அதியமான்கோட்டையின் அற்புதம் காலத்தால் அழியாத காலபைரவர் கோயில்

அதியமான்கோட்டையின் அற்புதம் காலத்தால் அழியாத காலபைரவர் கோயில்

ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த கடையெழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் ஆண்ட தகடூர் கோட்டைக்கு அருகில் காலம் கடந்து நிற்கிறது கம்பீரமான காலபைரவர் கோயில். தர்மபுரி-சேலம் நெடுஞ்சாலையில் தர்மபுரியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. 9ம் நூற்றாண்டில் தகடூரில் ஏராளமான இந்து கோயில்கள் இடிக்கப்பட்டன. அந்த காலக்கட்டத்தில் நடந்த போர்களில் மன்னர் அதியமானால் வெற்றி பெற முடியவில்லை. அப்போது, அவரது ஆஸ்தான ஜோதிடர்கள், நமது கோட்டையில் காலபைரவரை பிரதிஷ்டை செய்து, கோயில் கட்டி வழிபட்டால் வெற்றிகள் வசமாகும் என்று ஆலோசனை வழங்கியுள்ளனர். காலபைரவருக்கு தனிக்கோயில் காசியில் மட்டுமே உள்ளது. எனவே அங்கு சென்று சிலைகளை எடுத்து வந்து இங்கு வைத்து பூஜைகள் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதன்படி, மன்னர் அதியமான், காசியில் இருந்து சிலைகளை கொண்டு வந்து கட்டிய வரலாற்று சிறப்புக்குரியது தான் இந்த காலபைரவர் கோயில். இந்த வரலாறு, கோயிலில் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது. கோயில் கட்டிய பின்பு நடந்த போர்கள் அனைத்திலும் வெற்றிகளை குவித்துள்ளார் மன்னர் அதியமான். போருக்கு செல்லும் முன்பு, காலபைரவரின் காலடியில் வாளை வைத்து வணங்கி, பூஜை செய்து வழிபட்ட பின்பே மன்னர் புறப்படுவார். அதன் அடையாளமாகவே கோயிலில் வாள் வைக்கப்பட்டுள்ளது. மன்னருக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் காலபைரவர் குலதெய்வமாக விளங்கி உள்ளார். கோட்டையின் சாவி காலபைரவரின் கைகளில் தான் எப்போதும் இருக்கும்.1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த, இக்கோயிலில் 9 நவக்கிரக சக்கரங்கள் மேற்கூரையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக வந்தால் நவக்கிரக தோஷங்கள் விலகும்; ஜாதக தோஷங்கள் அகலும் என்பது ஐதீகம். காலபைரவர் கோயிலுக்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். அதிலும் அமாவாசை, அஷ்டமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, காலபைரவரை வழிபட்டுச் செல்கின்றனர். இங்கு நடக்கும் ராகுகால பூஜை மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பூஜையில் பங்கேற்று காலபைரவருக்கு பூசணி விளக்கேற்றினால் நினைத்த காரியம் அனைத்தும் கைகூடும் என்பது, பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

சங்கடங்கள் தீர்க்கும் சாம்பல் பூசணி விளக்கு

காலபைரவரை கும்பிட காலநேரம் கிடையாது. 24 மணிநேரமும் கோயிலில்  பூஜைகள் நடக்கும். ஏனென்றால் கால நேரத்தின் கடவுளே காலபைரவர் தான். படைத்தல், காத்தல், அழித்தல் என மும்மூர்த்திகளுக்கும் துணையாய் இருப்பவரும் இவரே. சைவம் மற்றும் வைணவம் இரண்டையும் சார்ந்தவர். பாம்பினை பூநூலாகவும், அரைஞான் கொடியாகவும் அணிந்தவர். நாம், நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமானால், சாம்பல் பூசணி விளக்கினை காலபைரவர் சன்னதியில் ஏற்றிவிட்டு கோயிலை 18 முறையோ அல்லது 8 முறையோ சுற்றி வர வேண்டும். இதனை 12 ஞாயிற்றுக்கிழமைகளிலும், 3 தேய்பிறை தினங்களிலும் கடைபிடித்தால், நினைத்த காரியம் அனைத்தும் எளிதில் நிறைவேறும் என்பது தலைமுறைகள் கடந்து, காலபைரவரை வழிபடும் பக்தர்களின் நம்பிக்கை.

Comments