சினிமா விமர்சனம்: தொடரி

சினிமா விமர்சனம்: தொடரி

கதாநாயகன்-கதாநாயகி: தனுஷ்-கீர்த்தி சுரேஷ்.

டைரக்‌ஷன்: பிரபு சாலமன்.

தயாரிப்பு: சத்யஜோதி பிலிம்ஸ்.

கதையின் கரு: ஓடும் ரெயிலில் நடக்கும் விபரீத சம்பவம்.

ஒரு அதிகாலை 7 மணிக்கு டெல்லி ரெயில் நிலையத்தில் கதை ஆரம்பிக்கிறது. டெல்லியில் இருந்து சென்னை புறப்படுகிறது, அந்த ரெயில். அதில் பயணம் செய்யும் நடிகை சிரிஷாவுக்கு 'சப்ளை' செய்வது யார்? என்று கேன்டீனில் வேலை செய்யும் தனுஷ், கருணாகரன், கேன்டீன் மானேஜர் தம்பி ராமய்யா ஆகிய மூன்று பேரும் போட்டி போடுவது போல் தமாசாக தொடங்குகிறது, படம். சிரிஷாவின் உதவியாளர் கீர்த்தி சுரேஷ் மீது தனுசுக்கு காதல். அதற்கு வில்லனாக ஹரிஷ் உத்தமன் என கதை மெதுவாக கடந்து போய்க்கொண்டிருக்கும்போது, இடைவேளைக்கு பத்து நிமிடங்களுக்கு முன், பதற்றம் பற்றிக் கொள்கிறது.

ரெயில் என்ஜின் டிரைவர் ஆர்.வி.உதயகுமாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு திடீர் மரணம் அடைய-ரெயில் அதிவேகம் பிடித்து எந்த ஸ்டேஷனிலும் நிற்காமல் ஓடுகிறது. ஓடிக்கொண்டிருக்கும் ரெயிலை நிறுத்த என்ன வழி? என்று அதிகாரிகள் கூடி, ஆலோசிக்கிறார்கள். ரெயில் நிறுத்தப்பட்டதா, பயணிகள் உயிர் தப்பினார்களா, தனுஷ்-கீர்த்தி சுரேஷ் காதல் என்ன ஆனது? என்பதற்கு விடை, இடைவேளைக்குப்பின் வரும் கதையில் இருக்கிறது.

கீர்த்தி சுரேசின் காதல், தம்பி ராமய்யாவுடன் காமெடி, ஹரிஷ் உத்தமனுடன் மோதல், ரெயில் கூரை மீது கொள்ளையர்களுடன் சண்டை, ஓடும் ரெயிலை நிறுத்த உயிர் பணயம் வைப்பது என படம் முழுக்க தனுசுக்கு நிறைய வேலைகள். இவருக்கும், கீர்த்தி சுரேசுக்குமான காதல், வசீகரிக்கிறது. ஹெலிகாப்டர் ஏணியில் தொங்கியபடி தனுஷ் ரெயிலை நிறுத்துவதற்கு செய்யும் சாகசம், சிலிர்க்க வைக்கிறது.

ஓடும் ரெயிலில் கூரை மீது நிற்கும் தனுசுக்கு இணையாக, என்ஜின் பக்கத்தில் நின்றபடி துணிச்சலாக நடித்து இருக்கிறார், கீர்த்தி சுரேஷ். படத்தில் அங்கங்கே கைதட்டல் வாங்குகிறார், ராதாரவி. இவருடைய யதார்த்தமான நடிப்பும், வசன உச்சரிப்பும் விருதுக்கு தகுதியானவை. கலகலப்புக்கு, தம்பி ராமய்யா. கேன்டீன் மானேஜராக, நடிகை சிரிஷாவுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள இவர் மேற்கொள்ளும் முயற்சிகளும், அதன் விளைவாக தீவிரவாதி என்ற முத்திரை குத்தப்பட்டு போலீசிடம் மாட்டிக்கொள்ளும் காட்சிகளும், ஆரவாரமான நகைச்சுவை.

பக்க வாத்தியங்களாக கருணாகரன், கும்கி அஸ்வின். வில்லனாக ஹரிஷ் உத்தமன். ரெயில் என்ஜின் டிரைவராக ஆர்.வி.உதயகுமார், அதிகாரிகளாக சின்னி ஜெயந்த், ஏ.வெங்கடேஷ், ரெயில்வே போலீஸ் அதிகாரியாக கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில், கச்சிதமாக பொருந்துகிறார்கள்.

பசுமை போர்த்திய மலைகளுக்கு இடையே வளைந்து நெளிந்து ரெயில் ஊர்ந்து செல்வது போன்ற காட்சிகளிலும், ரெயில் கூரை மீதான தனுஷ்-கீர்த்தி சுரேசின் காதல் காட்சிகளிலும், ஒளிப்பதிவாளர் வி.மகேந்திரனின் திறமை பளிச். டி.இமானின் பின்னணி இசை, காட்சிகளுக்கு கனம் சேர்க்கிறது. பாடல்களில் இமானின் இனிமையான ராகங்கள், மாயம்.

ஆரம்ப காட்சிகள், பார்த்து பழகிப்போன காமெடியுடன் ஈர்ப்பு இல்லாமல் நகர்கின்றன. அதன்பிறகு வட்டியும், முதலுமாக உச்சக்கட்ட வேகம் பிடிக்கிறது, படம். கதையிலும், காட்சிகளிலும் ஹாலிவுட் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறார், டைரக்டர் பிரபு சாலமன். ரெயில் தண்டவாளத்தில் நடக்கும் திடீர் விபத்து, என்ஜின் டிரைவர் ஆர்.வி.உதயகுமாருக்கும், உதவியாளர் போஸ் வெங்கட்டுக்கும் இடையே நடக்கும் வாய் தகராறு, உதயகுமாரின் மரணம், படுவேகத்தில் பாய்ந்து ஓடும் ரெயில், அதை நிறுத்துவதற்கான முயற்சிகள் என சூப்பர் வேகம் பிடிக்கிறது, பின்பகுதி கதை.

"அது வெள்ளக்காரன் கட்டின பாலம். இடிந்து விழாது. நம்ம ஆட்கள் கட்டியிருந்தால்..." என்று ராதாரவி பேசும் வசன வரிகளுக்கும், டி.வி. விவாத மேடை நிகழ்ச்சியில் அரசியல்வாதி அனுமோகனை, "ஏய் வெள்ளச்சட்டை நீ அடிக்கடி டி.வி.யில பேசிட்டே இருக்கியே..." என்று ஒரு பொது ஜனம் கிண்டலாக எச்சரிப்பது போன்ற வசனத்துக்கும் தியேட்டரில் அமோக வரவேற்பு.

No comments:

Post a Comment