பாகையைத் துறந்து பாவையின் மானம் காத்த பேரருளாளன்

பாகையைத் துறந்து பாவையின் மானம் காத்த பேரருளாளன்

கனடா, பிரிட்டிஷ், கொலம்பியா கட்லூபஸ் பகுதியைச் சேர்ந்தவர், சீக்கிய சமுதாயத்தைச் சார்ந்த ஒரு அன்பர். ஆற்றில் விழுந்து தவித்துக்கொண்டிருந்த ஒரு  பெண்மணியை காப்பாற்றத் தான் அணிந்திருந்த தலைப்பாகையைக் கழற்றி அவளை நோக்கி வீச, அதைப் பற்றிக்கொண்டு அந்தப் பெண்மணி கரைசேர்ந்து  உயிர்பிழைத்தாள். இந்தச் செய்தியை சமீபத்தில் செய்தித்தாள் களில் படித்தோம். எக்காரணம் கொண்டும் தம் தலைப்பாகையைக் கழற்றக்கூடாத சம்பிரதாயத்தைக்  கடைப்பிடிக்க வேண்டிய ஒரு சீக்கியர் ஒரு பெண்மணியைக் காப்பாற்றவும், அவள் உயிர்பிழைக்கவும் வேண்டி அவ்வாறு செய்த மனிதாபிமானத்தைப் பலரும்  பாராட்டிப் புகழ்ந்தார்கள் இதேபோன்ற ஒரு சம்பவம் ராமானுஜரின் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. ஸ்ரீராமானுஜரின் 1000மாவது அவதார ஆண்டை நாம்  சிறப்பித்துக் கொண்டாடிவரும் இவ்வேளையில் அந்தச் சம்பவத்தையும் நினைவுகூர்ந்து அவரைப் போற்றி மகிழ்வோம்.

திருமாலிடம் ஆழங்கால் பட்டு பக்தி புரிபவர்களை ஆழ்வார்கள், ஆசார்யர்கள், பிரபன்னன் என்று வைணவம் போற்றுகிறது. சந்நியாசிகளுக்கு திரி தண்டம்பவித்திரம் காஷாய உடை ஆகியவை முக்கியமான அடையாளங்கள். ராமானுஜருக்கு தண்டும், பவித்திரமுமாக முதலியாண்டானும் கூரத்தாழ்வாரும்  விளங்கினார்கள். மேலும் அவர் தலைப்பாகையும் அணிந்திருப்பார். பருத்திக்கொல்லை நாச்சியார் என்ற பெண்மணி ராமானுஜரிடம் மிகவும் பக்தி கொண்டவள்.  ஆனாலும் பரம ஏழை. வீதிவழியாக ராமானுஜர் பவனி வந்தபோது பொதுவாக அனைவரும் தத்தமது வீடுகளிலிருந்து வெளிவந்து ராமானுஜரை தரிசிப்பது  வழக்கம். ஒருசமயம் தன்னுடைய நகர்வலத்தின்போது பருத்திக்கொல்லை நாச்சியார் வீட்டருகே வந்தார் ராமானுஜர்.

அக்கம்பக்கத்து வீட்டார் வெளியே வந்து கரங்கள் கூப்பித் தனக்கு வணக்கம் செலுத்துவதை அன்புடன் கவனித்து அவர்களுக்குத் தம் மென்கரம் உயர்த்தி  ஆசியளித்துக் கொண்டிருந்தார் அவர். குறிப்பாக ஒரு வீட்டிலிருந்து அதாவது, பருத்திக்கொல்லை நாச்சியார் வீட்டிலிருந்து அங்கே குடியிருக்கும் ஒரே நபரான  அப்பெண்மணி வெளியே வராதது அவரைச் சிந்திக்கவைத்தது. உடனே அவள் மன வருத்தத்தில் இருப்பதை அவரால் மானசீகமாக உணர முடிந்தது. மாற்றுடை  இல்லாமல் ஒரே உடையையே நீரில் அலசிப்போட்டு அது காய்ந்தபிறகு அதையே உடுத்திக்கொள்ளும் ஏழ்மை நிலையில் அவள் இருப்பதையும் அவர்  அறிந்துகொண்டார். அந்த சமயத்திலும் நாச்சியார் அதே இயலாமையில் இருந்ததையும், அதனாலேயே அவளால் வீட்டைவிட்டு வெளியே வரமுடியவில்லை  என்பதையும் அவர் புரிந்து கொண்டார்.

உடனே தான் அணிந்திருந்த தலைப்பாகையை எடுத்தார், அதை அந்தப் பெண்மணி வீட்டிற்குள்ளாக வீசி எறிந்தார். அவரது பேரருளைக் கண்டு பெரிதும் மகிழ்ந்த  நாச்சியார் அந்தத் துணியைத் தன் மானம் காக்கும் வஸ்திரமாக அணிந்துகொண்டு வெளியே வந்து உள்ளம் தழுதழுக்க, கண்களிலிருந்து நீர் ஆறாகப் பெருக  ராமானுஜரைத் தரிசித்தாள். இச்சம்பவத்தைப் பருத்திக்கொல்லை நாச்சியார் வைபவம் என்று முன்னோர் கூறுவர். ஒரு பாமரப் பெண்ணுக்கு மாற்றுடை இல்லாத  அவலத்தைக் கண்ணுற்ற ராமானுஜர், அன்று முதல் தனக்கு தேவையில்லாத ஓர் அலங்காரமாக விளங்கிய தலைப்பாகையைத் துறந்தார். ராமானுஜர்  அணிந்திருந்த அந்தத் தலைப்பாகைக்கு பிரபன்ன பாகை என்று பெயர்.

Comments