Thursday, September 29, 2016

கடன் தொல்லை நீக்கும் கருட வாகனன்

கடன் தொல்லை நீக்கும் கருட வாகனன்

அந்தப் பகுதியையொட்டி இரண்டு நதிகள் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தன. வானத்தில் ஒரு கருடன் வட்டமடித்துக் கொண்டிருந்தது. அது மீனை கொத்திச் செல்ல நேரம் பார்த்திருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால் நாள்தோறும் குறித்த நேரத்திற்கு வரும் அந்த கருடன், அந்த நதிக்கரையில் இருந்த மண் மேட்டை மூன்று முறை வலம் வந்து சர்ர்ரென செங்குத்தாய் தரையிலிறங்கி அந்த மண் மேட்டைத் தன் அலகுகளால் தொட்டுவிட்டு செல்கிறது. அது அந்தப் பறவையின் வழிபாடு!

தென்னகம் இஸ்லாமிய படையெடுப்பிலிருந்து மீண்டு, செஞ்சி மன்னர்களின் ஆட்சியில் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்ட சமயம், அந்த அதிசயம் அரங்கேறியது. தென்னாற்காடு மாவட்டத்திற்கு அப்போது ஸ்ரீமுஷ்ணம் பூவராக மூர்த்தி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். உளுந்தூர்பேட்டை- கள்ளக்குறிச்சிக்கு இடையே உள்ள எலவனாசூர் கோட்டை மிக முக்கியமான கேந்திரம். படைப் பராமரிப்பு, ஆட்சி நிர்வாகம் என அனைத்துக்கும் வசதியான மையம். அந்தப் பகுதிக்கு தாசில்தாராக சரபோஜி ராவ் செயல்பட்டார்.

ஒரு நாள், வரி வசூல், வரவு-செலவு எல்லாம் பார்த்து விட்டு  தனது மாளிகைக்குத் திரும்பிய சரபோஜி ராவ், கண் அயர்ந்தார். நதிக்கரையும், கருடனும், மண் மேடும் அவரது கனவில் மாறி மாறித் தோன்றின. இது அடிக்கடித் தோன்றும் வழக்கமான  கனவுதானே என்று தேற்றிக்கொண்டார், தொடர்ந்து உறங்கினார்.

மீண்டும் அதே கனவு... இடங்களும் காட்சியும் முன்னிலும் மிக தெளிவாய் தெரிந்தன.  'எந்த இடம் இது' என்று மனசு குறித்துக் கொண்டது. அந்த மண்மேடு அப்படியே மறைந்து ஆகாயச் சூரியன் பூமியில் இறங்கியது போன்று ஒரு பேரொளி தோன்றியது. அந்த பேரொளியிலிருந்து தாமரையாய் மலர்ந்தார் நிவாசன். சந்திரனின் குளிர்ந்த தாமரையைப் போன்று கருணை வழியும் கண்களோடு சரபோஜி ராவைப் பார்த்து தன் செவ்வாய் திறந்து, ''யாம் இங்கு பல ஆண்டுகளாய் பூமியில் மறைந்திருக்கிறோம். எமக்கு ஆலயம் அமைத்து, முறைப்படி பூஜைகள் செய். குடிகள் அனைத்தையும் யாம் நல்ல வண்ணம் காப்போம்'' என்று  சொன்னார்.

''அப்படியே செய்கிறேன் எம்பெருமானே...'' என்றபடி கண் திறந்து பார்த்தார். கிழக்கு வெளுத்ததும் தனது படை, பரிவாரங்களோடு கனவில் கண்ட இடம் நோக்கி விரைந்தார். நதிக்கரையை  அடைந்த அவர், மண் மேட்டைத் தொட்டு வணங்கினார். ஆகாயத்தைப் பார்த்தார்; கருடன் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அவனது மனம் ஆனந்தத்தில் திளைத்தது. தன் கரத்தாலேயே மண் மேட்டிலிருந்த மண்ணைக் களைந்தார். மூன்றாவது அடியைத் தொட்டபோது ஒரு சிற்பத்தின் அழகிய வாய் தெரிந்தது. சிலை மீதிருந்த மண்ணை நீக்கி பரவசமாய், ஒரு குழந்தையைத் தூக்குவது போன்று மெல்லத் தூக்கியெடுத்து தரையில் வைத்தார்.  'கண்டு கொண்டேன்... கண்டு கொண்டேன்' என அவரது மனம் குதூகலித்தது.

அடுத்தடுத்து உத்தரவுகள் பறந்தன. தகுந்த இடம் தெரிவாகி அழகிய ஒரு கோயில் எழுந்தது. தாம் கண்டெடுத்த  பெருமாளை  அந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்து, கிரமப்படி பூஜைகள் நடக்க நிலங்களை நிவந்தமாக தந்தார். அந்தணர்களைக் குடியமர்த்தி, அவர்களுக்கும் நிலங்களை மானியமாகத் தந்தார். அந்தப் பெருமாளோடு தன்னை அப்படியே கரைத்துக் கொண்டார், சரபோஜி ராவ்.

சுமார்  300 ஆண்டுகளுக்கு முன்பு அவ்வாறு கட்டப்பட்ட கோயில் இப்போது எப்படி இருக்கிறது?

பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் விழுப்புரம் - உளுந்தூர் பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 1.6 கி.மீ. தொலைவில் வடபுறமாக பாதூர் கிராமத்தில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க வைணவ பஞ்ச (ஐந்து) கிருஷ்ணாரண்ய புண்ணிய பூமியில், புனிதம் நிறைந்த, மகோன்னதமான கருட நதி, சேஷ நதிகளின் தென்புறத்தில் அமைந்துள்ளது பாதூர் திருத்தலம்.

இந்த  நிவாசப் பெருமாள் கோயிலையும், பாதூர் கிராமத்தையும் ராஷ்டிரகூட மாமன்னன், மூன்றாவது கிருஷ்ணன் அவர்களால் கி.பி. 964ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த பெருமாளை நாகமலை நாயகனார் என்று போற்றி வணங்கி வந்திருக்கிறார்கள்.

அகத்தியர்வெளி, சுக்ராநத்தம், சோமநாதபுரம் போன்ற குடியிருப்புகளெல்லாம் சேர்ந்து  அமைந்தது  பாதூர் என்கிறார்கள். அப்பகுதிகள் தற்போதைய களவனூர், ஒரத்தூர், செம்மணங்கூர்,பெரும்பட்டு, மாறன்ஓடை, வண்டிப்பாளையம், சின்னக்குப்பம், பாவூர், நாராயணபுரம், அகஸ்தீஸ்வரம் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.  இந்த பத்து ஊர்களின்   நிர்வாகம் இங்கே நடந்துள்ளது. அது பத்து+ ஊர்= பத்தூர்   என்று அழைக்கப்பட்டு, கால ஓட்டத்தில் பத்தூர், பாத்தூராகி, இப்போது பாதூர் என்று மருவியுள்ளது.

ராஷ்டிரகூடர்களின் ஆட்சிகாலத்தில் சிறப்போடு இருந்த இந்தக் கோயில், சோழர்களின் ஆட்சி காலத்தில் மேலும் பொலிவு பெற்றுத் திகழ்ந்தது. இஸ்லாமிய படையெடுப்பின் போது கோயிலும் கிராமங்களும் அவர்களின் தாக்குதலுக்கு உள்ளாகிச் சீரழிந்தன. அப்போது கோயிலைக் காப்பாற்ற முடியாத மக்கள், கடவுள் விக்ரகங்களை வீடுகளில் வைத்துப் பூட்டியும் கிணறு, ஆறு, குளங்களில் போட்டும் காப்பாற்றினர். அப்படித்தான் இந்தக் கோயில் சீரழிந்து போயுள்ளது.

சரபோஜி ராவ் கைங்கர்யத்தில் இன்று மீண்டும் எழுந்து நிற்கிறது, அழகிய விமானத்தோடு இந்தக் கோயில். கோயிலின் முன் உயரமான கருட கம்பம் நம்மை வரவேற்கிறது. அடுத்து சின்னதாய் ஒரு கல் மண்டபம். உள்ளே நுழைந்தால் பெரிய கல் மண்டபம். அதில் முதலாவதாய் பலிபீடம், திருமண் தரித்த பெரிய பீடத்தோடு கூடிய த்வஜஸ்தம்பம். இதன் இரு புறமும் யானைகள் நிற்க அழகாய் காட்சி தருகிறது.

