செய்யூர் வட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

செய்யூர் வட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

மதுராந்தகத்தை அடுத்த செய்யூர் வருவாய்த் துறைக்கு உள்பட்ட கிராமங்களில் காலிப் பணியிடங்களுக்கு கிராம உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதால் அப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு செய்யூர் வட்டாட்சியர் புஷ்பலதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம உதவியாளர்கள் இல்லாத நிலை இருக்க வேண்டும் என்பதால் கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, மொத்த காலிப் பணியிடங்களில் 25 சதவீத பணியிடங்களை கருணை அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்களை நியமனம் செய்யவும், மீதமுள்ள காலிப் பணியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பகத்தின் மூலம் உரிய இன சுழற்சி அடிப்படையில் நிரப்பவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செய்யூர் வட்டத்தில் உள்ள 20 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 25 சதவீதம் கருணை அடிப்படையில் நிரப்ப 5 காலிப் பணியிடங்கள் போக, மற்ற 15 காலிப் பணியிடங்கள் உள்ள கிராமங்களின் விவரம்: ஆயக்குனம், நெற்குணம், தூதுவிளம்பட்டு, பூங்குணம், கோட்டைக்காடு, வேம்பனூர், முதலியார்குப்பம், செய்யூர் டி.இ.பிளாக், பெரிய வெளிக்காடு, புதுப்பட்டு, பவுஞ்சூர், மாணிக்குப்பம், நெடுமரம், மடையம்பாக்கம், பேரம்பாக்கம். இத்தகைய 15 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட வேலைவாய்ப்பகத்தின் மூலம் உரிய இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இந்த வேலைக்கான மனுவை அளிக்க விரும்புபவர்கள் விண்ணப்ப மனுவுடன், கல்வித் தகுதிக்கான ஆதாரங்கள், ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பகப் பணி மூப்பு அட்டை ஆகியவற்றுடன் இந்த விளம்பரம் கண்ட 15 நாள்களுக்குள் செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

Comments