குவாண்டம் செயற்கைக்கோள்

குவாண்டம் செயற்கைக்கோள்

பத்தாண்டுகளுக்கு முன்பு, நாம் தினசரி பார்க்கும் நிலம், காடு, கடல் உள்ளிட்ட நீர் நிலைகள் ஆகிய இடங்கள் அனைத்தையும் நமக்கு புதிதாக காட்டி மெய்சிலிர்க்க வைத்தது 'கூகுள் எர்த்'.கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த இந்த மென்பொருள் பூமியை நமக்கு புத்தம் புதிதாக அறிமுகம் செய்து வைத்து ஆச்சரியப்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். இது சாத்தியமானதற்கு காரணம் செயற்கைக்கோள் எனும் வானியல் கண்டு பிடிப்பு.பூமியைச் சுற்றி நிலா போன்ற இயற்கையான கோள்கள் சுற்றி வருவது போல மனிதனால் மண்ணிலிருந்து விண்ணுக்கு செலுத்தப்பட்டு, விண்வெளியின் கோளப்பாதையில் சுற்றிவரும் கருவிகள் செயற்கைக்கோள் என்று அழைக்கப்படுகிறது. புவி மேற்பார்வை, பல்வேறு வானியல் ஆய்வுகள், தகவல் பரிமாற்றம், மற்றும் ராணுவக் கண்காணிப்பு உள்ளிட்ட பல செயல்பாடுகளுக்காக செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன.கடந்த 1957-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தால் (ரஷியா) விண்ணில் செலுத்தப்பட்ட 'ஸ்புட்னிக் 1' என்பதுதான் உலகின் முதல் செயற்கைக்கோள் ஆகும். அதனைத் தொடர்ந்து இன்றுவரை பல்லாயிரம் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்ட வண்ணமாய் இருப்பதால், தற்போது விண்வெளி கோளப்பாதையில் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் சுற்றிவந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.பூமி மட்டுமல்லாமல் அண்டத்தில் உள்ள பிற கோள்களையும் ஆய்வு செய்து மனித குலத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பல தகவல்களை கண்டறியும் திறன்கொண்ட செயற்கைக்கோள்களில் ஒரு சிறிய சிக்கலும் இருக்கிறது. பொதுவாக கம்ப்யூட்டர் உள்ளிட்ட அனைத்து வகையான மின்னணு கருவிகளையும் சட்டவிரோதமாக குறிப்பிட்ட ஒருவர் தன்னுடைய கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு 'ஹேக்கிங்' (Hacking) என்று பெயர். துரதிர்ஷ்டவசமாக, ஹேக்கிங்கிற்கு செயற்கைக்கோள்களும் விதிவிலக்கல்ல.ஒரு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பல ரகசியமான தகவல்களையும் செயற்கைக்கோள்கள் சேமித்து வைக்கின்றன என்பதால் அவை சட்டவிரோதமாக ஹேக் செய்யப்பட்டால் அது பெரிய ஆபத்தில் முடியும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் யாராலும் ஹேக் செய்ய முடியாத ஒரு செயற்கைக்கோளை உருவாக்க பல நாடுகள் முயன்று வருகின்றன. அதில் சீனா சமீபத்தில் வெற்றிபெற்றுள்ளது.கடந்த 16-ந் தேதி தனது வடமேற்கு பகுதியில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் (Jiuquan Satellite Launch Centre) ஏவுதளத்தில் இருந்து மிசியஸ் (Micius) எனப்படும் உலகின் முதல் குவாண்டம் செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவி அசத்தியுள்ளது சீனா.கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கூறப்படும் சீன விஞ்ஞானி மற்றும் தத்துவஞானியான 'மிசியஸ்' என்பவரை கவுரவிக்கும் வகையில் 'மிசியஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குவாண்டம் செயற்கைக்கோள் ஹேக் செய்யமுடியாத ஒரு டிஜிட்டல் தகவல் தொடர்புக்கு வழிவகுக்கும் என்கிறார் தலைமை விஞ்ஞானி பான் ஜியான்வேய்.அதெல்லாம் சரி, மிசியஸ் எனும் இந்த குவாண்டம் செயற்கைக்கோள் எப்படி செயல்படுகிறது? இந்த செயற்கைக்கோள் முதலில் பின்னிப்பிணைந்த போட்டான்கள் (entangled phot-ons) என்று அழைக்கப்படும் போட்டான் இணைகளை உருவாக்கும். அதாவது அணுவை விட அளவில் மிகச்சிறிய, ஒளியின் துகள்தான் போட்டான் எனப்படுகிறது. போட்டான் இணையில் உள்ள ஒரு பாதி போட்டான்களை மிசியஸ் செயற்கைக்கோள் சீனா மற்றும் ஆஸ்திரியாவில் உள்ள மைய ஆய்வு நிலையங்களுக்கு அனுப்பும். யாரேனும் மிசியஸ் செயற்கைக்கோளை ஹேக் செய்ய முயன்றால், அதில் உள்ள பின்னிப்பிணைந்த போட்டான்கள் மாறி, மிசியஸின் ரகசிய எண்ணையும் மாற்றி அதனை பயனற்றதாகவும் மாற்றிவிடும்.குவாண்டம் திறன் இருக்கும் காரணத்தாலேயே ஹேக்கிங் செய்யப்படுவதை தடுக்கும் இந்த பிரத்தியேக வசதி மிசியஸில் இருக்கிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. உலகில் முதன்முதலாக, விண்வெளியில் குவாண்டம் சமிக்ஞைகளை செலுத்துவதன் மூலம் இந்த குவாண்டம் செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது சீனா.முக்கியமாக, வர்த்தக தகவல் தொடர்புகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த ஹேக் செய்யமுடியாத மிசியஸ் செயற்கைக்கோளின் வருகை மிகவும் சக்திவாய்ந்த எதிர்கால குவாண்டம் கம்ப்யூட்டர்களை ஹேக்கிங் மற்றும் சட்டவிரோதமான கண்காணிப்புகளில் இருந்து பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் விஞ்ஞானிகள். எதிர்காலத்தில் சுகாதாரத் துறை முதல் தொழிற்சாலை உற்பத்தி வரை அனைத்து வகையான துறைகளிலும் பயன்படக்கூடிய குவாண்டம் கம்ப்யூட்டர்களை திறமை வாய்ந்த ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்க முடியும் என்பதற்கு மிசியஸ் 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' போன்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments