விக்கிலீக்ஸ் வெளியிட்ட பல ஆவணங்கள்

விக்கிலீக்ஸ் வெளியிட்ட பல ஆவணங்கள்

விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு வரும் ரகசிய ஆவணங்கள் இதுவரை அமெரிக்க அரசாங்கத் தின் கண்களில் விரலை விட்டு ஆட்டி வந்தது என்றால் இப்போது இந்திய அரசியலிலும் அது பல அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

 

கடந்த வாரம் விக்கிலீக்ஸ் வெளியிட்ட பல ஆவணங்கள் இந்திய அரசியல் மற்றும் தமிழக அரசியல் சம்பந்தப்பட்டவை. அவை குறிப்பிடும் பல செய்திகள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களிலும் அரசியலி லும் அமெரிக்கா மிகத் தீவிரமான தொடர்பு வைத்திருந் தது அம்பலமாகிறது. உலகெங்கிலுமுள்ள அமெரிக்க தூதரகங்கள் உண்மையில் அமெரிக்காவின் உளவு அமைப்புகளாகத்தான் செயல்பட்டு வருகின்றன. அந்த நாட்டின் ஒவ்வொரு அரசியல் பிரச்சினைகளைப் பற்றி மிகச் சிறிய தகவல்களைக்கூட தூதரக அதிகாரிகள் தங்கள் நாட்டு அரசாங்கத்திற்கு அனுப்பி வந்திருக் கிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு நாட்டையும் பற்றி லட்சக்கணக்கான பக்கங்களிலான ஆவணங்கள் அமெரிக்கா வசம் உள்ளன. அந்த ஆவணங்களைத் தான் விக்கிலீக்ஸ் கைப்பற்றி இப்போது வெளியிட்டு வருகிறது.

 

ஈழப் பிரச்சினையில் பலருடைய நிலைப்பாடுகள் கடந்த காலத்தில் எப்படி இருந்தன என்பதற்கு விக்கி லீக்ஸ் பல சுவாரசியமான உண்மைகளை வெளிப் படுத்துகிறது. இப்போது ஈழத்தை மலரச் செய்யப் போகிறவராகவும் ஈழத் தாயாகவும் வர்ணிக்கப் படும் தமிழக முதல்வர் ஜெயலலிதா 1991இல் ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு புலிகளை தமிழகத்திலிருந்து எந்த அளவிற்கு துடைத் தெறிய வேண்டும் என்பதில் ஆவேசம் காட்டி னார் என்பதை அது வெளிப்படுத்துகிறது. அப் போது சென்னையிலிருந்த அமெரிக்க தூதரக அதிகாரி ஆன்ட்ரு டி சின்கின் அமெரிக்காவுக்கு அனுப்பிய செய்தியில், ஜெயலலிதா புலிகளைத் தமிழகத்திலிருந்து வேரறுப்பதில் ஒரு இரும்புப் பெண்மணியாகச் செயல்பட்டு வருகிறார் என்றும், தமிழகத்தின் முக்கிய பொறுப்பு வகித்த அதிகாரி ஒருவரிடம் புலிகளை அழிக்க எந்த நடவடிக் கைக்கும் தயங்க வேண்டாம். தேவைப்பட்டால் புலிகளோடு தொடர்புடையவர்களை போலி என்கவுன்டரில் கொல்லவும் செய்யலாம் என்றும் உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்திய முன்னாள் தூதரும் ராஜீவ் காந்தியின் ஆலோசகருமான ஜி.பார்த்தசாரதி சொன்ன ஒரு கருத்தையும் விக்கிலீக்ஸ் சுட்டிக் காட்டுகிறது. கருணாநிதி கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளோடு கருத்து வேறுபாடு கொண்டிருந்தபோதும் 1989இல் ஆட்சிக்கு வந்ததும் புலிகளின் ஆதரவாளராக மாறினார் என்றும், தமிழகத்தில் புலிகளை வளரவிட்டதே அவர் செய்த தவறு என்றும், ஆனால் ஜெயலலிதா புலிகளை முற்றாக ஒழித்துக் கட்டுவதன் மூலம் தனது சட்டபூர்வ கடமையை சிறப்பாக நிறைவேற்றி வருவதாக பார்த்தசாரதி கூறியதை விக்கிலீக்ஸ் தெரிவிக்கிறது.

