அழிந்து போன ‘பெரிய ஆக்’ பறவை

அழிந்து போன 'பெரிய ஆக்' பறவை

மனிதன் தனது சுயநலத்திற்காக அழித்த 'டோடோ' என்ற சாதுவான பறவை பற்றி முன்பு பார்த்தோம். அந்த பட்டியலில் மற்றொரு பறவையும் உண்டு. அதன் பெயர், பெரிய ஆக். இந்தப் பறவையின் பெயரைக் கேட்டதும் இதுவும் ஏதோ பெரிய வஸ்தாது பறவை என்று நினைத்துவிட வேண்டாம். இதுவும் மிக சாதுவான பறவை. 'பிங்குயின்ஸ் இம்பென்னிஸ்' அல்லது 'அல்கா இம்பென்னிஸ்' என்பதுதான் இதன் அறிவியல் பெயர். இது பார்ப்பதற்கு கொஞ்சம் பென்குயின் மாதிரி இருக்கும். அதனால் இந்தப் பறவையின் பெயரான பிங்குயின்ஸ் போன்றே அதற்கு பென்குயின் என்று பெயர் வைத்தார்கள். வெல்ஷ் மொழியில் பிங்குயின்ஸ் என்பதற்கு 'வெண் தலை' என்று அர்த்தம். பெரிய ஆக் 75 முதல் 85 செ.மீ. உயரம் கொண்டது. ஐந்து கிலோ எடை கொண்டது. இது ஒரு வருடத்தில் ஒரு முட்டையை மாத்திரமே இடும். நன்றாக நீந்தக் கூடியது. தன் சிறகுகளை உபயோகித்து நீருக்கடியில் நீந்த வல்லது. பெரிய ஆக்குகள் ஒரு காலத்தில், கனடாவுக்கு அப்பாலுள்ள தீவுகளிலும், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, அயர்லாந்து, பிரித்தானியா போன்ற இடங்களிலும் பெரும் எண்ணிக்கையில் இருந்தன.

மற்ற ஆக்குகளைப் போல, பெரிய ஆக்குகளால் பறக்க முடியாது. இதனால் தான் இப் பறவைகள் மனிதனுக்கு எளிதில் இரையாயின. கி.பி. 8-ம் நூற்றாண்டிலிருந்து இப் பறவைகள், உணவுக்காகவும், மெத்தைகள் செய்வதற்காகவும் வேட்டையாடப்பட்டன. காலப்போக்கில் இப் பறவைகள் அழிந்து போகும் வரை வேட்டையாடப்பட்டன. இந்த இனத்தின் கடைசி ஜோடி, 1844-ம் ஆண்டு ஜூலை 3-ல் ஐஸ்லாந்துக்கு அப்பாலுள்ள ஒரு தீவில் இறந்து போனது.

டோடோ போலவே, சாதுவான இந்தப் பறவை தனது மென்மையான இயல்பினாலேயே மொத்தமாக அழிக்கப்பட்டு விட்டது.

No comments:

Post a Comment