பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை உலக மொழிகள் மற்றும் இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:தமிழுக்காகப் பாடுபடும் அறிஞர்களுக்கும், சான்றோர்களுக்கும் எண்ணற்ற நலத்திட்டங்களையும், உதவிகளையும், சிறப்புகளையும் அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.கடந்த 5 ஆண்டுகளில் தமிழுக்காகப் பாடுபடும் சான்றோர்களுக்கும், அறிஞர்களுக்கும், சிறப்பு செய்யும் வகையில் 55 விருதுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.தமிழ் மொழியின் பெருமையை பிற நாட்டவரும் அறியும் வண்ணம், உலகப் பொதுமறையாம் திருக்குறள், சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு என் தலைமையிலான அரசால் வெளியிடப்பட்டுள்ளது.மேலும், திருக்குறள் கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படும் நிலையில் உள்ளது.அதே போன்று பாரதியார் பாடல்களும், பாரதிதாசன் பாடல்களும், சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. அதிமுகவின்தேர்தல் அறிக்கையில், பண்டை தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும் என்ற வாக்குறுதிஅளிக்கப்பட்டுள்ளது.இதனை செயல்படுத்தும் வகையில், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் தெரிவு செய்யப்பட்ட நூல்கள், உலக மொழிகளான பிரெஞ்சு, ஜெர்மனி மொழிகளிலும், இந்திய மொழிகளான மலையாளம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்படும்.இப்பணிகளை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மூலம் செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன்.இதன் மூலம், தமிழ் மொழியின் வளம் பற்றி உலக மக்கள் அறிவதற்கு மேலும் வழிவகை ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Comments