையில் மீண்டும் இலவச எஸ்எம்எஸ்? போக்குவரத்து நெரிசல் குறித்து தெரிவிக்க போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை

சென்னையில் மீண்டும் இலவச எஸ்எம்எஸ்?  போக்குவரத்து நெரிசல் குறித்து தெரிவிக்க போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். நகரின் பல பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடப்பதால் பல நேரங்களில் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் திடீர் ஆர்ப்பாட்டம், மறியல், சாலை விபத்து போன்ற காரணங்களாலும் வாகன போக்குவரத்து தடைபடுகிறது.

சில நேரங்களில் ஆம்புலன்ஸ் களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன. அவசரமாக வெளியூர் செல்பவர்கள் பஸ், ரயில் நிலையங்களுக்குக் குறிப்பிட்ட நேரத்தில் செல்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. நெரிசலைக் குறைக்க ஒருவழிப் பாதை உள்ளிட்ட பல திட்டங்களைச் போக்குவரத்து போலீஸார் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

நெரிசல், விபத்து காரணமாக போக்குவரத்து தடைபட்டால் அதுகுறித்த தகவலை வாகன ஓட்டிகளுக்கு அறிக்கும் வகையில் இலவச குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) சேவையைச் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகர போக்குவரத்து போலீஸார் அறிமுகம் செய்தனர். தனியார் நிறுவனம் ஒன்று, போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து இந்த இலவச சேவையை வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு வழங்கியது. இதன்மூலம் நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளை அறிந்து மாற்று பாதையில் வாகன ஓட்டிகள் எளிதாக சென்றனர்.

இதுபோன்ற திட்டம் ஏற்கெனவே மும்பை, டெல்லி, குர்கான், கொல்கத்தா, பெங்களூரு, புனே, போபால், ஹைதராபாத், நாக்பூர் ஆகிய இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்தே சென்னையிலும் இத்திட்டத்தைச் செயல்படுத்தினர். வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மத்தியில் இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

ஆனால், அந்தத் திட்டத்தை போக்குவரத்து போலீஸார் திடீ ரென கைவிட்டுவிட்டனர். இலவச குறுந்தகவல் திட்டத்தை மீண்டும் சென்னையில் கொண்டுவர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து திருவான்மியூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் குமார் கூறும்போது, ''எங்கு அதிக நெரிசல் உள்ளது என்ற தகவலைப் போக்குவரத்து போலீஸார் உடனுக்குடன் எஸ்எம்எஸ் மூலம் எங்களது செல்போனுக்கு அனுப்பினர். சவாரிக்குச் செல்லும் நாங்கள் நெரிசல் பகுதிகளைத் தெரிந்துகொண்டு மாற்றுப் பாதை வழியாக சென்று திரும்புவோம். இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது, அந்த திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால், பல நேரங்களில் நெரிசலில் சிக்கி அவதிப்படுகிறோம். மீண்டும் இலவச எஸ்எம்எஸ் திட்டம் கொண்டு வந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

இதுபற்றி சென்னை போக்கு வரத்து காவல் கூடுதல் ஆணை யர் அபய்குமார் சிங்கிடம் கேட்டபோது, ''சென்னையில் நெரி சலை கட்டுப்படுத்த பல நடவடிக் கைகளை எடுத்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக நெரிசல் பகுதிகளை வாகன ஓட்டிகளுக்குத் தெரிவிக்கும் இலவச எஸ்எம்எஸ் திட்டத்தை மீண்டும் தொடர்வது குறித்து ஆலோசித்து வருகிறோம். அதன்பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்'' என்றார்.

தகவல் பெறுவது எப்படி?

இலவச எஸ்எம்எஸ் திட்டம், கடந்த 2011-ல் கொண்டு வரப்பட் டது. இந்த சேவையை பெற விரும் புவோர், அவர்களது கைபேசியில் இருந்து JOIN CTP என டைப் செய்து 09219592195 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். எந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் உள்ளது என்ற தகவல் அவர்களுக்கு உடனடியாக அனுப்பப்படும். அதை வைத்து தாங்கள் செல்ல வேண்டிய பாதையில் நெரிசல் உள்ளதா என்பதை அறிந்து கொண்டு, மாற்று வழியில் சென்று வந்தனர். சென்னையில் 15 ஆயிரம் பேர் இத்திட்டத்தில் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments