சென்னையின் வயது இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டது

சென்னையின் வயது இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டது


பட்டரை பெரும்புதூர் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலத்து பொருட்கள்.சென்னை மாநகரத்தின் வரலாறு என்பது செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டதில் இருந்து மட்டுமே முறையாக எழுதப்பட்டிருக்கிறது.ஆனால் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் சில பகுதிகளை உள்ளடக்கிய இன்றைய சென்னை பெருநகரப் பகுதி பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டது.சமீபத்தில் பட்டரை பெரும்புதூரில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த வரலாற்றுச் சான்றுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. 'சென்னை வட்டாரத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல்' என்ற தலைப்பில் சென்னை எழும்பூர் தமிழ் வளர்ச்சி வளாகத்தில் ஐந்து நாட்கள் தொடர் கருத்தரங்கம் நேற்று தொடங்கியது.இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் முதன்மை செயலர் தா.கி.ராமசந்திரன் கலந்துகொண்டு பட்டரை பெரும்புதூர் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட தொல்லியல் ஆய்வாளர்களைப் பாராட்டினார். 'வரலாறு, தொல்லியல், அருங்காட்சியகம், இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலா ஆகிய ஐந்து துறைகளும் இணைந்து செயல்படும் சூழல் உருவாகியுள்ளது. பாரம்பரியச் சின்னங்களை பாதுகாப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவிகரமானது' என்று அவர் தெரிவித்தார்.

தொல்லியல் துறை ஆணையர் டி.ஜகந்நாதன் பேசும்போது 'சென்னையில் நூறு ஆண்டுகளைக் கடந்த கட்டிடங்களைப் பார்த்தாலே வியப்பு ஏற்படுகிறது. ஆனால் இந்த நகரத்திற்கு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு இருக்கிறது. அதற்கான சான்றுகள் தற்போது கிடைத்திருக்கின்றன. அடையாறு, கூவம், கொற்றலையாறு ஆகிய நதிகளின் ஆற்றங்கரைகளில் மிகச்சிறந்த நாகரிகம் இருந்திருக்கிறது. அதை எடுத்துக்காட்டும் வகையில் தற்போது பட்டரை பெரும்புதூரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் அமைந்துள்ளன' என்று கூறினார்.

ஐந்து நாட்கள் கருத்தரங்கத்தின் முதல்நாளான நேற்று பட்டரை பெரும்புதூர் அகழ்வாராய்ச்சி பற்றி ஜெ.பாஸ்கர் உரையாற்றினார். 'தமிழக அரசு வழங்கிய பத்து லட்சம் ரூபாயில் இந்த அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த தொகையில் ஐந்தரை லட்சம் ரூபாய் ஆராய்ச்சிக்கான உபகரணங்கள் வாங்குவதற்கே செலவாகிவிட்டது. மிச்சமிருந்த நான்கரை லட்சம் ரூபாயில் மிகவும் சிக்கனமாக திட்டமிடப்பட்டு இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது' என்றார் அவர்.

'மனிதன் தன்னுடைய அன்றாட வாழ்க்கையை செம்மைப்படுத்தும் வகையில் சில கருவிகளை பயன்படுத்துகிறான். காலங்கள் கடந்தபிறகு அவன் பயன் படுத்திய அந்த கருவிகளே அவனுடைய காலகட்டத்தை அறிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கிறது.

தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை இதுவரையில் 39 இடங்களில் அகழ்வாராய்ச்சிகளை நடத்தியுள்ளது. அவற்றில் பட்டரை பெரும்புதூர் அகழ்வாராய்ச்சி முக்கியமானது. இந்த ஊர் திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையிலிருந்து திருத்தணி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சென்னையின் மூன்று முக்கிய நதிகளில் ஒன்றான கொற்றலையாற்றின் கரையில் இந்த ஊர் இருக்கிறது. இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் சுடப்பட்ட மண்பாண்டங்களைக் கொண்டு உறைகிணறுகள் கட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவற்றை ஆதாரமாகக் கொண்டு இன்றைய சென்னையின் பெருநகரப் பகுதியில் சங்ககால மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற முடிவு செய்யலாம். மேலும் அங்கு புதிய கற்காலத்தைச் சேர்ந்த பல்வேறு பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ் பிராமி எழுத்துகளைக் கொண்ட மட்பாண்டங்கள், துளையிடப்பட்ட குடுவைகள், கிண்ணங்கள் ஆகியவை கிடைத்துள்ளன. தென்னிந்திய வரலாற்றைப் பொறுத்தவரை வடநாட்டைப் போல மத்திய கற்காலத்தில் வெண்கலம் பயன்படுத்தப்படவில்லை என்ற ஒரு கருத்து நிலவிவருகிறது. ஆனால் தென்னிந்தியாவிலும் வெண்கலம் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகளை திரட்டமுடியும் என்ற நம்பிக்கையை இந்த அகழ்வாராய்ச்சி உருவாக்கியிருக்கிறது' என்றார் ஜெ.பாஸ்கர்.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையும் 'சென்னை 2000 பிளஸ்' என்ற அமைப்பும் இணைந்து இந்த ஐந்து நாட்கள் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளன. சென்னை எழும்பூரில் உள்ள தமிழ் வளர்ச்சி வளாகத்தில் 24-ந் தேதி வரையில் தினந்தோறும் மாலை 3 மணிக்கு கருத்தரங்கம் நடைபெறுகிறது. இனிவரும் நாட்களில் சென்னை மாநகர கல்வெட்டுக்கள், கொற்றலையாறு, கூவம், அடையாறு ஆகிய ஆற்றங்கரை நாகரிகங்களைப் பற்றிய சொற்பொழிவுகள் தொடர்ந்து நடைபெற உள்ளன.

Comments