"அண்ணா'ந்து பார்க்க வைத்தவர்!

"அண்ணா'ந்து பார்க்க வைத்தவர்!

ஓர் அரசியல்வாதிக்குத் தனது தலைமையோடு கருத்து வேறுபாடு ஏற்படலாம்; அதன் காரணமாக அவர் பிரிந்தும் போகலாம். ஆனால் அப்படிப் பிரிந்தபின் ஓர் அரசியல்வாதி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு "அண்ணா' என்று தனது தொண்டர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சி.என். அண்ணாதுரைதான் சிறந்த எடுத்துக்காட்டு. அண்ணா ஈ.வெ.ரா பெரியாரிடமிருந்து பிரிந்தார். பெரியார் அவரைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். விமர்சித்தார். ஆனால் அண்ணாவின் பதில் வித்தியாசமாக இருந்தது. "அவர் தந்தை; நான் தனயன்; உழைத்துப் பிழைக்கப் பிரிந்துள்ளேன்; நோக்கம் நிறைவேறியதும் நான் ஈட்டியவற்றைக் கொண்டு போய்த் தந்தையின் காலடியில் காணிக்கையாக்குவேன்' என்பதுதான் அண்ணாவின் பதிலாக இருந்தது. அண்ணாவிடமிருந்து ஈ.வி.கே. சம்பத் பிரிந்தார். அண்ணா, "காது புண்ணாகியுள்ளது. கடுக்கனைக் கழற்றி வைத்திருக்கிறேன்' என்றாரே தவிர, தன்னை விட்டுப் பிரிந்த தனக்கு மிகவும் பிடித்த சம்பத் மீது வசைமாரி பொழியவில்லை. 1957-இல் சட்டப் பேரவைத் தேர்தலில் நிற்க முடிவெடுத்தார். அந்தத் தேர்தலில் நின்று 15 பேர் வெற்றி பெற்றுச் சட்டப் பேரவைக்கு முதன்முதலாக சென்றார்கள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டாக்டர் யு. கிருஷ்ணா ராவ் அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைப் பாராட்டிப் பேசிய அண்ணா, "நாங்கள் புதிதாக அவைக்கு வந்துள்ளோம். முன்பே வந்து பழக்கப்பட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ரயிலில் முதலில் ஏறியவர்கள் இடத்தை அடைத்துக் கொண்டு தூங்கினால், புதிதாக ஏறி வந்தவர்கள் உட்கார இடம் இல்லாமல் தவிப்பார்கள். டிக்கெட் பரிசோதகர்தான் அவர்களை எழுப்பி அமர வைத்து, வந்தவர்களையும் அமர வைக்க வேண்டும். நாங்கள் உங்களை டிக்கெட் பரிசோதகராக எண்ணி இடம் கேட்கிறோம். எங்களுக்கும் சம இடம் தந்து உதவுங்கள்' என்று கூறினார். அவரது அந்த முதல் சட்டப்பேரவை உரையே, அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்து விட்டது. அவைத்தலைவர் முதல் அன்றைய முதல்வர் காமராஜர் வரை எல்லோரும் மகிழ்ச்சியோடு அண்ணாவை ஏற்றார்கள். ஒருமுறை அவைத்தலைவர் கிருஷ்ணாராவ், ஒரு கூட்டத்தில் அண்ணாவோடு கலந்துகொண்டு பேசியபோது, "நான் அண்ணாவின் மாணவன்' என்றார். அவர் அவ்வாறு கூறியதற்காக முதலமைச்சர் காமராஜர் அவரைக் குறை கூறவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். ஒருமுறை சட்டப் பேரவையில் பேசிய அண்ணா தன் தொகுதிக்குட்பட்ட தண்டலம் பிற ஊர்களோடு தொடர்பு கொள்ள எந்த வசதியும் இல்லாமல் தனித்துக் கிடக்கிறது என்றார். "சினிமா வசனம் மாதிரி பேசுகிறார். இதில் உண்மை இல்லை' என்றார் முதலமைச்சர்காமராஜர். அண்ணா பேச்சை நிறுத்திவிட்டு முதல்வரிடம் சென்று, காதோடு காதாக "நான் சொல்வது உண்மை. குறை கூறுவதற்காகச் சொல்லவில்லை. சரிப்படுத்துவதற்காகவே பேசுகிறேன்' என்றார். "சரி போய்ப் பார்ப்போம்' என்று இருவரும் முடிவெடுத்தார்கள். மறு ஞாயிற்றுக்கிழமை காமராஜர் காஞ்சி சென்று அண்ணாவையும் அழைத்துக் கொண்டு தண்டலத்துக்குச் சென்றார். வழியில் சரியான சாலை இல்லாத பகுதிகளில் நடந்தே சென்றனர். அங்கே மாவட்ட ஆட்சியர் முதல் எல்லா அலுவலர்களும் இருந்தார்கள். அண்ணா சொன்னது உண்மை என்று அறிந்த காமராஜர், ஒரு காலம் குறிப்பிட்டு அதற்குள் குறைகளைக் களையுமாறு மாவட்ட ஆட்சியருக்கு ஆணை பிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியைத் தன் திராவிட நாடு இதழில் "தம்பிக்குக் கடிதம்' பகுதியில் எழுதும் அண்ணா, "மகாத்மா தண்டி யாத்திரை சென்றார். காமராஜரும் நானும் தண்டல யாத்திரை செய்தோம்' என்றார். கட்சி வெவ்வேறுதான். ஆனால் இருவரின் நோக்கமும் ஒன்றே. அதனால் இணக்கம் இருந்தது. நாடு வேகமாக முன்னேறியது. திருப்பரங்குன்றம் மாநாட்டில் அண்ணா பேசிய பேச்சு அவரின் உள்மனத்தைக் காட்டியது. "உள்ளே நுழையும்போது பார்த்தேன். வெளியே நிறைய கார்கள் நின்றன. அந்தக் காட்சி எனக்கு ஒருபுறம் மகிழ்ச்சியையும் மறுபுறம் கவலையையும் கொடுக்கிறது. தம்பிகள் வசதியாக இருக்கிறார்கள் என்று எண்ணி மகிழ்ச்சியும் பணக்காரர்கள் நம் கட்சிக்குப் படையெடுக்கிறார்களோ என்று கவலையும் உண்டாகிறது'. ""முன்பு நீதிக் கட்சியாக இருந்தபோது, காரைக்குடி அருகிலுள்ள கானாடுகாத்தான் செட்டிநாட்டரசர் மாளிகையில் விருந்து. நாங்கள் அங்கே இருந்தோம். பொப்பிலிராஜா போன்ற பெரிய பெரிய பணக்காரர்கள் குழுமியிருந்தார்கள். எல்லோரும் கவலையின்றிப் பேசிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் எனக்குக் கவலை, மறுநாள் காலையில் சென்னையில் இருந்தாக வேண்டும். ராஜாவின் காரிலேயே புறப்பட்டு ரயில்நிலையம் சென்று கொண்டிருந்தேன். ஒரு காட்டுப் பகுதியில் கார் நின்றுவிட்டது. ஓட்டுநர் ஏதேதோ செய்து கொண்டிருந்தார்.  "என்னையா பழுது நீக்க முடியுமா முடியாதா? புதுக் காரில் அப்படி என்னய்யா பழுது?' என்றேன். அந்த ஓட்டுநர் கூறினார், "இப்ப எதுக்கு அவசரப்படுறீங்க? அவசரமா சென்னைக்குப் போயி இன்னும் நாலு பணக்காரங்களை வாழ வைக்கப் போறீங்களா?'' என்று கேட்டார். அப்போதுதா புரிந்து கொண்டேன். ராஜா நம்மிடம் இருக்கிறார், ஆனால் ஓட்டுநர் நம்மிடம் இல்லை என்பதை. காலம் ஓடியது. இப்போது நான் நீதிக் கட்சியில் இல்லை. சமீபத்தில் இதேபோல நிகழ்ச்சிகள் முடித்து, காரைக்குடி ரயில் நிலையம் நோக்கிக் காரில் சென்றபோது உண்மையாகவே கார் பழுது. ஓட்டுநர் அவசர அவசரமாகப் பழுது பார்க்கிறார். ரயிலுக்குப் போயாக வேண்டும். பரபரப்பு. அப்போது கப்பல் போன்ற கார் பக்கத்தில் வந்து நின்றது. அந்தக் கார் ஓட்டுநர் இறங்கி வந்து பதறிப் போய், "என்னண்ணா இங்கே