பாரா ஒலிம்பிக் கோலாகல நிறைவு விழா பதக்கப்பட்டியலில் சீனா முதலிடம்

பாரா ஒலிம்பிக் கோலாகல நிறைவு விழா பதக்கப்பட்டியலில் சீனா முதலிடம்

நிறைவு விழா வாணவேடிக்கையை பரவசத்தோடு பார்த்து ரசிக்கும் பாரா ஒலிம்பிக் வீரர்கள்.மாற்றுத் திறனாளிகளுக்கான 15-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இதில் 159 நாடுகளை சேர்ந்த 4,342 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.முதல் நாளில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய சீனா பதக்கப்பட்டியலில் 107 தங்கம், 81 வெள்ளி, 51 வெண்கலம் என்று மொத்தம் 239 பதக்கங்களுடன் முதலிடத்தை தட்டிச்சென்றது. இங்கிலாந்து 64 தங்கம் உள்பட 147 பதக்கத்துடன் 2-வது இடமும், உக்ரைன் (41 தங்கம் உள்பட 117 பதக்கம்), 3-வது இடமும், அமெரிக்கா 4-வது இடமும் (40 தங்கம் உள்பட 115 பதக்கம்) பெற்றன. இந்தியா 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என்று 4 பதக்கத்துடன் 43-வது இடத்தை பிடித்தது. இந்தியா தரப்பில் தமிழகத்தை சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் மற்றும் ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜாஜாரியா ஆகியோர் தங்கப்பதக்கமும், குண்டு எறிதல் வீராங்கனை தீபா மாலிக் வெள்ளிப்பதக்கமும், உயரம் தாண்டுதல் வீரர் வருண் சிங் வெண்கலமும் வென்று பெருமை சேர்த்தனர்.இந்த நிலையில் பாரா ஒலிம்பிக் நிறைவு விழா இந்திய நேரப்படி நேற்று அதிகாலை மரக்கானா ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடந்தது. கண்கவர் கலை நிகழ்ச்சிகள், ஆட்டம் பாட்டம், வாணவேடிக்கைகள் என்று விழா களை கட்டியது. பிரேசில் பெண் கலைஞர்கள் வானிசா டா மாத்தா, வெட் சங்காலோ உள்ளிட்டோர் இசைவெள்ளத்துக்கு மத்தியில் கலக்கலாக பாட்டு பாடி நடனம் ஆடினர். இதை குழுமியிருந்த 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டுகளித்தனர். அணிகளின் அணிவகுப்பில் இந்தியாவுக்கு தலைமை தாங்கிய மாரியப்பன் தேசிய கொடியை ஏந்தி உற்சாகமாக வலம் வந்தார். இறுதியில் பாரா ஒலிம்பிக் கொடியை, 2020-ம் ஆண்டு பாராஒலிம்பிக் நடக்க உள்ள டோக்கியோவுக்காக அதன் கவர்னர் யுரிகோ கோய்கே பெற்றுக் கொண்டார். முன்னதாக நிறைவு விழாவில், சைக்கிள் பந்தயத்தில் விபத்துக்குள்ளாகி மரணம் அடைந்த ஈரான் வீரர் பஹ்மான் கோல்பர்நிஜாத்தின் உருவப்படம் மெகாதிரையில் காட்டப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Comments