கோயிலை வலம் வர, பிராகாரத்தில் வாகனங்கள் இருக்கும் பிரமாண்டமான பெரிய அறையைக் காண்கிறோம். ஹனுமந்த, சேஷ, கருட, யானை, குதிரை என வாகனங்களின் வரிசை சிலிர்க்க வைக்கிறது. பராமரிப்புக்கு ஒரு சபாஷ் போடலாம். பெருமாளுக்கு அமுது படைக்க பிராகாரத்திலேயே மடப்பள்ளி இருக்கிறது. அதைக் கடந்துச் செல்லும் போது அங்கே நல்ல அதிர்வோடு ஒரு சந்நதி இருக்கிறது. அது அஹோபில மடத்தின் 36-வது பட்டம் அழகிய சிங்கர், ஸ்ரீவண்சடகோப ஸ்ரீநிவாஸ யதீந்த்ர மஹாதேசிகனின் ஜீவ பிருந்தாவனம்.

ஸ்ரீநரசிம்மனுடைய நித்ய ஆராதனையில் மனம் செலுத்திவந்த இம்மகான், பாதூர் திருத்தலத்தை விட்டுச் செல்ல மனமில்லாமல், இங்கேயே வெங்கடேசப் பெருமாளை வணங்கி, மங்களாசாஸனம் செய்து கொண்டு இத் திருத்தலத்திலேயே 1898ம் ஆண்டு, வேங்கடவனின் திருவடியில் இணைந்துவிட்டார். இந்த பிருந்தாவனம் அமைந்து 109 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த பிருந்தாவனத்திற்கு நாள்தோறும் நல்ல முறையில் ஆராதனைகள் நடந்து வருகின்றன. தன்னிடம் வந்து வழிபடுபவர்களின் துயர்களைக் களைந்து மன அமைதியையும் வாழ்வில் முன்னேற்றத்தையும் தருகிறார் இம்மகான். மகானது பிருந்தாவனத்தை வலம் வரும் வழியில்  இத்தலத்திற்கு வந்து இத்தல நாயகனை வணங்கிய மகான்களின் பாதுகைகள் வைத்து வணங்கப்பட்டு வருகின்றன.

பிராகாரத்தின் சுவர்களில் சீதாராமன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, பண்டரிபுரம் பாண்டுரங்கன் உள்ளிட்ட ஏராளமான வைணவ கோயில்களில் அருள் சொரியும் மூலவரது   வண்ண ஓவியங்கள் மிளிர்கின்றன. மகா மண்டபத்துள் நுழைகிறோம். அங்கே, கூப்பிய கரங்களும், விரித்த சிறகுமாய் பெருமாளைப் பார்த்த வண்ணம் நிற்கிறார், கருடன். அவரை வணங்கி நகர, லட்சுமி நரசிம்மரின் கல் சிற்பம். ஏதோ ஒரு படையெடுப்பில் பின்னமாகி இருக்கிறது இந்த சிலை. நம் உறவினருக்கு கை கால் உடைந்தால் வீட்டை விட்டா ஒதுக்கி விடுவோம். இல்லைத்தானே... அது போன்று தான் இதுவும் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது. பூஜைகள் ஏதும் இவருக்கு இல்லை.

ஆனாலும் அழகாய் அலங்கரித்துப் பராமரிக்கிறார்கள். அவருக்கு அருகிலேயே சுமார் மூன்றடி உயரமுள்ள  வீர ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். இவரிடம் வைக்கும் நியாயமான கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றிவைக்கிறார். இந்த வீர ஆஞ்சநேயர் விக்ரகம் உளுந்தூர்பேட்டையில் ஒரு கோயில் குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டு, இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மேலே  லட்சுமணனும் அனுமனும் உடனிருக்க காட்சி தருகிறது சீதாராமனின் சுதைச் சிற்பம். அதற்கு இடப்புறத்தில் சங்கு-சக்கரத்தோடு கூடிய திருநாமம் சுதையாக அமைக்கப்பட்டுள்ளது.

ஜெயன்- விஜயனைக் கடந்து சென்றால் அர்த்த மண்டபத்தை அடைகிறோம். அங்கே நம்மாழ்வார், திருப்பாவைத் தந்த சுடர்க்கொடி ஆண்டாள், விஷ்வக்சேனர், திருமங்கையாழ்வார், ராமானுஜர், தேசிகன், ஆதிவண்சடகோபன், மாருதி ஆகியோரின் கல் சிற்பத் திருமேனிகள் காண்பவரின் மனத்தை மயக்கும் விதமாய் காட்சி தருகின்றன. இந்த வரிசையில் சில பஞ்சலோக சிலைகளும் உள்ளன.