நிற்கிறீங்க?' என்றார். நான் விவரம் சொன்னேன். அந்த ஓட்டுநர் தன் கார்க் கதவைத் திறந்து "உட்காருங்கள் அண்ணா, நான் உங்களைக் கொண்டு போய் விடுகிறேன்' என்றார். அவர் யார் என்று கேட்டேன். ராஜாவின் ஓட்டுநர் என்றார். "என்னை அழைத்துச் சென்றது தெரிந்தால் ராஜா கோபிப்பார்' என்றேன். "ராஜா கிடக்கட்டும். நீங்கள் ஏறுங்கள் அண்ணா' என்றார். நான் மனதுக்குள் சிரித்துக் கொண்டேன். "ராஜா இப்போது நம்மிடம் இல்லை. ஆனால் ஓட்டுநர் நம்மோடு இருக்கிறார் என்பது புரிந்தது. இதுதான் வளர்ச்சி''. ஏழை மக்கள் நம்மோடு தோளோடு தோள் நின்றால் அதுதான் வளர்ச்சி'.அண்ணாவின் அன்றைய திருப்பரங்குன்றம் மாநாட்டுப் பேச்சை அவரது வழிவந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் இன்றைய தம்பிகள் படித்துப் பார்க்க வேண்டும். அண்ணா தனது அரசியல் இயக்கத்தை யாருக்காகத் தொடங்கினார், அதன் குறிக்கோள் என்ன என்பது அவர்களுக்குப் புரியும். தாங்கள் திசை மாறிப் பறக்கிறோம் என்பதும் தெரியும்.முதல்வராக இருக்கும்போது, எதிர்க்கட்சித் தலைவர் பி.ஜி. கருத்திருமன் ஏதோ ஒரு செய்திக்காக வெளிநடப்பு செய்ய முற்பட்டார். உடல்நலமில்லாத அண்ணா எழுந்து போய் அவர் கையைப் பிடித்து, "எதையும் பேசினால் சரியாகி விடும். வாருங்கள் எது வேண்டுமானாலும் பேசிச் சரி செய்வோம்' என்று அழைத்து வந்து அமர வைத்தார். மக்களாட்சித் தத்துவம் புரிந்தவர் அவர்.அண்ணா முதலமைச்சராக இருந்தபோது அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்து திரும்பியதும், அதற்கான செலவை தம்பிகளிடம் வாங்கி அரசுக்குச் செலுத்தி, தனக்கென தனிச்சலுகை கூடாது என்று தெளிவுபடுத்தினார்.மக்களாட்சித் தத்துவ மகத்துவத்தை உணர்ந்து நடந்ததால்தான் அவர் இறுதி ஊர்வலத்தில் உலகமே காணாத கூட்டம் கூடி அவரைக் கடற்கரைவரை பின் தொடர்ந்தது.அண்ணா முதலமைச்சராகப் பதவி ஏற்ற பிறகு ஒரு நாள், திருவாரூர் பயணியர் விடுதியில் மதியம் தங்கியிருந்தபோது, பெரிய பணக்காரர் ஒருவர் வந்து அவரை மதிய உணவுக்கு அழைத்தார். அண்ணா பல்வேறு காரணம் சொல்லி வர மறுத்து அவரை அனுப்பி வைத்தார்.உள்ளூர் நண்பரை அழைத்து, "இந்நேரம் இங்கே உணவு வந்திருந்தால் அவர் அழைப்பாரா?' என்று கேட்டார்.உள்ளூர் அன்பர் கண் கலங்கினார். "என் வீட்டிலா உணவு?' என்றார். "எப்போதும் திருவாரூர் வரும்போது உன் வீட்டில்தானே உண்பேன். அப்படியே நீடிக்க வேண்டும். நாமும் கட்சியும் பணக்காரர்கள் கைக்குப் போகவிடக் கூடாது. கவனமாய் இருங்கள்' என்றார்.எதிர்க்கட்சியாகவும் அண்ணா செயல்பட்டிருக்கிறார். ஆளுங்கட்சித் தலைவராகவும் ஆட்சிப் பொறுப்பில் முதலமைச்சராகவும் இருந்திருக்கிறார்.எதிர்க்கட்சி ஆளுங்கட்சி எல்லாமே எவ்வாறு இயங்கவேண்டும் என்பதைச் சொல்லிக் காட்டியதோடு நில்லாமல் செய்தும் காட்டியவர் அண்ணா.மக்களை மதித்துப் போற்றியவர் அவர்; அதனால்தான் மக்களும் அவரை மதித்துப் போற்றினார்கள்!

Comments