 

ஆனால் விக்கிலீக்ஸ், 2007ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி தமிழக மீனவர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு காரணம் விடுதலைப் புலிகள்தான் என அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி சட்டசபையில் தெரிவித்ததை இங்குள்ள அமெரிக்க தூதரகம் பதிவு செய்து வாஷிங்டனுக்கு செய்தி அனுப்பியதையும் அது சுட்டிக்காட்டுகிறது. அதோடு அந்த ஆவணம் நிற்கவில்லை. கருணாநிதி, இலங்கை அரசுக்கு இந்திய அரசு ராணுவ உதவி அளிப்பதை ஒரு போதும் தி.மு.க. ஆதரிக்காது என அப்போதே எச்சரித்ததையும் சுட்டிக்காட்டுகிறது. இந்தத் தகவல் அனுப்பப்பட்ட காலத்தில்தான் விடுதலைப் புலிகளின் கப்பல்களை இலங்கை ராணுவம் நடுக்கடலில் வைத்து அழிப்பதற்கு இலங்கை ராணுவத்திற்கு அமெரிக்க ராணுவம் உதவி செய்ததை நாம் நினைவுபடுத்திக் கொள் வது நல்லது.

 

மேலும் விக்கிலீக்ஸ் 2011இல் வெளியிட்ட சில ஆவணங்களில் 2007 போரில் இலங்கை அரசாங்கம் இந்தியா தனக்குக் கொடுத்த ரேடார்கள் தனக்குப் போதவில்லையென்று அமெரிக்காவிடம் ரேடார்களை அளித்து உதவு மாறு கேட்டதையும் வெளிப்படுத்துகிறது. 2007, மார்ச் மாதத்தில் கட்டுநாயக்கா விமான நிலை யத்தின்மீது புலிகளால் நடத்தப்பட்ட வான்வெளி விமானத் தாக்குதல்களால் இந்தியாவிடம் இருந்து பெறப்பட்ட எம்.ஐ. ரக ஹெலிகாப்டர் களும் சேதமடைந்தன. இந்தியா அளித்திருந்த இரு பரிமாண ரேடார்களால் புலிகள் வந்ததை கண்டறிய முடியவில்லை. எனவே சீனாவிட மிருந்து முப்பரிமாண ரேடார்கள் பெறுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோத்தபாய ராஜபக்சே அமெரிக்க தூதரகத்திடம் தெரிவித்ததையும் அதே சமயம், இந்தியாவிற்குத் தெரியாமல் இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கக் கூடாது என கோத்தபாய ஒப்புக்கொண்டதையும் அந்தத் தகவல் தெரிவிக்கிறது.

 

மேலும் இலங்கையின் கடற்பரப்பைக் கண்காணிப்பதற்காக அமெரிக்கா கொடுத்த ரேடார்களை வட பகுதியில் நிறுவக்கூடாது என்று இலங்கை அரசாங்கத் திற்கு ஒரு முறை இந்தியா ஆட்சேபம் தெரிவித்ததையும், இலங்கை அதற்கு உடன்படாததால் இந்தியா தனது எதிர்ப்பைக் கைவிட்டு விட்டதையும் விக்கிலீக்ஸ் சுட்டிக்காட்டுகிறது. எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக 2008இல் விடுதலைப் புலிகளுக்கெதிரான இறுதிப் போர் நின்றுவிடாத வகையில் சர்வதேச நெருக்கடிகளிலிருந்து இலங்கை அரசாங்கத்தை இந்திய அரசாங்கம்தான் காப்பாற்றியது என்பதற்கான ஆதாரங்களையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. 2009இல் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட அப்போதைய அமைச்சர் பிரணாப் முகர்ஜி பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்பட்சத்தில் போரைத் தொடரலாம் எனக் கூறியதாக அமெரிக்க தூதரிடம் இந்திய துணை தூதர் சொன்னதையும் விக்கிலீக்ஸ் அப்போதே வெளியிட்டது.

 

இதன்மூலமாக புலிகளை ஒடுக்குவதில் இந்தியா, இலங்கை, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளுமே எவ்வாறு கூட்டாகச் செயல்பட்டு வந்திருக்கின்றன என்பதை நாம் தெள்ளத்தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

 

தமிழக அரசியலில் மட்டுமல்ல, இந்திய தேசிய அரசியலிலும் விக்கிலீக்ஸ் தொடர்ந்து புயலைக் கிளப்பி வருகிறது. ஏற்கனவே 2011இல் அது வெளியிட்ட ஒரு ஆவணத்தில்   பா.ஜ.க. அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் எப்படி இரட்டை நிலைப்பாட்டுடன் வேஷம் போடுகிறது என்பதை வெளிப்படுத்தியது. 2009ஆம்     ஆண்டு மே 13ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவு கள் வருவதற்கு முந்தைய தினத்தில் அமெரிக்க தூதரக உயர் பொறுப் பிலிருந்த பீட்டர் பாலிக் அத்வானியை சந்தித்தார். அவரிடம் அத்வானி, 'பா.ஜ.க. ஆட்சி அமைத் தால், அமெரிக்கா-இந்தியா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையி லான எந்தவித நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படாது' எனக் கூறினாராம். 2009-இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற போது பிரணாப் முகர்ஜிக்கு நிதித்துறை வழங்கப்பட்டதை கேள்விப்பட்டு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அதிர்ச்சிக்கு ஆளானாராம். மோன் டெக் சிங் அலுவாலியா அல்லது ப.சிதம்பரத்திற் குத்தான் நிதித்துறை அளிக்கப்பட வேண்டு மென்று அமெரிக்க அரசாங்கம் விரும்பியது. இந்த முடிவு குறித்து தனது தூதரகத்திற்கு ஹிலாரி கிளின்டன் அனுப்பிய கேள்விகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டது. இந்திய அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் தனக்குச் சாதகமாக யார் இருக்க வேண்டு மென்பது வரை அமெரிக்கா தீர்மானமான தலையீடுகளைச் செய்து வந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

