நீர் வாழ் உயிர்களுக்கு நஞ்சாகும் சோப்பு

நீர் வாழ் உயிர்களுக்கு நஞ்சாகும் சோப்பு

சோப்புகள், ஷாம்பு, சலவை சோப்புகள் போன்றவற்றால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.இத்தாலியிலுள்ள கா போஸ்காரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கடந்த ஆண்டு, வெனிஸ் நகரிலுள்ள கால்வாய்களில் விரிவான ஆய்வை மேற்கொண்டனர்.அந்த ஆய்வின்படி குளியல் சோப்புகள், ஷாம்பு மற்றும் சலவை சோப்புகளில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் பல வேதிப் பொருட்கள் நீரில் கலந்து வெளியேறும்போது அவை கால்வாய் மூலம் மண்ணிலும், பிற நீர்நிலைகளிலும் போய் சேருகின்றன. ஆய்வாளர்கள், வாசனைக்காக சோப்புகளில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களில், 17 வகைகளை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அவை கழிவுநீராக வெளியேறுகின்றனவா என்பதை ஆராய்ந்தனர். கழிவு நீரில், 'பென்சைல் சாலிசிலேட்' போன்ற வேதிப் பொருட்கள் அப்படியே வெளியேற்றப்பட்டு நீர் நிலைகளில் கலப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்தனர். இந்த வேதிப் பொருட்கள் நீர் வாழ் உயிரினங்களுக்கு நச்சுக்கள் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த வேதிப் பொருட்கள் நீர் வாழ் உயிரினங்களை உடனடியாகக் கொல்லாமல், மெல்லக் கொல்லும் தன்மை உடையவை என்றும், அவற்றின் நீண்ட கால தாக்கங்களை இனிமேல் தான் ஆராய வேண்டும் என்றும் ஆய்வின் முடிவில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Comments