அர்த்த மண்டபத்தைக் கடந்து, கர்ப்ப கிரகத்தை அடைகிறோம். 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, சரபோஜி ராவிற்கு தரிசனம் தந்த, தன்னை நாடி வந்தவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் நிவாசப் பெருமாள் கிழக்கு பார்த்த வண்ணம் அழகாய் காட்சி தருகிறார்.  ஒருமுறை அவரது எழில்முகம் கண்டால் போதும். உள்ளம் பலமடைவதை உணரலாம். சங்கு, சக்கரத்தோடு காட்சி தரும் பகவான் வரத, கட்க ஹஸ்தத்தோடு காட்சி தருகிறார். அவரது அருகில்  தேவி, பூதேவி சிலைகள் கருணை பொங்கும் விழிகளோடு காட்சி தருகிறார்கள். இவர்கள் மூலவர் கிடைத்த பின் ஆலயம் அமைக்கும் போது புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டவர்கள்.

மூலவருக்கு  கீழே  பஞ்சலோகத் தினாலான தேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேசப் பெருமாளின் உற்சவர் சிலை உள்ளது. இவை அபய வரத ஹஸ்தத்தோடு காணப்படுகின்றன. இவர் இஸ்லாமிய படையெடுப்பின் போது மதுரையிலிருந்து வந்தவராம். எந்த கோயிலின் உற்சவர் என்று தெரியவில்லை. பாதூர் கிராமத்தில் ஒரு வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாம். இவரோடு ஒரு காளிகாம்பாள் விக்ரகமும் இருந்துள்ளது. அது அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் உள்ளது.  அருகிலேயே உற்சவரான நவநீத கிருஷ்ணன், சக்கரத்தாழ்வார்செல்வர் ஆகியோரது சிலைகள் கண்களுக்கு விருந்தாகவும் மனத்திற்கு மருந்தாகவும் உள்ளன.

அவருக்கு வலப்புறத்தில் தனிச் சந்நதியில் அலர்மேலு மங்கைத் தாயாரின் தரிசனம் கிடைக்கிறது. அன்னையின் முகம் தாமரையாய் மலர, அவளது தரிசனம், கரிசனத்தோடு நம்மை விசாரித்து குறைகளைக் களைகிறது. பெருமாளின் அருளையும், தாயாரின் அன்பையும் பெற்ற நமக்கு பிரசாதமாக தீர்த்தம், துளசி, குங்குமம் தந்து பட்டர் சடாரியை நம் தலையில் வைக்கும் போது பெருமாளின் அருள் நம்முள் வேர் விட்டுப் படர்வதை உணரமுடிகிறது.

திருக்கோயிலூர் உலகளந்த பெருமாளால் அபிமானிக்கப்பட்ட, இப்பாதூர் திருத்தலம், தீர்த்தம், தலம், மூர்த்தி என மூன்று சிறப்புகளுடன் விளங்குகிறது. இங்கே பஞ்ச பர்வ உற்சவங்கள், புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவம், திருத்தேர், தீர்த்தவாரி ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. சக்திவாய்ந்த பிரார்த்தனைத் தலமாகிய இத்திருக்கோயிலில்  கல்யாண உற்சவம் செய்வதாக வேண்டிக் கொண்டால் ஓராண்டிற்குள் திருமணம் நடந்தேறுவதும், குழந்தை வரம் வேண்டி இத்தல நாயகனை வணங்க வீட்டில் மழலை விளையாடுவதும் நிச்சயம் என்கிறார்கள் பலனடைந்தவர்கள்.

கடன் தொல்லையும்மருத்துவர்களால் தீர்க்க முடியாத நோயும் உள்ளவர்கள் வேண்டி, முறையிட்டு 36 முறை வலம் வந்தால் வேண்டுதலை உடனே நிறைவேற்றுகிறார் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள். சின்னஞ்சிறு கிராமத்தில் அமைதியாய் அமர்ந்து அருளாட்சி செய்து வரும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை தரிசித்து, வழிபட்டு நிறைவோடு வெளிவரும் நம் மனதில் அவர் உறுதியாய் அமர்ந்து கொண்டதை உணரமுடிகிறது.

No comments:

Post a Comment