 

கடந்த வாரம் வெளிவந்த பல விக்கிலீக்ஸ் தகவல்கள் பலருக்கும் பெரும் சங்கடங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. 1970களில் ராஜீவ் காந்தி ஸ்வீடன் நாட்டு கம்பெனியிடமிருந்து இந்திய ராணுவத்திற்கு ஜெட் விமானங்கள் வாங்க நடந்த பேரத்தில் இடைத் தரகராகச் செயல்பட்ட விவகாரம் புயலைக் கிளப்பி வருகிறது. அதே போல இந்திரா காந்தியின் இன்னொரு மகனான சஞ்சய் காந்தி, அவர் பெரும்பான்மை பங்குகளை வைத்தி ருக்கும் மாருதி நிறுவனத்தின் சார்பாக பிரிட்டிஷ் ஏர் கார்ப்பரேஷனுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஏஜென் டாக செயல் பட்டதை வெளிப் படுத்தியிருக்கிறது. நெருக்கடி நிலை காலத்தின்போது இந்திராகாந்தி யின் வீட்டிலேயே ஒரு அமெரிக்க உளவாளியை 1975-1977 வரை அமெரிக்கா வைத்திருந்த அதிர்ச்சித் தகவலையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. மேலும் அப்போது நெருக்கடி நிலையை செயல்படுத்துவதில் யாரெல்லாம் முக்கிய பங்கு வகித்தார்கள் என்பதையும் ஏ.கே. ஆன்டனி போன்றவர்கள் சஞ்சய் காந்தியை எதிர்த்ததையும் அமெரிக்கா தன் உளவாளிகள் மூலம் தெரிந்து வைத்திருந்தது. நெருக்கடி நிலையின்போது இந்தியாவில் அமெரிக்காவின் செயல்பாடுகள் காங்கிரஸோடு நிற்கவில்லை. அப்போது முக்கிய எதிர்க்கட்சித் தலைவரும், அமெரிக்க எதிர்ப்பாளரும், சோஷலிஸக் கொள்கைகளைப் பேசுபவருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் மத்திய அரசுக்கெதிராக சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட சி.ஐ.ஏ.யிடம் நிதி உதவி கோரினாராம்.

 

அதேபோல நெருக்கடி நிலையை அப்போதைய தி.மு.க. அரசு எதிர்த்த போது மத்திய அரசிற்கும் அதற்கும் கடும் மோதல் ஏற்பட்டது. அந்த சமயம் தொழிலாளர் மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்ச ராக இருந்த கே.ராஜாராம் அமெரிக்க தூதரிடம், தமிழகம் இந்தியாவிலிருந்து தனியாக பிரிந்துபோக விரும்பினால் அதற்கு அமெரிக்கா உதவுமா என்று கேட்டதாக விக்கிலீக்ஸ் கூறுகிறது. இந்திரா காந்தியை சோவியத் ரஷ்யா ஆதரிப்பதால் அதற்கெதிராக ராஜாராம் இந்த உதவியைக் கேட்டாராம்.

 

என்ன தலை சுற்றுகிறதா? இந்திய அரசியலைப் பற்றி, தமிழக அரசியலைப் பற்றி நம்மைவிட அமெரிக்காவுக்குத்தான் நன்கு தெரியும் என்பது மட்டும் நன்றாகப் புரிகிறது. இப்போது விக்கிலீக்ஸ் வெளியிட்டு வரும் தகவல்கள் எல்லாம் பொய் என்று காங்கிரஸ் புலம்ப ஆரம்பித்திருக்கிறது. விக்கிலீக்ஸை அது மத்திய கணக்கு தணிக்கைக் குழுவைச் சித்தரிப்பது போல சித்தரித்து வருகிறது. லண்டனிலுள்ள ஈகோடார் தூதரகத்தில் சரணடைந்து வாழும் விக்கிலீக்ஸின் தலைவர் ஜூலியன் அஸாங்கே காங்கிரஸுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து ராகுல் காந்திக்கு எதிராக அடுத்த தேர்தலில் நிற்கவா போகிறார்?

Comments